×

ஸ்ரீதிவ்யா ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

மனசாரா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகியாக களமிறங்கியவர் ஸ்ரீதிவ்யா. இத்திரைப்படத்தின் மூலம், தமிழில் 2013 இல் வெளிவந்த வருத்தப்படாத வலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயேனுக்கு ஜோடியாக அறிமுகமானார். இதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார் இவர். அதைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் ஜீவா, விக்ரம் பிரபுவுடன் வெள்ளக்கார துறை, இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் காக்கி சட்டை, கார்த்தியுடன் காஷ்மோரா, ஜீவாவுடன் சங்கிலி புங்கிலி கதவ திற போன்ற படங்களில் நடித்தார். அதன்பின் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் விக்ரம் பிரபு நடித்த ரெய்டு படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது, அதர்வாவுடன் ஒத்தைக்கு ஒத்தை, விஷ்ணுவிஷாலுடன் வீரதீரசூரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஸ்ரீதிவ்யா தனது பிட்னெஸ் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை.

ஓர்க்கவுட்ஸ்

நான் சிறுவயது முதலே திரைத்துறையில் இருப்பதால், அப்போதிலிருந்தே தினசரி யோகா, உடற்பயிற்சி எல்லாம் ரெகுலராக செய்து வருகிறேன். காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிடும் பழக்கம் உடையவள் நான். முதலில் யோகாவுடன் எனது வொர்க்கவுட்ஸ் தொடங்கும். பின்னர், நடைப்பயிற்சி அரைமணி நேரம் செய்வேன். அதன்பின்னர், ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அரை மணி நேரம். பின்னர், ஸ்டேமினாவை அதிகரிக்கும் வகையில் பைலேட்ஸ் பயிற்சிகள் செய்வேன். பின்னர், புஷ்- அப், புல் – அப், க்ரஞ்சஸ் மற்றும் ஸ்குவாட் பயிற்சிகளும் செய்வேன். இவையெல்லாம் எனது தினசரி உடற் பயிற்சிகளாகும். பின்னர், கால்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு மணி நேரம் டான்ஸ் பயிற்சிகள் செய்வேன். இவைதான் எனது வொர்க்கவுட் ரகசியங்கள்.

டயட்

என்னை பொருத்தவரை, டயட்டில் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. வெஜிடேரியன், நான்வெஜிடேரியன் என எல்லாமே சாப்பிடுவேன். அதேசமயம், காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மிகவும் முக்கியமானது. அதுதான் அன்றைய நாள் முழுவதுக்கும் நமக்கு தேவையான எணர்ஜியை கொடுக்கும்.. அதனால், எனது உணவியல் நிபுணர் ஆலோசனைப்படி, காலை உணவில் சரியான அளவு புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இருக்கும்படி பார்த்து கொள்கிறேன். வெஜிடேரியனைப் பொருத்தவரை, வீட்டில் என்ன காய்கறி செய்தாலும், அதோடு பருப்பு சேர்த்துச் சாப்பிடும் பழக்கம் எனக்கு உண்டு.

அசைவத்தைப் பொருத்தவரை எல்லாமே பிடிக்கும். குறிப்பாக, பன்னீர் சிக்கனும், ஹைதராபாத் பிரியாணியும் எனது பேவரேட் டிஷ். ஆனால், குளிர்பானங்கள் அருந்துவது, அதிகமாக இனிப்புகள் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவேன். மற்றபடி எந்த டயட்டும் ஃபலோ பண்ணுவது இல்லை. எல்லாமே சாப்பிடுவேன். இது தவிர, தினசரி நிறைய தண்ணீர் குடிப்பேன். பழங்கள் அதிகமாக சாப்பிடுவேன்.

பொதுவாக, ஒருநாளைக்கு தேவையான அளவு தண்ணீரும், பழங்களும் சாப்பிட்டாலே போதும். ஒருவரது உடல் ஆரோக்கியமாக இருக்கும். இரவு உணவை எப்போதுமே சீக்கிரமாகச் சாப்பிட்டுவிடுவேன். அதுபோல எவ்வளவுதான் பிடித்த உணவாக இருந்தாலும், அளவோடுதான் சாப்பிடுவேன். அப்படியே சற்று அதிகமாக சாப்பிட்டுவிட்டாலும், மறுநாள் சிலமணி நேரம் கூடுதலாக ஓர்க்கவுட் செய்து சமன் செய்துவிடுவேன்.

பியூட்டி

பொதுவாக, ஒவ்வொருவரின் அழகும் அவரது சரும பளபளப்பை வைத்தே கணக்கிடப்படுகிறது. எனவே, சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொண்டாலே, அழகாகவும், உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கவும் முடியும். எனவே, ஷூட்டில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரும பராமரிப்புக்காக எனது தினசரி ரொட்டீன்னில் CTM எனக் கூறப்படும் கிளென்சிங், டோனிங், மாய்ஸ்சுரைசிங்கை தவறாமல் கடைபிடிப்பேன்.

மேலும், எனது ஸ்கின்கேருக்காக, எப்போதும், ஆர்கானிக் ஸ்கின்கேர் தயாரிப்புகளையே பயன்படுத்துகிறேன். கெமிக்கல் புராடக்ஸ்களை முடிந்த வரை தவிர்த்து விடுவேன். அதுபோன்று, மேக்கப் போடும் பொழுது முடிந்த வரை ஃபவுண்டேஷனை குறைந்த அளவே பயன்படுத்துவேன். ஏனென்றால் ஃபவுண்டேஷன் ஹெவி கவரேஜ் கொடுப்பதனால் சருமத்தின் துளைகளை அடைத்துக் கொள்ளும். அதனால் முடிந்த வரையில் ஃபவுண்டேஷனுக்கு பதில் கவரேஜுக்காக பிபி கிரீம் உபயோகிப்பேன்.

அதுபோல, ஷூட்டிங் இல்லாத சமயத்தில் மேக்கப்பை தவிர்த்து விட்டு, மிகவும் சிம்பிளான லுக்கில் தான் வீட்டில் இருப்பேன். அதுபோன்று, எவ்வளவு தான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் சரி, ஷூட்டிங் லேட் நைட் முடிந்தாலும் சரி, இரவு படுக்கச் செல்லும் முன்பு எனது மேக்கப்பை ரிமூவ் செய்துவிட்டுதான் தூங்குவேன். அதுபோல தலைமுடியை பராமரிக்க, தினசரி, தேங்காய் எண்ணெய்யை வைத்து குளிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. இவைதான் எனது பிட்னஸ் சிக்ரெட்ஸ்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post ஸ்ரீதிவ்யா ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்! appeared first on Dinakaran.

Tags : Sridivya ,Sivakarthikeyan ,
× RELATED குரங்கு பெடல் வெளியிடும் சிவகார்த்திகேயன்