×

₹4 லட்சம் மாமூல் கேட்டு தொழிலதிபர் மீது வீசும்போது தவறி விழுந்ததில் வெடிகுண்டு வெடித்து ரவுடி படுகாயம்

வில்லியனூர், ஜன. 6: ரூ.4 லட்சம் மாமூல் கேட்டு தனியார் கம்பெனி உரிமையாளர் மீது வீசும்போது தவறி விழுந்ததில் வெடிகுண்டு வெடித்து ரவுடி படுகாயமடைந்தார். புதுச்சேரி, வில்லியனூர் அருகே ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனி உரிமையாளர் மீது பிரபல ரவுடி வெடிகுண்டு வீசிவிட்டதாக என நேற்று மதியம் வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேற்கு எஸ்பி வம்சிதரெட்டி, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் கிரைம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு வெடிகுண்டு வெடித்து வெடிபொருட்கள் சிதறிகிடந்தது. மேலும் ரத்த கறைகள் படிந்து கிடந்தன. உடனே போலீசார் கம்பெனியில் உள்ள சிசிடிவி வீடியோ காட்சியை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வில்லியனூர் அருகே உள்ள தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (36). இவர் ராமநாதபுரம் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக ராமநாதபுரம் பகுதியில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் (பெட் பாட்டில்) தயாரிக்கும் கம்பெனி வைத்து தொழில் செய்து வருகிறார். இக்கம்பெனியில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கும் வாட்டர் பாட்டில்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரவுடி சுகன் (34), வெங்கடேசனிடம் ரூ.4 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். இதற்கு வெங்கடேசன் கொடுக்க மறுத்து தனது நண்பரிடம் கூறியுள்ளார். அவர் ரவுடியிடம் பிரச்னை வேண்டாம் செல்போன் எண்ணை பிளாக் செய்துவிடு என்று கூறினாராம். இதனால் கடந்த 2 நாட்களாக சுகன் செல்போன் எண்ணை வெங்கடேசன் பிளாக் செய்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சுகன் தனது கூட்டாளி சென்னையை சேர்ந்த சரத் என்பவருடன் பைக்கில் ராமநாதபுரம் வந்து கம்பெனியின் உள்ளே சென்று கத்தியை காட்டி வெங்கடேசனிடம் மாமூல் கேட்டு தாக்கினார். அப்போது அங்கு லோடு ஏற்றிக்கொண்டிருந்த சிலர் ரவுடியை மறித்துள்ளனர். இருப்பினும் சரத், கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். பிறகு வெங்கடேசன் தனது நண்பருக்கு போன் செய்து தன்னை பணம் கேட்டு அடிக்கின்றனர் என பேசியபடி கம்பெனியின் உள்ளே இருந்து வெளியே வந்தார். உடனே அவர் சுகனிடம் செல்போனை கொடுக்குமாறு கூறி ஏன் அடிக்கிறீர்கள் என கேட்டபோது அதற்கு சுகன், பணம் கேட்டால் கொடுக்காமல் செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டார் என கூறி போனை வெங்கடேசனிடம் கொடுத்துவிட்டார்.

பிறகு சுகன், வெங்கடேசனை தாக்கி கழுத்தை பிடித்துக்கொண்டு தனது கூட்டாளியிடம் வெடிகுண்டை எடுக்குமாறு கூறினார். அப்போது சரத் தனது டவுசர் பாக்கெட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டை எடுத்து சுகனிடம் கொடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக சுகனின் கை தவறி வெடிகுண்டு கீழே விழுந்தது. அப்போது வெடிகுண்டு வெடித்ததில் சுகன், வெங்கடேசன், சரத் ஆகியோரின் கால்களில் படுகாயம் ஏற்பட்டது. உடனே சுகன் தனது கூட்டாளியை திட்டிவிட்டு பைக்கை எடுக்குமாறு கூறினார். இதையடுத்து சரத் தன் கையில் வைத்திருந்த கத்தியை அங்கேயே போட்டுவிட்டு பைக்கை எடுத்தார். உடனே சுகன் தனது காலில் ரத்தம் சொட்ட சொட்ட பைக்கில் அமர்ந்து கொண்டு தனது கூட்டாளி சரத்துடன் வேகமாக பைக்கில் சென்றுவிட்டனர். இவ்வாறு கூறப்பட்டது.

இதையடுத்து மோப்பநாய் ஜோட்டோ வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். அப்போது மோப்பநாய் அங்கிருந்த காலணி மற்றும் ரத்தத்தை நுகர்ந்து பார்த்துவிட்டு பிறகு மெயின் ரோடு பக்கம் சிறிது தூரம் ஓடி சென்றுவிட்டு திரும்பி விட்டது. பிறகு தடயவியல் நிபுணர்கள் வந்து ரத்த மாதிரிகள் மற்றும் அங்குள்ள தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வில்லியனூர் போலீசார் மாமூல் கேட்டு கத்தியை காட்டி மிரட்டுவது, வெடிகுண்டு பயன்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

The post ₹4 லட்சம் மாமூல் கேட்டு தொழிலதிபர் மீது வீசும்போது தவறி விழுந்ததில் வெடிகுண்டு வெடித்து ரவுடி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Willianur ,Ramanathapuram ,Willianur, Puducherry ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’