×

ராம பக்தன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அனுமனுடைய அவதாரம் பல வகையிலும் சிறப்புடையது. அவர் அவதரித்தது மூல நட்சத்திரத்தில், அமைந்த ராசி தனுசு. குருவுக்குரிய ராசி. எனவே அவன் ஞானகுருவாக ராமாயணத்தில் செயல்பட்டார். சகல ஞானங்களையும் தரக் கூடிய வராக அனுமன் விளங்குகின்றார். அவர் அவதரித்த மூல நட்சத்திரம் கேதுவுக்கு உரிய நட்சத்திரம். கேது ஞானகாரகன் என்று பெயர் பெற்றவர். எனவே, அனுமனை வணங்குவதன் மூலமாக மெய்ஞ்ஞானத்தை பெறலாம்.

அவர் அவதரித்த மாதம் மார்கழி மாதம். திருப்பாவை மாதம். கண்ணன் விரும்பிய மாதம். கீதையில், மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று சொன்ன மாதம். அந்த மாதத்தில் அனுமன் அவதாரம் நிகழ்ந்தது. மூன்றாவது சிறப்பு அவர் அவதரித்த நாள் அமாவாசை. சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணைகின்ற நாள்.

முன்னோர்களுக்கு உரிய நாள். இப்பொழுதும் ராமேஸ்வரத்தில், அமாவாசையன்று முன்னோர்களுக்கான முறையான கடன்களைச் செய்துவிட்டு முகப்பில் உள்ள ஆஞ்சநேயரை தரிசித்த பின்னர்தான் நாம் ராமநாதசுவாமியை தரிசிக்கச் செல்ல வேண்டும். அதைப் போலவே சேதுக்கரையில் நீர் கடன்களை ஆற்றிவிட்டு, கடலை நோக்கி வணங் குகின்ற அனுமனை தரிசித்து விட்டுத்தான், நாம் மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டும்.

வெள்ளைப் பூக்களா? சிவப்புப் பூக்களா?

கபீர்தாசர் ராமாயணத்தை எழுத, அதை ஒரு வயதானவர் உருவத்தில் வந்து அனுமன் அங்கீகரிப்பாராம். அசோகவனத்தை வர்ணிக்கும் கட்டம் வந்தது. கபீர்தாசர் அங்கே இருக்கிற பூக்களெல்லாம் வெண்மையான பூக்களாக இருந்தன என்று வர்ணித்தார்.

உடனே ஆஞ்சநேயருக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘உண்மைக்கு மாறாக எழுதுகிறீர்களே” என்று கேட்டாராம். ‘‘என்ன உண்மைக்கு மாறாக எழுதிவிட்டேன்? என் உள்ளுணர்வில் பகவானே காட்சியை காட்ட நான் எழுதுகிறேன்” என்று சொல்ல, ‘‘இல்லை. இது தவறு. அசோகவனத்தில் நான் இருந்ததனால் சொல்கிறேன். சிவப்பான பூக்கள் தான் இருந்தன. வெண்மை யான பூக்களை நான் அங்கே பார்க்கவில்லை” என்று சொல்ல விவாதம் வந்து விட்டது. ராமாயணம் நின்று விட்டது.

இந்த விஷயம் ராமர் இடத்திலேயே சென்றதாம். ராமர் சொன்னாராம். ‘‘கபீர்தாசர் சொன்னதுதான் சரி. அசோகவனத்தில் வெண்மையான பூக்கள் தான் இருந்தன.” என்று சொல்ல, அனுமன், ‘‘என்ன பிரபு! நீங்களும் அவரோடு சேர்ந்து விட்டீர்கள். பார்த்த நான் இருக்கிறேன். அப்படியானால் நான் பார்த்தது தவறா? நான் பொய் சொல்கிறேனா?” என்று அனுமன் கேட்க, ராமர் சமாதானப்படுத்தினார்.

