×

இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களுடன் கார்கே பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணியில் முக்கிய பதவிகள் குறித்தும் அனைத்து கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் கார்கே நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வேகம் எடுத்து உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீட்டை முடிக்க காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக ஆம்ஆத்மி, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் கார்கே நேற்று இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களையும் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தொகுதி பங்கீடு மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய பதவிகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: இந்தியா கூட்டணியில் அனைத்து கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவு படுத்தப்பட்டுள்ளது. கூட்டணியில் நெருக்கமான ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனைத்து இந்தியா கூட்டணி தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்தியா கூட்டணியின் அலுவலகம் மற்றும் செய்தித் தொடர்பாளர், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. கூட்டணியில் நெருக்கமான ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கான கட்டமைப்பை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து கார்கே, இந்தியா கூட்டணியின் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உட்பட அனைத்து தலைவர்களுடனும் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* மம்தா, நிதிஷ்குமாருடன் ஓரிரு நாளில் பேச்சுவார்த்தை
ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும், பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு குறித்து ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை நடைபெறும். தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணி தலைவர்களிடையே தெளிவு உள்ளது. அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் இடமளிக்க காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளது’ என்றார்.

* ஆம்ஆத்மி, சமாஜ்வாடியுடன் நாளை தொகுதி பங்கீடு?
மகாராஷ்டிராவிலும், உத்தரபிரதேசத்திலும் தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதே போல் ஆம்ஆத்மி கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்கள் தவிர, அரியானா, கோவா, குஜராத் மாநிலத்திலும் ஆம்ஆத்மி கட்சி தொகுதி ஒதுக்க கோரிக்கை வைத்தது. இதுகுறித்து நாளை மீண்டும் இருகட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் உபி தொகுதி பங்கீடு குறித்து சமாஜ்வாடி கட்சியுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் தொகுதி பங்கீடு குறித்து ஜனவரி 14 மற்றும் 15ம் தேதிகளில் சோனியாவை சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் சந்தித்து இறுதி செய்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களுடன் கார்கே பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Gharke ,All India Alliance ,New Delhi ,Congress ,Kharge ,India ,BJP ,Karke ,India Alliance ,Dinakaran ,
× RELATED காங். தேர்தல் அறிக்கை குறித்து...