×

குறளின் குறல்: திருக்குறளில் ஆமை!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருக்குறளின் அதிகாரத் தலைப்புகளில் நிறைய ஆமைகள் இருக்கின்றன. `கள்ளாமை, வெஃகாமை, நிலையாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, கல்லாமை, அவையஞ்சாமை, பெரியாரைப் பிழையாமை, கள்ளுண்ணாமை, பிரிவாற்றாமை, அழுக்காறாமை, புறங்கூறாமை’ என்றெல்லாம் எதிர்மறைப் பொருளைத் தாங்கி இந்த அதிகாரத் தலைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் உண்மையிலேயே ஆமை ஒரு திருக்குறளில் ஐம்புலன் அடக்கத்திற்கு உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது.

`ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.’
(குறள் எண் 126)

ஆமை தன்னுடைய நான்கு கால்கள், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வருங்காலத்தில் தனது கடினமான ஓட்டுக்குள் இழுத்து மறைத்துக் கொள்ளும் ஆற்றலுடையது. அதுபோல் ஒருவன் `மெய் வாய் கண் மூக்கு செவி’ என்ற ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டும். அவ்விதம் அடக்கும் ஆற்றல் பெற்றால் அது அவனுக்கு இந்தப் பிறவியில் மட்டுமல்லாது ஏழு பிறவிகளிலும் அரணாக இருந்து உதவும் என்கிறது இந்தக் குறள். ஐம்புலன்களை அடக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பேசும் குறட்பாக்கள் திருக்குறளில் இன்னும் சில உண்டு.

`உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது’
(குறள் எண் 24)

மன உறுதி என்னும் அங்குசத்தைக் கொண்டு ஐம்புலன்களாகிய யானையைத் தறிகெட்டுப் போகாமல் அடக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். தோட்டி என்றால் யானையை அடக்கும் அங்குசம் என்று பொருள்.

`ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி.’
(குறள் எண் 25)

ஐம்புலன்களையும் அடக்கியவர் ஆற்றல் மிகப் பெரிது. அதற்கு வானுலக அரசனான இந்திரனே சான்று என்கிறது இந்தக் குறள். இந்திரன் தேவர்களுக்கு மன்னனாக இருந்தும் புலனடக்கம் இல்லாமல் கெளதமரின் மனைவி அகலிகை மேல் இச்சை கொண்டான். ஐம்புலன்களையும் அடக்கிய மாமுனிவரான கெளதமர் கடும் சீற்றம் கொண்டு அவன் மேனி முழுதும் அவன் ஆசைப்பட்ட யோனி தோன்றக் கடவது எனச் சபித்தார்.

அந்தச் சாபம் உடனே பலித்து அவன் மேனி முற்றிலுமாக மாறிப் போகவே அவன் நடுநடுங்கினான். பின் அவன் இரந்து வேண்டவே அவ்விதம் தோன்றியவை பிறர் கண்ணுக்கு விழிகளாகத் தென்படும் எனச் சாப விமோசனம் அருளினார் கெளதமர் என்பது புராணக் கதை. கெளதமர் தன் மனைவி அகலிகைக்கும் கல்லாய்ப் போகுமாறு சாபம் கொடுத்ததும் பின்னர் ராமன் கால்பட்டு அகலிகை மீண்டும் பெண்ணானதும் வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், துளசி ராமாயணம் உள்பட எல்லா ராமாயணங்களிலும் சொல்லப்படுகின்றன.

இந்த இந்து சமயப் புராணக் கதையை மனத்தில் கொண்ட திருவள்ளுவர், ஐம்புலனை அடக்கியவரின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாய்ச் சொல்லும்போது இந்திரனே அதற்குச் சாட்சி என்று சொல்லி தவ முனிவரான கெளதமரைப் பெருமைப்படுத்துகிறார்.