‘‘அப்பா, அனுமனே. உன் வாக்கு பொய்யாகுமா? உன்னிடத்தில் ஒரு குறையும் இல்லை. ஆனால் அங்கே இருந்தது வெண்மையான பூக்கள் தான். ஆனால் உன்னுடைய கண்களுக்கு அது சிவப்பாகத் தான் தெரிந்திருந்தன. காரணம் என்ன என்று சொன்னால், “சீதையை அபகரித்து இப்படி பாபம் செய்தானே ராவணன்” என்ற கோபம் உனக்கு வந்தது. அந்த கோபத்தினால் உன்னுடைய விழிகள் சிவந்தன. உன்னுடைய சிவந்த விழிகள் மூலமாக, வெண்பூக்களை பார்த்தபோது உனக்கு சிவப்பாகத் தெரிந்ததே தவிர, உண்மையில் அவை வெள்ளைப் பூக்களே” என்று சொல்ல அனுமன் சமாதானம் அடைந்தார்.

வைகுண்டம் வேண்டாம்

பகவானின் பக்தர்களில் மிகுந்த உயர்ந்த நிலையில் ராம நாமத்தையே தியானித்துக் கொண்டு இருப்பவர் ஸ்ரீஅனுமான். ‘‘புற்பா முதல் புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே’’ என்று சொல்லும்படியாக சர அசரங்களோடு தன்னுடைய திருவடி ஜோதியான வைகுண்டத்திற்கு, ராம அவதாரத்தை முடித்துக் கொண்டு போகும்போது அனுமனை அழைத்தாராம்.

அவரிடம் அனுமன் ஒரு கேள்வி கேட்டாராம். ‘‘பிரபு, நீங்கள் அங்கே எப்படி இருப்பீர்கள்? இதே ராமனாகத் தான் இருப்பீர்களா?”‘‘அதெப்படி முடியும்?இந்த அவதாரம் முடிந்து விட்டது.அங்கே வைகுண்டபதியாக, “திருமகளும் மண்மகளும் இருபாலும் திகழ, நலம் அந்தம் இல்லதோர் நாட்டில் இருப்பேன்” என்று சொல்ல,” அப்படியானால் அந்த இடம் எனக்குத் தேவையில்லை. நான் என்னுடைய ராமனையெண்ணி ராம நாமம்ஜெபித்துக் கொண்டு இங்கேயேஇருக்கிறேன்” என்று சொன்னாராம்.

இன்றைக்கும் ராம நாம ஜெபமோ, ராமாயண பாராயணமோ நடைபெறும் இடத்தில் ஏதோ ஒரு விதத்தில் ஆஞ்சநேயர் வந்து அமர்வார். எனவே ராமாயணம் சொல்பவர்கள் அவருக்கு ஒரு ஆசனமிட்டு மரியாதையைச் செய்வார்கள். இது மரபு. அனுமன் சாலிசா துளசி ராமாயணம் ஸ்ரீஅனுமனுடைய பெருமையை கூறுகிறது. துளசி தாஸரின் அனுமன் சாலிசாவை இந்தியா முழுவதும் பக்தர்கள் பாராயணம் செய்து அளவற்ற பலனை அடைகிறார்கள்.

அனுமனை போற்றும் வகையில் பக்தி பரவசத்தோடு அவருக்காக பாடப்பட்ட 40 பாடல்களையே நாம் அனுமன் சாலிசா என்கிறோம். இந்த பாடல்கள் அனைத்தும் அவாதி என்னும் மொழியில் துளசிதாசரால் பாடப்பட்டவை ஆகும். ராம சரிதமனசாவை விட இந்த பாடல்கள் சிறப்பானவை என்று கூறப்படுகிறது. அனுமன் சாலிசா பாடல்கள் உருவானதற்கு அற்புதமான வரலாறும் உள்ளது. டெல்லியை முகலாயர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். ஒரு முறை துளசிதாசர் ராமாயண கதையை மன்னரிடம் கூறினார். கதையில் உருகிய மன்னன் ராம தரிசனம் கிடைக்க வழி செய்யும்படி கேட்டார். அதற்கு துளசிதாசர், உண்மையான பக்தியை வெளிப்படுத்தினால் ராமதரிசனம் கிடைக்கும் என்று கூறினார்.

மன்னன் துளசிதாசரை எப்படியாவது ஏற்பாடு செய் என வற்புறுத்தினான். மன்னரின் கோரிக்கையை நிறைவேற்றாத துளசிதாசரை சிறையில் இட்டான். சிறையில் இருந்தபடியே துளிசிதாசர் அனுமன் சாலிசா என்னும் இந்த 40 பாடலையும் எழுதி அதை ஜபிக்க துவங்கினார். உடனே டெல்லி நகரம் முழுக்க குரங்குகள் சூழ்ந்தன. மக்களாலும் மன்னனாலும் குரங்குகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சிறையில் இருக்கும் துளசிதாசரிடம் இது குறித்து தெரிவிக்க, துளசிதாசர் சொன்னார்.

