×

இந்த வார விசேஷங்கள்

6.1.2024 – சனி
மானக்கஞ்சாற நாயனார் குருபூஜை

விக்கினங்களை மாயவரம் பக்கத்திலே ஆனந்ததாண்டவபுரம் என்று ஒரு ஊர். அந்த ஆனந்த தாண்டவம் இப்பொழுது ஆனதாண்டவபுரம் என்று வழங்கப்படுகிறது. அந்த ஊரிலே வேளாளர் குலத்திலே மார்கழி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். அரசனுக்குச் சேனைத் தலைவராக பதவிவகித்தவர். சிவநெறிச்செல்வர். இவருக்கு வெகுகாலம் பிள்ளை இல்லாமலிருந்தது. மிகவும் வருத்தத்தில் இருந்த அவர் சிவபெருமானை வணங்க, சிவபெருமானின் அருளால் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பேரழகும் பெருங்குணமும் வாய்ந்த அந்தப் பெண் குழந்தையை பெருமையோடு வளர்த்தார். அந்தப் பெண் குழந்தையும் நல்ல பண்போடு வளர்ந்தது. உரிய வயது அடைந்தவுடன் திருமணம் செய்து வைப்பதற்காக, தகுந்த மணமகனைத் தேடினார்.

ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்ற ஒரு திருமகன் கிடைத்தார். அவர் குடும்பமும் சிவபக்தி நிறைந்த குடும்பம். மிகத் தகுதியான குடும்பம். அப்படிப்பட்ட குடும்பத்தில் பெண் தருவது குறித்து மானக்கஞ்சாற நாயனார் மனம் நெகிழ்ந்தார். திருமண ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. மணமகனை வரவேற்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு வயதான சிவனடியார் வந்தார். மாவிரத முனிவர் என்ற பெயருடையவர். திருமண நிகழ்ச்சிக்கு வந்தவுடன் மனம் மகிழ்ந்த மானக்கஞ்சாற நாயனார் அவருக்கு பல விதமான வரவேற்பு அளித்தார். பாதத்தில் விழுந்து வணங்கி ஆசிபெற்றார். தன்னுடைய மகளையும் ஆசிபெற வைத்தார்.

மணமகளின் நீண்ட கூந்தலை பார்த்த அந்த முனிவர் அவளுடைய கூந்தலை அரிந்து கொடுத்தால் தமக்கு உதவும் என கேட்க, ஒரு சிவனடியார் கேட்டதை தராமல் இருப்பதா என்று எண்ணிய மானக்கஞ்சாற நாயனார், உடனடியாக எதைப்பற்றியும் கவலைப்படாது, சிவனடியார் உள்ளம் மகிழ்விக்க வேண்டும் என்ற நினைப்போடு, தம்முடைய பெண்ணின் கூந்தலை அரிந்து சிவன் அடியவரிடத்திலே கொடுத்தார். இந்த விஷயங்களைக் கேட்ட கலிக்காம நாயனார், தன்னுடைய மாமனாரின் சிவபக்தியை எண்ணி மகிழ்ந்தார்.

இந்த நிகழ்ச்சியைக் காணக் கொடுத்து வைக்கவில்லையே என்று ஏங்கினார். இருந்தும் மணமகளைப் பார்த்த பொழுது அவள் தலைமுடி இல்லாமல் இருந்தது குறித்து சற்றே மனம் கலங்கினார். அப்பொழுது அவருடைய உள்மனதில் அசரீரி ஒலித்தது. “கலிக்காமரே! உம் உள்ளத்துக்கு எந்தக் குறையும் இல்லை. உன் மனைவி பூரண பொலிவோடு நீண்ட குழலோடு இருப்பாள்.’’ என்று சொல்ல அவளைப் பார்த்தால். அவள் சர்வ அலங்கார பூஷிதையாக கறுத்த குழலோடும் கலைமான் விழியோடும் அற்புத அழகோடும் காட்சி தந்தாள். சாதாரண மனிதர்களின் செயலுக்கு அப்பாற்பட்ட அருஞ்செயல் புரிந்த சிவனடியார் மானக்கஞ்சாற நாயனாரின் குருபூஜை தினம் இன்று. அவர் குருபூஜையில் கலந்து கொள்வோம்.

