×

ஒரு கரும்புக்கு ரூ.33 தரும் தமிழ்நாடு அரசு; விவசாயிகளுக்கு தித்திக்கும் பொங்கல்: 2 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இடைத்தரகர்கள் இன்றி நேரடி கொள்முதல்

சிறப்பு செய்தி
பொங்கல் என்றாலே தித்திக்கும் செங்கரும்புதான்… ஆனால் கரும்பை விளைவிக்கும் விவசாயிகளுக்கு தான் பெரும்பாலும் தித்திக்கும் பொங்கலாக அமைவதில்லை. காரணம், இயற்கை பேரிடரால் அழியும் பயிர்கள் அல்லது இடைத்தரகர் மூலம் நடக்கும் கொள்முதலால் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளிட்ட பல காரணங்களால் பெரும்பாலும் நஷ்டத்திலேயே கரும்பு விவசாயிகள் காலத்தை கடத்தி வருகின்றனர். அதேவேளையில் செங்கரும்பின் தேவை குறைவு என்பதால் குறைந்த பரப்பில் தான் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு இடம் பெற்ற பிறகு ஆண்டுதோறும் செங்கரும்பு சாகுபடி இரு மடங்கு உயர்ந்து வருகிறது. கடந்த காலங்களில் கரும்புகள் துண்டுகளாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழக அரசு அறிவித்து உள்ளபொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு இடம் பெற்றிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டி விதிமுறைகளை பின்பற்றி வேளாண்துறை அலுவலர்கள் கரும்பின் உயரம் (6 அடி) மற்றும் பூச்சி, நோய் தாக்குதலுக்கு ஆளாகாத கரும்புகளை தரம் பார்த்து மதிப்பீடு செய்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யும் பணியை தமிழகம் முழுவதும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள் மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் இணைந்து இந்த கொள்முதல் பணியை மேற்கொண்டுள்ளனர். கரும்பு அறுவடை செய்யும் மாவட்டங்களில் கூட்டுறவு சங்க அதிகாரிகள், கரும்புகளை கொள்முதல் செய்து 10 எண்ணிக்கை கொண்ட கட்டுகளாக கட்டி அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைத்து அங்கிருந்து லாரிகளில் ஏற்றி ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வருகின்றனர். இதில் விவசாயிகள் கரும்பை தங்கள் செலவில் வெட்டி கொடுக்க வேண்டும்.

பின்னர் கரும்புகளுக்கு முன் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அரசு நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் கரும்பு கொள்முதலுக்குரிய தொகை வரவு வைக்கப்படும். கரும்பு கொல்லையிலிருந்து கரும்பு ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி, லாரி வாடகை மற்றும் அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு விநியோகம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 அடி உள்ள ஒரு கரும்பு ரூ.33க்கு அரசு சார்பில் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. வெட்டுக்கூலி, ஏற்றுக்கூலி ஆகியவை கழித்து விவசாயிகளுக்கு ரூ. 22 கிடைக்கிறது. அரசே கொள்முதல் செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு அலைச்சல் மற்றும் பாரம் குறைந்துள்ளது. இதனால் கரும்புகளை பயிரிட விவாசயிகளிடம் ஆர்வம் அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரகளுக்கு பொங்கல் பரிசுத்தொகை மற்றும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு நேற்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நாகப்பட்டினத்தில் 2,16,725 கரும்புகள், மயிலாடுதுறையில் 5,55,000 கரும்புகள், திருவாரூரில் 3,90,000 கரும்புகள், தஞ்சாவூரில் 6,10,595 கரும்புகள், கரூரில் 2,86,000 கரும்புகள், பெரம்பலூர் 1,72,502 கரும்புகள், அரியலூரில் 2,47,523 கரும்புகள், புதுக்கோட்டையில் 4,40,619 கரும்புகள், திருச்சியில் 8,27,000 கரும்புகள் என மொத்தம் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் 37,45,964 கரும்புகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இதேபோல் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட சுமார் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பன்னீர் கரும்புகள் அரசு கொள்முதல் செய்து உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 17.65 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ரூ.5.82 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே பூலாம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து கொள்முதல் செய்யப்படும் கரும்புகள் சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக ஈரோடு, சேலம், கோவை, நீலகிரி, கரூர், திருப்பூர், தர்மபுரி உள்ளிட்ட தேவையான 30 லட்சம் கரும்பு கொள்முதல் செய்து, அந்தந்த மாவட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் மதுரை மாவட்டத்தில் மேலூர், மதுரை கிழக்கு மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட பல லட்சம் கரும்புகளை கூட்டுறவு மற்றும் வேளாண் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு கொள்முதல் செய்து வருகின்றனர். இடைத்தரகர் இன்றி நேரடி கொள்முதல் விவசாயிகளுக்கு நஷ்டம் இல்லாமல் எதிர்ப்பார்த்த லாபம் கிடைப்பதால் அவர்களுக்கு தித்திக்கும் பொங்கலாக மாறி உள்ளது. தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் நடவடிக்கைக்கு விவசாய சங்கங்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளன.

300 கரும்புக்கு ரூ.5,800 லாபம்
மேலூர் கூத்தப்பன்பட்டி கரும்பு விவசாயி ஆனந்தன் கூறுகையில், ‘‘ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை செலவு செய்து கரும்பு விவசாயம் செய்கிறோம். பொங்கல் நேரத்தில் கரும்புகளை எப்படி விற்பனை செய்வது என்ற குழப்பத்தில் பெரும்பாலான விவசாயிகள் இருப்பதால், வியாபாரிகளிடம் முதலிலேயே விற்பனை செய்து விடுகின்றனர். வியாபாரிகள் கூறும் விலை தான் விவசாயிகளுக்கு கிடைக்கும். 300 கரும்புகளை எங்களிடம் வியாபாரி ரூ.4,100க்கு கொள்முதல் செய்துள்ளார். இதில் 600 கரும்புகள் வரை வியாபாரிக்கு இலவசமாக வேறு கொடுக்க வேண்டும். அதை அந்நபர் வேறு ஒரு பெரும் வியாபாரியிடம் ரூ.7,500க்கு மாற்றி விடுவார். ஆனால் தமிழக அரசு ஒரு கரும்புக்கு ரூ.33 விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்த கணக்குப்படி பார்த்தால் 300 கரும்பிற்கு ரூ.9,900 விலை கிடைக்கும். அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது’’ என்றார்.

The post ஒரு கரும்புக்கு ரூ.33 தரும் தமிழ்நாடு அரசு; விவசாயிகளுக்கு தித்திக்கும் பொங்கல்: 2 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இடைத்தரகர்கள் இன்றி நேரடி கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Pongal ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு திரைப்பட கல்லூரியில்...