இது வானரப் படைகளின் ஒரு சிறு பகுதிதான். படை முழுவதும் வந்த பிறகு ராமன் வருவார் உமக்கு தரிசனம் தருவார் என்றார். இதை கேட்டு அதிர்ந்த மன்னன் தன் தவறினை உணர்ந்து துளசிதாசரை விடுவித்தான். உடனே குரங்குகள் அனைத்தும் அங்கிருந்து சென்றன.இந்த அனுமன் சாலீஸா மந்திரத்தை பாராயணம் செய்யும் முன் நீராடி, தூய ஆடையை உடுத்திக் கொண்டு மாருதியை மனதார நினைத்துக் கொண்டு தியானிக்க வேண்டும். பின்னர் நெய் விளக்கேற்றிநிதானமாக படித்து அனுமன் பாதங்களில் மலர்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஹனுமான் துதிகள் பல இருக்கின்றன.

ஸ்ரீஅனுமத் புஜங்கம் என்பது மிகுந்த பிரபலம் உடையது.யாரெல்லாம் எதையெல்லாம் கேட்கிறார்களோ அவற்றை எல்லாம் உடனடியாக தருவது. ஸ்ரீஆதிசங்கரர் அனுமனைக் குறித்து அருளிய ஸ்ரீஅனுமத் பஞ்சரத்னம் அற்புதமானது.

சொல்லின் செல்வன்

முதன் முதலாக அவர் சுக்ரீவனின் சார்பாக ஸ்ரீராமரிடத்திலே ஒரு சன்னியாசியின் வேஷத்தில் சென்று மிக நைச்சியமாக பேசி தன்னுடைய தலைவனாகிய சுக்ரீவனுக்கும் ராமனுக்கும் நட்புறவை ஏற்படுத்துகிறார். அனுமன் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அழகு அருமையிலும் அருமை. எதிரில் உள்ளவர்களை முதலில் புகழ்ந்து தன்னை எளியவனாக அறிமுகம் செய்துகொள்ள வேண்டும்.

மஞ்சு எனத் திரண்ட கோல
மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி,
நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண!
யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்;
நாமமும் அனுமன் என்பேன்;

ஒரு குரு என்கிற நிலையில் அங்கே அவர் செயல்படுகிறார். இதனால் சுக்ரீவனுடைய அச்சம் நீங்குகிறது. ராமருக்கும் துணை கிடைத்த மகிழ்ச்சி உண்டாகிறது. சுக்ரீவனுடைய பட்டாபிஷேகமும் உறுதியாகிறது. ஒரே சந்திப்பில் இத்தனை காரியமும் செய்கிறார் அனுமன்.

அனுமனுக்கு “சொல்லின் செல்வன்” என்கின்ற விருது உண்டு. இந்த விருதை அளித்தவர் சாட்சாத் ராமபிரானே. அதற்கு முன் அவர் அனுமனைப் பார்த்தது கிடையாது. அவருடைய பிரபாவங்கள் எதுவுமே ராமருக்கு தெரியாது. ஆனால், அனுமன் முதன் முதலாக ராமரையும் லட்சுமணனையும் சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த சில வார்த்தைகளிலேயே, இவன் சகல வேதங்களும் படித்தவன். சர்வ வியாகரண பண்டிதன். மிகச் சிறந்த அறிவாளி என்பதை புரிந்து கொண்டார்.

தம்பியான இலக்குவனிடம் கேட்கிறார்.
இல்லாத உலகத்து எங்கும்
ஈங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும், வேதக்
கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே?
யார்கொல் இச்சொல்லின் செல்வன்?
வில் ஆர் தோள் இளைய! வீர!
விரிஞ்சனோ? விடை வலான் ஓ?

ஒருவர் எப்படி பேச வேண்டும், எந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும், எப்படி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். எப்படி பேசினால் நாம் காரிய சித்தி பெற்று விடலாம் என்பதற்கு உதாரணம் தான் அவருடைய பேச்சு.

தொகுப்பு: அனந்தபத்மநாபன்

The post ராம பக்தன் appeared first on Dinakaran.

Tags : Rama ,Hanuman ,
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்