7.1.2024 – ஞாயிறு
உற்பத்தி ஏகாதசி

ஒரு வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் உண்டு. சில வருடங்களில் 25 ஏகாதசிகள் வரும். அதில் தலையாய ஏகாதசி, மார்கழி மாதம், தேய் பிறையில் வருகின்ற ஏகாதசி. வைகுண்ட ஏகாதசிக்கு முன்னால் வருகின்ற ஏகாதசி இந்த ஏகாதசி என்பதால், இதற்கு “உற்பத்தி ஏகாதசி” என்று பெயர். ஏகாதசி விரதமே இந்த நாளில் இருந்து தான் உற்பத்தியானது என்பதால் இதற்கு உற்பத்தி ஏகாதசி என்று பெயர். முரன் என்ற அசுரனோடு திருமால் சண்டையிட்டார். சற்று நேரம் ஓய்வெடுக்க ஆசிரமத்தில் ஒரு குகையில் இருந்தார். இததான் சமயம் என்ற அந்த முரன் வாளெடுத்து குகைக்குள் நுழைந்த பொழுது திருமாலின் சக்தியாக ஒரு பெண் எதிர்ப்பட்டாள்.

அந்தப் பெண் ஊங்காரத்தால் முரனை பஸ்பமாக்கினாள். கண்விழித்த திருமால் அந்தப் பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயரிட்டார். இந்த ஏகாதசி நாளில் யாரெல்லாம் திருமாலை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு இகபர வாழ்வின் மேன்மை கிடைக்கும் என்று வரமளித்தார்.

9.1.2024 – செவ்வாய்
தொண்டரடிப்பொடியாழ்வார் திருநட்சத்திரம்

ஆழ்வார்களிலேயே அரங்கனைத் தவிர, வேறு யாரையும் பாடாத ஆழ்வார் ஒருவர் உண்டு என்றால் அவர் தொண்டரடிப் பொடியாழ்வார். ஆனால், இதில் ஒரு நுட்பம் உண்டு. அரங்கன் எல்லா திவ்ய தேசங்களுக்கும் மூலமாக இருப்பவன். 108 திவ்ய தேசத்து எம்பெருமானும் அரங்கத்தில் வந்து கலைகளாக இணைகிறார்கள் என்கின்ற கருத்தும் உண்டு. கோயில் என்றால் வைணவத்தில் திருவரங்கம்தான். அதுவே, “தலைமைக் கோயில்” என்று சொல்லப்படுகின்றது. பூலோக வைகுண்டம் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, இவர் அரங்கனை மட்டும் பாடியிருந்தாலும், அனைத்து திவ்யதேச பெருமாளையும் பாடிய ஆழ்வாராகிறார்.

கும்பகோணம் அருகில் மண்டங்குடி என்ற ஊரில் அவதரித்தவர். இவர் எழுதிய பிரபந்தம் இரண்டு. ஒன்று திருப்பள்ளியெழுச்சி. இது தினசரி காலையில் எல்லா பெருமாள் ஆலயங்களிலும் வைணவ வீடுகளிலும் பூஜையில் பாடப்படுவது. மற்றொரு பிரபந்தம் திருமாலை. 45 பாடல்கள். தத்துவ நுட்பங்கள் செறிந்தது. தன்னுடைய பெயரைக்கூட வைணவ அடியாருக்கு அடியார் என்ற பொருளில் மாற்றி வைத்துக் கொண்டவர். அவதாரம் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்தது.

9.1.2024 – செவ்வாய்
பெரியநம்பிகள் திருநட்சத்திரம்

மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்த வைணவ ஆசாரியர்களில் ஒருவர் பெரிய நம்பிகள். ராமானுஜருக்கு மதுராந்தகத்தில் பஞ்சம்ஸ்காரம் செய்த குரு. பெரிய நம்பிகள் (மஹாபூர்ணர்) வாழ்க்கையில் தனது மதக்கருத்தை பரப்புவதைவிட அப்பட்டமாக வாழ்க்கையில் பின்பற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டார். சோழ அரசன் – அல்லது அவர் ஆளுகைக்கு உட்பட்ட ஏதோ ஒரு சிற்றரசனால் கண்கள் பறிக்கப்பட்ட பெரிய நம்பிகள் வயோதிகத்தாலும் – வேதனையாலும் உடல் தளர்ந்து கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து – திருவரங்கம் திரும்பிக் கொண்டிருக்கிறார்.