திருமால் எடுத்த கூர்மாவதாரம், மெல்ல நடக்கும் சாதாரண ஆமைக்கு ஒரு தெய்வ அந்தஸ்தை அளித்துவிட்டது.அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி, பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது, வடவரை அதன் பெரும் பாரம் காரணமாகப் பாற்கடலில் மூழ்கத் தொடங்கியது. அவ்விதம் அது மூழ்கிவிட்டால் அதை மத்தாக்கிப் பாற்கடலை எப்படிக் கடைய முடியும்? தேவர்கள் திருமாலைச் சரணடைந்தார்கள். திருமால் ஆமையாக அவதாரம் எடுத்தார். மலைக்குக் கீழே போய் அதைத் தாங்கிக் கொண்டு அது மூழ்கி விடாமல் தடுத்தார். மலை நிலையாக நிற்க அதன் கீழ் இருந்த ஆமைதான் உதவியது.

திருமால் தான் எடுக்கும் அவதாரங்களில் தீய சக்திகளை வதம் செய்வார். ராமாவதாரத்தில் ராவணன், கிருஷ்ணாவதாரத்தில் கம்சன், நரசிம்ம அவதாரத்தில் இரணியன் என்றபடித் திருமாலின் பல அவதாரங்கள் அசுர சக்திகளை வதம் செய்யவே நிகழ்ந்தன. ஆனால் ஆமை யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாதது. எனவே கூர்ம அவதாரம் எடுத்த திருமால் யாரையும் வதம் செய்யவில்லை.

கேரள தேசத்துக் கோயில் கொடி

மரங்களில் ஆமை அந்தக் கொடிமரத்தைத் தாங்கியிருப்பதைப் போல அடிப்பகுதி அமைந்திருப்பதைப் பார்க்கலாம். காஞ்சீபுரம், திருச்செங்கோடு, திருக்கழுக்குன்றம் போன்ற இடங்களில் கோயில் மண்டபங்கள் ஆமை வடிவத்தின் மீது எழுப்பப் பட்டிருப்பதைக் காணமுடியும்.ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் என்ற ஊரில் கூர்மாவதாரத்திற்கு எனத் தனிக் கோயில் இருக்கிறது. சுவேத மன்னன் என்பவன் இந்தக் கோயிலைக் கட்டியதாக இதன் தலபுராணம் சொல்கிறது.

மூலவர் கூர்ம நாதருடன் அவர் அருகே கூர்ம நாயகியும் அம்பாளாக இங்கு அருள்புரிகிறாள். தசாவதாரத் திருக்கோயில் திருவரங்கத்தில் அமைந்துள்ளது. இங்கு கூர்மாவதாரம் உள்ளிட்ட பத்து அவதாரங்களும் மூலவர்களாக உள்ளனர். மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம் ஆகிய நான்கு அவதாரங்கள் கையில் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகின்றனர். வாமன அவதாரம் கையில் குடையுடன் காணப்படுகிறார்.

பரசுராம அவதாரத்தின் கையில் கோடாரி. ராமாவதாரம் கையில் வில்லம்புடனும் பலராம அவதாரம் கலப்பையுடனும் காட்சி தருகின்றனர். கிருஷ்ணாவதாரத்தின் கையில் வெண்ணெய். கல்கி அவதாரத்தின் கையில் கேடயமும் வாளும் உள்ளன.திருவரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ராஜகோபுரம் மதில் சுவர் கட்டுமானப் பணிகளைச் செய்த திருமங்கையாழ்வாரின் வேண்டுகோளுக்கு இணங்கி ரங்கநாதர் திருவரங்கத்தில் பத்து அவதாரத் திருக்கோலத்திலும் காட்சி தந்தார் என்கிறது இத்திருத்தலத்தின் தலபுராணம். மற்றபடி தசாவதாரச் சிலைகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் கட்டாயம் தசாவதாரங்களில் ஒன்றான கூர்மாவதாரச் சிலையும் இருப்பதைக் காணலாம்.

நவராத்திரி கொலுவில் வைக்கப்படும் தசாவதார பொம்மைகளில் கூர்மாவதார பொம்மையும் இடம்பெற்றுப் பல வீடுகளில் கொலுவை அழகுசெய்கின்றது. இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் இந்திரத்யும்னன் என்ற மன்னன் கதை வருகிறது. அவன் இறந்தபின் மோட்ச வாயில் வரை செல்கிறான். ஆனால் வெளியிலேயே நிறுத்தப்படுகிறான். அவன் செய்த புண்ணியச் செயல்களைப் பட்டியலிட்டுச் சொல்லுமாறு வாயில் காவலர்கள் அவனை அதட்டுகிறார்கள். அவனுக்குத் தான் என்னவெல்லாம் நல்லவற்றைச் செய்தோம் என்பதை நினைவு படுத்திக் கொள்ள முடியவில்லை.

