×

சுங்கம் பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்

 

கோவை, ஜன. 10: கோவை திருச்சி சாலை சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதுடன் தரையில் அமர்ந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டம், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை (தொமுச) தவிர மற்ற போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் பல்வேறு இடங்களில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு குவிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் பஸ்களை இயக்க விடாமல் தடுக்க முயற்சி செய்தனர். இந்நிலையில், கோவை திருச்சி சாலை சுங்கம் பகுதியிலுள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக அண்ணா தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் சிஐடியு தொழிற்சங்க கூட்டமைப்பினர் இணைந்து கோஷங்களை எழுப்பி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசை கண்டித்தும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் வலியுறுத்தி பணிமனை முன்பாகவே சட்டையை கழட்டி அரை நிர்வாண கோலத்தில் தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பணிமனையின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என கூறியபோதும் அதனை ஏற்காத தொழிற்சங்கத்தினர் அதே பகுதியில் அரைமணி நேரத்திற்கும் மேலாக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

The post சுங்கம் பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Transport unions ,Coimbatore ,Coimbatore Trichy Road Customs Government Transport Corporation ,transport union confederates ,unions ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்