×

ஆலயங்களில் நூலகங்களும் ஆவணக் காப்பகங்களும்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

காகிதங்களில் அச்சிடப்பெற்ற நூல்களிலிருந்து மாற்றம் பெற்று ஒரு சிறிய கருவியின் வாயிலாகப் (மின் புத்தகம் E-book) பல்லாயிரக்கணக்கான நூல்களை தான் இருக்கும் இடத்திலிருந்தே படிக்கக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்தாலும், பழைய ஏட்டுச் சுவடிகளின் சேகரிப்புகளால்திகழும் பழம் நூலகங்களும், அச்சு நூல்கள் அடங்கிய நூலகங்களும்தாம் ஒரு நாட்டின் மேன்மையை உலகுக்கு எடுத்துக் காட்டும் அறிவுக் கருவூலங்களாக விளங்குகின்றன. நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பண்டு திருக்கோயில்களின் ஒரு அங்கமாக நூலகங்கள் திகழ்ந்தன என்பதை கல்வெட்டுச் சாசனங்கள் எடுத்துரைக்கின்றன. நூலகங்கள் தெய்வமுறையும் இடமாகப் போற்றப்பெற்ற ஒரு பண்பாட்டு வெளிப்பாடுதான் அவை.

தொன்றுதொட்டு தமிழகத்தில் ஆவணங்களையும் நூல்களையும் பனை ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைப்பகுதி வரை இம்மரபு தொடர்ந்தது. ஓலைகள் பதப்படுத்தப்பெறும்போது ஒரு சில நூற்றாண்டுகள் வரை நல்ல நிலையில் இருக்கும். பின்பு பல்வேறு காரணிகளால் அழிவுறும். அதனால்தான் முக்கிய ஆவணங்களையும் சாசனங்களையும் ஓலையில் எழுதும்போது கல்லிலும் செம்பிலும் எழுதும் மரபினை நம் முன்னோர்கள் மேற்கொண்டனர். அரசனின் ஆணைகளை ஓலையில் எழுதும் அலுவலனை திருமந்திர ஓலை என்றும் ஓலை எழுத்து என்றும் அழைத்தனர். அவர்கள் எழுதும் ஆவணங்களை மேற்பார்வை இடும் உயர் அலுவலர் திருமந்திர ஓலைநாயகன் என்று அழைக்கப் பெற்றார்.

ஓலைவாரியன் என்ற அலுவலர் அரசு ஆவணங்களைத் தக்க இடத்தில் வைத்துப் போற்றுபவராவார். முக்கிய ஆவணங்களையும், நூல்களையும் பல பிரதிகள் எடுத்து ஆவணப் பண்டாரங்களிலும் நூலகங்களிலும் வைத்து பேணிக் காத்தனர். ஏட்டுச் சுவடிகளாகிய நூல்களைத் தெய்வ நிலையில் வைத்துப் போற்றினர் என்பதற்கு கலைமகள், ஆலமர்ச்செல்வர் (தட்சிணாமூர்த்தி), பிரம்மன், மணிவாசகர் போன்ற திருவுருவங்களே சிறந்த சான்றுகளாக உள்ளன. மேற்குறித்த தெய்வ உருவங்களின் திருக்கரங் களில் பனை ஓலைச்சுவடிகளாகிய நூல்கள் திகழும். மதுக்கூர் என்னும் சோழநாட்டுத் திருவூர் ஒன்றில் சோழர்கால மணிவாசகர் செப்புப் பிரதிமம் ஒன்று கிடைத்தது.

அப்பிரதிமத்தின் திருக்கரத்தில் சுவடி நூலொன்று காணப்பெறுகின்றது.அதனைப் படித்தால் ‘‘திருவளர் தாமரை சீர்வளர் காவிகளீசர்’’ என்ற சொற்றொடர் பொறிப்பு இருப்பதைக் காணலாம். இந்தப் பாடலடி மணிவாசகர் இயற்றிய திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் திருக்கோவையார் என்ற நூலின் முதற் பாடலின் முதலடியாகும்.

ஒரு அற்புதத் தமிழ்நூலின் முதற் பாடலடியை இவ்வாறு பொறித்து மணிவாசகர் தம் கரத்தில் ஏந்தியிருப்பது திருக்கோவையாரே என்பதை அதனை வடித்த சிற்பி காட்டியுள்ளான். தமிழ் இலக்கிய நூல்கள் பற்றி ஆய்வு செய்த சில தமிழறிஞர்கள் திருக்கோவையார் எனும் சைவ நூல் மணிவாசகர் எழுதியது அன்று என நெடுங்காலமாக வாதிட்டு வந்தனர். பூமியிலிருந்து வெளிப்பட்ட இச்செப்புப் பிரதிமம் அது மணிவாசகர் எழுதிய நூல்தான் என்பதை சோழர்கால எழுத்துச் சான்றோடு மெய்பித்துக் காட்டி நிற்கிறது.

தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறையைச் சுற்றியுள்ள சாந்தாரம் என்னும் அறையின் சுவர்களில் இராஜராஜ சோழனின் ஓவியக் கலைஞர்கள் தீட்டிய வண்ணமிகு ஓவியக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒரு காட்சியாக திருவெண்ணெய்நல்லூர் சபையோர் முன்பு சுந்தரரும், வேதியராக வந்த கிழவரும் வழக்கு உரைத்து நிற்க சபையோர் அவ்வழக்கினை விசாரிக்கும் காட்சி காணப்பெறுகின்றது. சபையோர் தங்கள் கரங்களில் அவ்வூர் ஆவணக் களரியில் இருந்த ஓலைச்சுவடிக் கட்டுகளை ஏந்தியிருக்க ஒருவர் ஒரு கட்டினைப் பிரித்து அதில் காணப்பெறும் ஓலையைக் கையில் ஏந்தி வியப்பு மேலிடப் படித்து நிற்கின்றார். அந்த ஓலையில் காணப்பெறும் வாசகத்தின் ஒரு பகுதி நாமும் காணுமாறு உள்ளது.

‘‘இப்படி அறிவன் இவை என் எழுத்து’’ என்ற அந்த வாசகப் பொறிப்பு நம்மைச் சிந்திக்க வைத்திடும். இக்காட்சி ஓவியம் பண்டு ஆவணக் களரிகள் திருக்கோயில்களில் இடம்பெற்றிருந்தமையை எடுத்துக் காட்டுவதோடு, அங்கு அவை முறையாகப் பேணிக் காக்கப்பெற்றமையையும் சுட்டி நிற்கின்றது. பண்டு தமிழகத்து திருக்கோயில்களில் நூலகங்கள் செம்மையாக இயங்கி வந்தன.

தமிழ், வடமொழி போன்ற மொழிகளில் அமைந்த ஏட்டுச் சுவடி நூல்கள் அங்கு பேணிக் காக்கப்பெற்றன. அந்த நூலகங்களை ‘சரஸ்வதி பண்டாரம்’ என்ற பெயரால் அழைத்தனர். தில்லை (சிதம்பரம்) சபாநாயகர் திருக்கோயிலில் காணப்பெறும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் இரண்டு கல்வெட்டுச் சாசனங்கள் நூலகம் பற்றிய அரிய செய்திகளை நமக்கு எடுத்துரைக்கின்றன. கி.பி. 1251ஆம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற அக்கல்வெட்டுகள் மேற்குக் கோபுரம் அருகிலுள்ள முருகப் பெருமான் திருக்கோயிலின் மண்டபப் பகுதியில் காணப்பெறுகின்றன.

முதல் கல்வெட்டில் பல்லவராயன் என்ற அலுவலன் தில்லைக் கோயிலில் திகழ்ந்த சரஸ்வதி பண்டாரம் என்ற நூலகத்தினை மேம்படுத்துவதற்காக அளித்த அறக்கொடை பற்றி விவரிக்கின்றது. சரஸ்வதி பண்டாரம் என்ற பெயரில் திகழ்ந்த அந்த நூலகத்தில் 20 அறிஞர்கள் பணிபுரிந்து அங்குள்ள நூல்களை ஆராய்வதும், படி எடுப்பதும் போன்ற பணிகளைச் செய்தனர் என்றும், அங்கு எண்ணிறைந்த நூல்கள் இருந்தன என்றும், அப்பழமையான நூலகத்தை சுவாமி தேவர் என்பார் தோற்றுவித்தார் என்றும் கூறுகின்றது.

இரண்டாம் கல்வெட்டுச் சாசனத்தில் அந்நூலகம் மேம்பட அளிக்கப்பெற்ற நிலக்கொடை பற்றி விவரிக்கப்பெற்றுள்ளது. அந்நூலகத்தில் பணிபுரிய பல புதிய நபர்களை நியமனம் செய்வதற்காகவும், அந்நூலகத்தில் சுவாமி தேவர் காலத்தில் சேகரிக்கப்பெற்ற அரிய நூல்களான தமிழ், சமஸ்கிருத சுவடிகளை மீண்டும் புதுப்பித்து புதிய ஏடுகளில் எழுதிப் பாதுகாப்பதற்காகவும் அந்த அறக்கொடை நல்கப் பெற்றதாகக் கூறப்பெற்றுள்ளது. மேலும், அந்நூலகத்தில் காக்கப்பெற்ற அரிய நூல்கள் வரிசையில் சித்தாந்த ரத்னாகரம் என்ற நூலும் இடம்பெற்றிருந்தது என்ற குறிப்பும் காணப்பெறுகின்றது.

தில்லைக் கோயிலில் இந்நூலகத்தைத் தோற்றுவித்த சுவாமி தேவர் என்பார் மூன்றாம் குலோத்துங்க சோழனின் இராஜகுருவான ஸ்ரீகண்டசம்பு என்ற அறிஞரேயாவார். இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள அச்சுதமங்கலம் என்னும் ஊரில் ‘‘சோமநாத தேவர் திருக்கோயில்’’ என்ற அற்புதக் கோயிலை எடுப்பித்தவர்.

இவரது மகனான ஈஸ்வர சிவர் என்பார் திரிபுவன வீரேச்சரம் என்னும் திரிபுவனம் திருக்கோயிலுக்கு கடவுள் மங்கலம் செய்தவர் என்பதும், அவர் சித்தாந்த ரத்னாகரம் என்ற ஒப்பரும் நூலைப் படைத்தவர் என்பதும் திரிபுவனம் திருக்கோயிலில் காணப்பெறும் சோழர் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. சுவாமி தேவரின் திருக்குமாரரான ஈஸ்வர சிவர் படைத்த இந்த சித்தாந்த ரத்னாகரம் என்ற நூல்தான் தில்லைக் கோயிலில் சுவாமி தேவர் தோற்றுவித்த சரஸ்வதி பண்டாரம் என்னும் நூலகத்தில் இடம்பெற்றிருந்தது என்பதனை முன்னர் கண்டோம்.

தில்லைத் திருக்கோயிலில் உள்ள மற்றொரு கல்வெட்டில் விக்கிரமபாண்டிய சதுர்வேதிமங்கலம் என்னும் ஊரில் சரஸ்வதி பண்டாரம் என்ற நூலகம் இருந்தமையும், அதற்கென அளிக்கப்பெற்ற நிலக்கொடை பற்றியும் கூறப்பெற்றுள்ளன. திருக்கோயில்கள்தோறும் நூலகங்கள் பராமரிக்கப்பெற்று காலங்காலமாக சிதையும் நிலையிலுள்ள பழைய நூல்களைப் புதிய ஏடுகளில் எழுதிப் புதுப்பித்து வந்தனர்என்பதைக் கல்வெட்டுச் சாசனங்கள் எடுத்துக் கூறுகின்றன.

தற்காலத்தில் கம்போடியா என்றழைக்கப்பெறும் பண்டைய காம்போஜ நாடு தமிழகத்தோடு கலாச்சார ரீதியாக நெருங்கிய தொடர்புடைய நாடாகும். சோழ அரசர்களுக்கும் காம்போஜ நாட்டு கெமர் அரசர்களுக்கும் நெருங்கிய நட்புறவு திகழ்ந்திருந்தது. இராஜேந்திர சோழனின் கரந்தை செப்பேட்டுச் சாசனத்திலும், தில்லைக் கோயிலில் உள்ள குலோத்துங்கனுடைய கல்வெட்டிலும் காம்போஜ நாட்டு உறவு பற்றிய பல செய்திகள் காணப்பெறுகின்றன.

அந்நாட்டில் திகழும் திருக்கோயில்களில் தமிழகத்து கலைக்கூறுகள் பல காணப்பெறுகின்றன. அங்கோர்வாட், பாண்டிஸ்ரீ, பாபூன், பாகாவ், மெபோன் போன்ற அந்நாட்டுக் கோயில்கள்தோறும் நூலகக் கட்டடங்கள் திகழ்வதை இன்றும் நாம் காணலாம். தமிழகத்துக் கோயில்கள் வளமையுடன் போற்றப்பெற்ற காலங்களில் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் திகழாமல் ஆவணக் காப்பகங்கள் திகழ்ந்த இடங்களாகவும், எண்ணற்ற நூல்களைக் காத்த நூலகங்களாகவும் இருந்துள்ளன.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post ஆலயங்களில் நூலகங்களும் ஆவணக் காப்பகங்களும்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Anmikam ,Dinakaran ,
× RELATED கஷ்டங்களைப் போக்கும் காஞ்சி கைலாசநாதர்