மறுபடி அவன் பூமிக்கு வந்து தான் வாழ்ந்த இடங்களையெல்லாம் போய்ப் பார்த்து நினைவூட்டிக் கொள்ள முயல்கிறான். இமய மலை ஏரியொன்றில் ஓர் ஆமை வசித்து வந்தது. அது அவன் செய்த நற்செயல்கள் அனைத்தையும் அவனுக்கு ஒவ்வொன்றாக நினைவுபடுத்தியது. அப்படி இந்திரத்யும்னன் மோட்சம் செல்ல ஓர் எளிய ஆமை உதவியது என்ற கதை மகாபாரதத்தில் உண்டு. ஆமைக்கு ஞாபக சக்தி அதிகம் என்னும் செய்தியையும் ஆமை அதிக வாழ்நாள் கொண்டது என்னும் செய்தியையும் இந்தக் கதை மறைமுகமாகத் தெரிவிக்கிறது.

பொதுவாகவே புலனடக்கத்திற்கு ஆமை திருக்குறளில் மட்டுமல்லாமல் இன்னும் பல பழைய இலக்கியங்களில் எடுத்துக் காட்டாகக் கூறப்படுகிறது.ஆமைக் கறி உண்போர் முதலில் ஆமையை நீரிலிட்டுச் சுட வைப்பர். வெந்நீரில் சூடாக்கப்படும் ஆமை தொடக்கத்தில் அந்தச் சூட்டில் இன்பம் காணும். மகிழ்ச்சியோடு அங்குமிங்கும் ஆடி அலையும். ஆனால் சூடு ஏற ஏற அது கடும் சூட்டில் உயிரிழந்துவிடும். புலன் வழிச் செல்லும் மனிதர்கள் நிலையும் இந்த வெந்நீரிலிட்ட ஆமையின் நிலை போன்றதுதான். பின்னால் வரும் துன்பத்தை அறியாமல் அவர்கள் தற்போது கிடைக்கும் சுகத்தில் ஆழ்ந்து வாழ்கின்றனர். பின்னர் கடும் துயரில் ஆழ்கின்றனர். புலன் நெறியிலிருந்து விலகி அருள் நெறியில் வாழ்வதே நன்மை தரும்.இந்தக் கருத்தை திருநேரிசைப் பதிகத்தில் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் அப்பர்.

`வளைத்து நின்று ஐவர் கள்வர்
வந்து எனை நடுக்கம் செய்யத்
தளைத்து வைத்து உலையை ஏற்றித்
தழலெரி மடுத்த நீரில்
திளைத்து நின்று ஆடுகின்ற
ஆமைபோல் தெளிவிலாதேன்
இளைத்து நின்றாடு கின்றேன்
என்செய்வான் தோன்றி னேனே!’

நாலடியார் பாடல் ஒன்றிலும் இதே உவமை பயின்று வரக் காணலாம்.

`கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப
ஆமை
நிலையறியாது அந்நீர் படிந்தாடி அற்றே
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப
ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.’

இவ்வுலகப் புலனின்பங்களை நிரந்தரம் என நினைத்து மகிழ்வது, ஆமையைச் சமைக்கத் தீ மூட்டியபோது அந்த ஆமை மகிழ்ச்சியோடு உலைநீரில் விளையாடுவது போன்றது. நீர் நன்கு கொதித்ததும் தான் இறந்து விடுவோம் என்பதை ஆமை உணர்வதில்லை. மனிதனும் இன்ப நுகர்ச்சியின் இறுதியில் பெரும் துன்பம் காத்திருப்பதை அறிவதில்லை என்கிறது நாலடியார் வெண்பா.பத்திரிகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல் ஐம்புலன்களையும் அடக்குவதற்கு ஆமையை உதாரணமாகக் காட்டுகிறது.

`ஆமை, வரும் ஆள்கண்டு ஐந்தடக்கம்
செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும்
எக்காலம்’

– என ஞானப் புலம்பல் புலம்புகிறார் பத்திரிகிரியார்.

ஆமை ஐம்புலன்களையும் அடக்குவதற்கு உதாரணமாகக் கூறப்பட்டாலும் அது தன் வாயை அடக்காததால் அழிந்ததைப் பற்றி பஞ்சதந்திரக் கதைகளில் ஒன்று சொல்கிறது. ஒரு குளத்தில் இரு வாத்துகளும் ஓர் ஆமையும் மிகுந்த நட்புடன் வாழ்ந்து வந்தன. ஆனால் என்ன செய்ய? மழையில்லாததால் குளத்தில் நீர் வற்றிப் போயிற்று. எனவே வேறு குளம் தேடிப் போக வாத்துகள் முடிவு செய்தன. பறக்க முடியாத ஆமையையும் அழைத்துச் சென்று காப்பாற்ற அவை தீர்மானித்தன.

ஆமையை ஒரு கொம்பை வாயில் கவ்விக் கொள்ள வைத்து கொம்பின் இரு முனைகளையும் அலகால் பற்றிக் கொண்டு வாத்துகள் வானத்தில் பறந்தன. அந்த விந்தையான காட்சியைக் கண்டு சில சிறுவர்கள் நகைத்தார்கள். அவர்கள் எதற்குச் சிரிக்கிறார்கள் என ஆமை வாய்திறந்து கேட்க, அதன் பிடி நழுவி அது கீழே விழுந்து இறந்ததைச் சொல்கிறது பஞ்சதந்திரக் கதை. வாய் என்னும் புலனை அடக்காமல் தேவையில்லாதவற்றைப் பேசினால் உயிரே போய்விடும் என்கிறது இந்தக் கதை.

முயல் ஆமை இடையே நடந்த ஓட்டப் பந்தயக் கதை நம் எல்லோருக்கும் தெரியும். வேகமாக ஓடும் முயல் தூங்கி விட்டதால் மெல்ல நடக்கும் ஆமை உரிய காலத்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றுவிட்டது. எதிலும் வெற்றிபெற நிதானமான தொடர் முயற்சி அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தும் கதை இது. முயல் ஆமையிடம் தோற்க என்ன காரணம்? அது தொடர்ந்து `முயலாமை’ தான் காரணம்!

`பார்த்தால் பசிதீரும்’ திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் டி.எம். செளந்தரராஜன் பாடும் கண்ணதாசன் பாடல் `உள்ளம் என்பது ஆமை’ எனத் தொடங்குகிறது. ஆமையின் கனமான ஓட்டுக்குள் அதன் ஏனைய பகுதிகள் ஒடுங்கிக் கிடக்கின்றன. அதைப்போல் வெளியே சொல்ல முடியாமல் உள்ளத்திற்குள்ளும் பல உண்மைகள் ஒளிந்திருக்கின்றன என்கிறது இப்பாடல்.

`உள்ளம் என்பது ஆமை – அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி – நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
தெய்வம் என்றால் அது தெய்வம் – வெறும்
சிலை என்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை…’

என வளர்கிறது பாடல்.

புலனடக்கத்திற்கு ஆமையை விடச் சிறந்த உதாரணம் இல்லை என்பதைத் திருக்குறளிலிருந்து அறியலாம். வெளியிலிருந்து ஆபத்து வருமானால் ஆமை அதைத் தடுக்கப் போராடுவதில்லை. சடாரெனத் தன் தலையையும் நான்கு கால்களையும் உள்ளே இழுத்துக்கொண்டு தன் ஓடு கவசமாய் நின்று தன்னைக் காக்குமாறு செய்து அது ஆபத்திலிருந்து தப்பித்து விடுகிறது.

மனிதர்களும் புறக் கவர்ச்சிகள் தங்கள் மனத்தைத் தாக்கும்போது, அவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க, மனஉறுதி மூலம் ஐம்புலன் களையும் அடக்கிக் கொள்ள வேண்டும் என்கிறது வள்ளுவம். அப்படி அடக்கிக் கொண்டால் ஐந்தவித்ததன் காரணமாகப் பேராற்றல் பெற்று வாழ்க்கையை வெல்லலாம் என்பது திருக்குறள் சொல்லும் நீதி.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

The post குறளின் குறல்: திருக்குறளில் ஆமை! appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…