தனக்கு மரணம் நெருங்குவதை உணர்கிறார். கும்பகோணம் – அய்யம்பேட்டை தாண்டி – பசுபதி கோயில் என்று சொல்லப்படும் ஊருக்கு அருகில் வந்து கொண்டிருக்கிறார்கள். பெரிய நம்பிகளால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. மகள் அத்துழாய் மீது தளர்ந்து போய் அப்படியே சாய்ந்து விடுகிறார். தலை கூரத்தாழ்வான் மடியிலும், திருவடிகள் மகள் அத்துழாய் மடியிலுமாக இருக்கிறார். அத்துழாய் பேசுகிறாள்.

“அப்பா…. கொஞ்சம் சமாளித்துக் கொள்ளுங்கள்… ஓரிரண்டு நாட்கள்… கொஞ்சம் முயன்றால் திருவரங்கம் போய்விடலாம்….’’ மகள் சொன்னதைக் கேட்டு அந்தச் சூழ்நிலையிலும் அவர் இதழ்க்கடையில் புன்னகை விரிகிறது.

“திருவரங்கத்தில் சென்று உயிரை விட்டால் மோட்சம் என்கிறாய்…. இல்லையா”
“அப்படித்தானே சாத்திரங்கள் சொல்கின்றன..’’
“அம்மா…. சாத்திரங்கள் அப்படித்தான் சொல்கின்றன. நீ சொல்வதும் உண்மை. ஆனால், உண்மைகளுக்கு மேலே சில பேருண்மைகள் உண்டு..
“அப்படியா..”.
“ஆம்… அம்மா… அரங்கன் அந்தப் பேற்றினை இந்த எளியவனுக்குக் கொடுத்திருக்கிறான். அரங்கம்தான் சிறந்தது…. அங்கே வாழ்ந்தால்தான் மோட்சம்… என்பதை அப்படியே வரிக்கு வரி எடுத்துக் கொண்டு அத்தனை பேரும் அரங்கத்தில் குடியேறுவது சாத்தியமா…? அப்படி வார்த்தைகளை பிடித்துக் கொண்டு – உள் அர்த்தத்தை கவனிக்காது போனால் – அரங்கம்தான் தாங்குமா….?

அப்படி திருவரங்கத்தில் வாழாதவர்களுக்கும் திருவரங்கத்தில் சாகாதவர்களுக்கும் மோட்சம் கிடையாதா? எல்லோரும் திருவரங்கத்திற்கு போவது இருக்கட்டும்…
எல்லா ஊரும் திருவரங்கமாக வேண்டாமா..

“அப்பா…. நீங்கள் சொல்வது புரிகிறது…. ஆனால் திருவரங்கம்?” பெரிய நம்பிகள் இப்போது ஓர் அற்புதமான வாக்கியத்தைச் சொல்கிறார்.

“அம்மா…. இப்போது இந்த தளர்ந்த வயோதிக நிலையில் – அந்திம நேரத்தை – எண்ணிக் கொண்டிருக்கும் – அடியேன் – தலை சாய்த்திருக்கிறேனே – கூரத்தாழ்வான் என்கிற பரமபாகவதன் மடியில்… இந்த பாகவதன் மடியைவிட உயர்ந்ததா திருவரங்கம்?” அத்துழாய் பேசவில்லை. அந்த பெரிய நம்பிகளின் அவதார நட்சத்திர தினம் இன்று.

11.1.2024 – வியாழன்
அனுமன் ஜெயந்தி

மார்கழி அமாவாசை என்றாலே அனுமன் ஜெயந்தி தினம் நினைவுக்கு வரும். அஞ்சனையின் மைந்தனாகத் தோன்றியவன். ஐம்புலன்களை வென்றவன். சூரியதேவனிடம் கல்வி கற்றவன். அசாத்திய சாதனை செய்யும் ஆற்றல் படைத்தவன். ராமதூதன். நித்திய சிரஞ்ஜீவியாகத் திகழ்பவன். வரபலம் உடையவன். மார்கழி அமாவாசையில் மூலநட்சத்திரத்தில் பிறந்தவன். ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று விரதமிருந்து ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனையை நடத்தி, வடைமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து
வழிபடுவது வழக்கமாக உள்ளது.

கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயரை வழிபட எல்லாவிதமான நலன்களும் கிடைக்கும். ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்;

“ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
வாயுபுத்ராய தீமஹி,
தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்’’

11.1.2024 – வியாழன்
சாக்கிய நாயனார் குருபூஜை

63 நாயன்மார்களில் ஒருவர் சாக்கிய நாயனார். அவருடைய அவதாரம் மார்கழி பூராடம் நட்சத்திரம். காஞ்சிபுரம் அருகே திருச்சங்கமங்கை என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் அவதரித்தவர். இவருடைய பக்தி வித்தியாசமானது. ஒரு நாள் வெட்டவெளியில் சாக்கிய நாயனார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழிபாடு ஏதுமின்றி கிடந்த சிவலிங்கத் திருமேனி தென்பட்டது. அந்த லிங்கத்தை நினைத்து சாக்கிய நாயனார் உள்ளம் உருகினார். அதை தூயநீரால் நீராட்டி, மலர்கள் சாத்தி பூஜிக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த வெட்ட வெளியில் நீரும் இல்லை, மலர்களும் இல்லை.

என்ன செய்வது? ஈசன்மீது கொண்ட அன்பு மிகுதியால், கீழே கிடந்த கல்லை எடுத்து, ‘சிவாயநம’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி, அதை சிவலிங்கத்தின் மீது வீசினார். தன்னுடைய பக்தன் அன்பினால் தன்மீது கல்லெறிந்தாலும் அதை மலராக ஏற்றுக்கொண்டான் இறைவன். இந்தப் பூஜை தினந்தோறும் நடந்தது. சாக்கிய நாயனார், கல் எறிந்து வழிபட்டதாக சொல்லப்படும் சிவபெருமான், காஞ்சிபுரம் அடுத்துள்ள கோனேரிக்குப்பம் என்ற ஊரில் வீற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலில் அருளும் இறைவனின் திருநாமம், ‘வீரட்டானேஸ்வரர்’ என்பதாகும்.

சாக்கிய நாயனார் கல் எறிந்ததன் அடையாளமாக, இங்குள்ள லிங்கத்தின் மீது கல் பட்ட வடு புள்ளி புள்ளியாக காணப்படுகிறது. மேலும், இறைவனின் சந்நதிக்கு எதிரில் கையில் கல்லுடன் சாக்கிய நாயனாரின் திருமேனியும் காணப்படுகிறது.அந்த சாக்கிய நாயனாரின் குருபூஜை இன்றைய தினம்.

12.1.2024 – வெள்ளி
கூடாரைவல்லி

மார்கழி மாதத்தில் கூடாரைவல்லி என்பது மிக அற்புதமான நாள். திருப்பாவையின் 27-வது பாசுரம், “கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா” என்ற பாசுரம். திருப்பாவை நோன்பு கிட்டத்தட்ட நிறைவேறும் நாள் என்று இதைச் சொல்லுவார்கள். குறையொன்றுமில்லாத கோவிந்தனை வழிபடுகின்றபொழுது ஒவ்வொருவர் மனக்குறையும் தீர்ந்துவிடும் என்பதால், அன்று புத்தாடை அணிந்து, ஆண்டாள் புடவை எடுத்து வைத்து, ஆண்டாள் படத்துக்கு பூமாலை சூட்டி, வணங்குவார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கருவறை முன் அர்த்த மண்டபத்தில், ஸ்ரீஆண்டாள் நாச்சியார் சிறப்பு அலங்காரத்தோடு காட்சி தருவார். ஒருமுறை ராமானுஜர் ஆண்டாள் கோரிக்கையைநிறை வேற்றுகின்ற வண்ணம், நூறு அண்டா வெண்ணெயும் நூறு அண்டா அக்கார அடிசிலும், மதுரை திருமாலிருஞ்சோலை அழகருக்கு சமர்ப்பித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் கூடாரைவல்லி அன்று 108 பாத்திரத்தில் வெண்ணெயும் அக்கார அடிசிலும் நிவேதனம் ஆகும்.

நாம் அன்று வெண்ணெயும் அக்கார அடிசிலும் (பாலில் நெய்விட்டு செய்த சர்க்கரைப் பொங்கல்) வைத்து
ஆண்டாளை வணங்க நம்முடைய மனோரதம் நிறைவேறும். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். கூடாரைவல்லி நாளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று, துளசி மாலை அணிவித்து வணங்குவதன் மூலமாக சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Sani Manakkachara Nayanar Gurupuja ,Anandathandavapuram ,Mayavaram ,Ananda Thandavam ,Anandandavapuram ,Swathi Nakshatra ,Margazhi ,
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி