×

குருவின் உபதேசத்தை பெற்றுத் தரும் லலிதாம்பிகை

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

நிஜ ஸல்லாப மாதுர்ய
விநிர்பத்ஸித கச்சபி

சரஸ்வதியின் வீணைக்குக் கச்சபி என்பது பெயர். அத்தகைய வீணையையும் தோற்கடிக்கவல்ல இனிய குரலை உடையவள் என்பது பொதுப் பொருள். இப்போது இந்த நாமத்திற்குள் இருக்கும் பல்வேறு பரிமாணங்களை பார்ப்போமா!

இதற்கு முந்தையை நாமாவான கர்ப்பூர வீடிகா ஆமோத ஸமாகர்ஷி திகந்தரா… எனும் நாமத்தில் அம்பிகையினுடைய நாக்கை வர்ணிக்கும்போது அம்பிகையினுடைய இரண்டு முக்கிய செயல்கள் சுவைத்தல் இன்னொன்று பேசுதல். சுவைத்தல் எனும் செயலைச் செய்யும்போது ஞானேந்திரியமாகவும் பேசுதல் எனும் செயலைச் செய்யும்போது கர்மேந்திரியமாகவும் செயல்படுகின்றது நாக்கு. இப்போது அம்பாளுடைய நாக்கை நேரடியாக வர்ணிக்காமல் அந்த நாக்கினுடைய இரண்டு செயல்பாடுகளையும் வசின்யாதி வாக்தேவதைகள் வர்ணிக்கிறார்கள்.

அப்படி வர்ணிக்கும்போதுதான் நாம் சென்ற நாமாவில் நாக்கினுடைய சுவைத்தல் என்ற செயலைத்தான் அந்த கர்ப்பூர வீடிகா என்ற நாமாவில் வர்ணித்தார்கள். இப்போது அதற்கு அடுத்த நாமமான நாக்கு செய்யக்கூடிய செயலான பேசுதல். இப்போது இந்த நாமமான… நிஜ ஸல்லாப மாதுர்ய விநிர்பத்ஸித கச்சபி… என்பது அம்பிகையினுடைய வாக்கினுடைய இனிமையை வர்ணிக்கின்றது. அதை வர்ணிக்கக் கூடியவர்கள் வசின்யாதி வாக் தேவதைகளாக இருக்கிறார்கள். அதனால் அவர்களைவிட அம்பிகையினுடைய வாக்கினுடைய இனிமையை நன்றாகத் தெரிந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அதனால்தான் வசின்யாதி வாக் தேவதைகள் அம்பிகையினுடைய வாக் சொரூபம்.

சக்ரத்தில் ஒன்பது ஆவரணம் உண்டு. இதில் ஒவ்வொரு ஆவரணமாக வரும்போது எட்டாவதான திரிகோணத்திற்கு முன்னால் இருக்கக்கூடிய ஏழாவது ஆவரணத்தில் இருக்கக் கூடியவர்கள் அதிரகஸ்ய யோகினிகள். இந்த திரிகோணத்திற்கு முன்னால் இருக்கக்கூடிய இடத்தில் ரகசிய யோகினிகள் என்கிற ஸ்தானத்தில் இருக்கக்கூடியவர்கள் யாரெனில், இந்த வசின்யாதி வாக் தேவதைகள். அதாவது இவர்கள் ரகசிய யோகினிகள் என்கிற ஸ்தானத்திலிருக்கிறார்கள்.

அம்பிகையினுடைய வாக்கினுடைய நேரடி சொரூபம் இந்த எட்டு பேரும் ஆவார்கள். அம்பாளுடைய வாக்கு என்பது சாட்சாத் ரகசிய யோகினிகள். இந்த ரகசிய யோகினிகளை நாம் காஞ்சி காமாட்சியை தரிசனம் செய்யும்போது அங்கு முன்னால் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை இருக்கும். அது உள்ளே இருக்கும். அதை பூ பிரஸ்தம் என்பார்கள். தரையோடு தரையாக இருக்கும். அந்த தரையோடு தரையாக இருக்கும் ஸ்ரீசக்ர பிரதிஷ்டையைச் சுற்றி ஆவுடையார் மாதிரி ஒன்று இருக்கும். இந்த ஆவுடையாருக்குள் இந்த எட்டு தேவதைகளும் இருப்பார்கள். இவர்கள்தான் வசின்யாதி வாக் தேவதைகள்.

இவர்கள்தான் அம்பிகையினுடைய வாக் சொரூபங்களாக விளங்குகிறார்கள். அதனால் அம்பிகையினுடைய வாக்கினுடைய இனிமை முழுமையாகத் தெரியும். அப்படிப்பட்ட வாக் தேவதைகள் அம்பிகையின் வாக்கினுடைய இனிமையை சொல்லும்போது அந்த இனிமைக்கு எதை ஒப்பிடலாம். அப்படியெனில் எதையுமே ஒப்பிட முடியாது. அதுதான் உண்மை. அதாவது இதுமாதிரி இருக்கும் என்று சொல்லலாமா என்றால் எதையுமே அதற்கு ஒப்பிட முடியலை.

அதனால் வாக் தேவதைகளுக்கு கிடைத்த ஒரே ஒரு ஒப்பீடு என்னவெனில் வாக்கிற்கு அதிபதியாக இருக்கக்கூடிய சரஸ்வதி தேவி. அந்த சரஸ்வதி தேவி வாக்கினுடைய அதிதேவதையாக அம்பிகையால் நிர்ணயிக்கப் பட்டிருக்கிறாள். அந்த சரஸ்வதி தேவி தன்னுடைய கையில் வைத்திருக்கக் கூடிய வீணைக்கு கச்சபி என்று பெயர். இந்த கச்சபி என்கிற வீணையை சரஸ்வதி வாசிக்கிறாள். நாம் வாசிக்கும் வீணைக்கும் சரஸ்வதி வாசிக்கும் வீணைக்கும் வித்தியாசம் உண்டு.

நாம் வாசிக்கும் வீணையில் ஸ்வர ஸ்தானங்கள் ஒலிக்கும். ஸ்வர ஸ்தானங்களுடைய ஒலி நமக்கு கேட்கும். ஆனால், அந்த அட்சரங்கள் நமக்கு கேட்காது. அதாவது ஸரிகமபதநிஸ என்பவற்றின் ஸ்வர ஸ்தானம் கேட்கும். ஆனால், அட்சரங்கள் கேட்காது. ஆனால், சரஸ்வதி வாசிக்கும் வீணையில் ஸ்வர ஸ்தானமும் கேட்கும். அட்சரமும் கேட்கும். அதனால் சரஸ்வதி வீணை வாசிக்கிறாளா அல்லது பாடுகிறாளா என்று தெரியாது.

எனவே, வீணையே பாடும். அப்படிப்பட்ட வீணைதான் இருப்பதிலேயே இனிமையான ஒரு நாதம் என்று வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட கச்சபி எனும் வீணையிலிருந்து வரும் நாதத்திற்கு அம்பிகையினுடைய வாக்கை ஒப்பிடலாமா என்றால் நிச்சயம் ஒப்பிட முடியாது என்கிறார்கள், வசின்யாதி வாக் தேவதைகள். ஒருமுறை அம்பிகையின் ஸ்ரீபுரம் தர்பாரில் ஸ்ரீசக்ர சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது அம்பாளின் முன்னால் சரஸ்வதி கச்சபி என்கிற தன் வீணையை வாசித்தாளாம். அந்த வீணையை வாசிக்கும்போது ஏதோ ஒரு இடத்தில் சரஸ்வதி தேவியினுடைய சாதூர்யம் மிகவும் வெளிப்படுகின்றது.

சரஸ்வதி அதீதமாக வீணையை வாசிச்சவுடனே அம்பிகை சபாஷ்… பலே… என்பதுபோல் அம்பாளின் வாக்கு வெளிப்பட்டதாம். இப்படி அம்பிகையின் வாக்கு வெளிப்பட்ட இனிமையில் அந்த கச்சபி வீணையின் இனிமை ஒன்றுமில்லாமல் போனது. அதனால் அந்த சரஸ்வதி இப்படிப்பட்ட இனிமையான வாக்கு கொண்ட அம்பிகையின் முன்னால் வாசிக்கக் கூடாது என்று வீணையை மூடி வைத்து விட்டாளாம். சரஸ்வதியை பாராட்டுவதற்காக இரண்டு வார்த்தை சொன்னால் அந்த பாராட்டு வார்த்தைக்கு முன்னால் இந்த கச்சபி ஒன்றுமே இல்லை என்றாயிற்று. விநிர்பத்ஸதி கச்சபி… அம்பிகையின் வாக்கிற்கு முன்னால் கச்சபி வெட்கப்பட்டுவிட்டது என்று சொல்கிறார்கள். இன்னும் ஆழமாகப் பார்த்தால் அம்பிகையின் வாக்குக்கு முன்னால் சரஸ்வதியின் வீணை வெட்கப்படுகின்றது.

இந்த நாமத்தைக் கொண்டு ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரியின் 66வது ஸ்லோகத்தை அமைக்கிறார். இந்த ஸ்லோகம் அம்பிகையின் வாக்கினுடைய இனிமையை சொல்லக் கூடிய ஸ்லோகம். இந்த நாமத்தின் அத்யாத்மமான ஆழமான விஷயத்தையும் கொஞ்சம் பார்ப்போம் வாருங்கள். நாம் ஜென்மா எடுத்ததிலிருந்து எத்தனையோ விதமான ஓசைகளை கேட்போம். எத்தனையோ விதமான சங்கீதம் இசை என்று நிறைய கேட்டபடி இருக்கின்றோம். அதில் நல்ல ஓசை, சுமாரான ஓசை… என்னென்னவெல்லாமோ கேட்கின்றோம். அப்பர் சுவாமிகள் கூட ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடுகின்றார். அம்பிகைக்கே ஓசை கொடுத்த நாயகி என்றொரு பெயரும் உண்டு.

நாத சொரூபமாக இறைவனே இருக்கிறான் என்று சொன்னால் கூட பல ஓசைகள் இங்கு நம் காதுகளுக்கு மட்டும் கேட்கக் கூடிய அளவுக்கு உள்ளவை. நம் காதையும் தாண்டி சில சூட்சுமமான ஓசை உண்டு. அது நாம் யோக மார்க்கத்தில் போகும்போது… தச நாதங்கள் என்று உள்ளது. யோக மார்க்கத்தில் மூலாதாரத்திலிருந்து ஸ்வாதிஷ்டானத்திற்கு முன்னேறும்போது சில நாதங்கள் கேட்கும். ஸ்வாதிஷ்டானத்திலிருந்து மணிபூரகத்திற்கு வரும்போது சில நாதங்கள் கேட்கும்.

இதேபோல அனாகதத்திற்கு வரும்போது சில நாதங்கள் கேட்கும். இப்படி பத்துவிதமாக நாதத்தை அதாவது ஓசையை பிரிக்கிறார்கள். புல்லாங்குழல், வீணை, மத்தளம், மேகங்கள் நகரும் ஓசை (மேக நாதம்), இவ்வாறு எல்லாவற்றையும் தாண்டி கேட்கக் கூடியது பிரணவநாதம். ஓங்கார நாதம். இந்த ஓசைகளெல்லாம் யோக ரீதியில் நாம் கேட்கக் கூடியது. இப்படி ஸ்தூலமாக காதுகளால் தினப்படி ஓசைகளை கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

ஆனால், இதையெல்லாம் தாண்டி அதாவது ஸ்தூலமான ஓசை, சூட்சுமமான ஓசை என்று பிரிக்க முடியாத ஓசை ஒன்று இருக்கின்றது. பிரிக்கமுடியாத நாதம் இருக்கிறது. அந்த நாதம் எதுவென்று தெரியுமா… அந்த நாதமே குருவினுடைய உபதேசம். அது ஸ்தூலமும் கிடையாது. சூட்சுமமும் கிடையாது. அது ஸ்தூல சூட்சுமங்களெல்லாம் கடந்து இருக்கக் கூடியது. ஏனெனில், நமக்கு உண்மை பொருளை காண்பித்து கொடுக்கக்கூடியது குருவினுடைய உபதேசமேயாகும். அது மந்திரமாக இருக்கலாம். மகாவாக்கியமாக இருக்கலாம்.

வார்த்தையாக இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த குரு உபதேசம் என்பது நாம் கேட்கக் கூடிய எல்லா ஸ்தூல ஒலிகளுக்கும் சூட்சும ஒலிகளுக்கும் அப்பாற்பட்டது. அந்த குரு கொடுக்கக் கூடிய ஓசை, நாதமானது நம்மை நம்முடைய சொரூபத்தில் கொண்டுபோய் நிறுத்தும். அப்படி சொரூபத்தில் கொண்டுபோய் நிறுத்தக் கூடியது அந்த நாதம். அந்த சொரூபத்தில் கொண்டுபோய் நிறுத்தக் கூடிய அந்த நாதத்தினுடைய சொரூபம்தான் அம்பிகையினுடைய வாக்கு. அதனால்தான் கச்சபி ஓசையை ஸ்தூலமாகவும், சரஸ்வதி பாடக்கூடியதை சூட்சுமமாகவும் கொள்ளலாம்.

இப்படி இந்த இரண்டு ஓசைகளையும் வெட்கப்படச் செய்வது எதுவெனில் அம்பிகையினுடைய ஒரு வார்த்தை. அம்பிகை சொல்லக்கூடிய ஒரு வார்த்தையினுடைய இனிமை. சரஸ்வதியையும் கச்சபியையும் வெட்கப்பட வைத்து விட்டது. குருவின் வாக்கிற்கு முன்னால் மற்ற எந்த ஓசையும் ஒன்றுமில்லாமல் போய்விடும். அதனால்தான் என்னவோ தெரியவில்லை. நிறைய மகான்கள் மௌனியாக இருந்திருக்கிறார்கள். எப்படி சரஸ்வதி வீணையை மூடி வைத்து விட்டாளோ அதுபோல மகான்களும் உணர்ந்ததை உணர்ந்ததற்குப் பிறகு அமைதியாகி விட்டார்கள்.

அவர்களின் வாக்கை உபயோகப்படுத்தவே இல்லை. அதனால்தான் ரமண பகவான் மௌனமே இடையறாத பேச்சு என்கிறார். தேவைப்பட்டாலொழிய அவர்கள் பேசுவதேயில்லை. பிரம்ம ஞானம் என்கிற அம்பிகையின் அருளானது எல்லா ஓசைகளையும் நிறுத்தி தன் ஆத்மாத்ம இனிமையை அளிக்கவல்லது. அதை விவரிக்க முடியாது நாமும் அமைதியாக இருக்க வேண்டியதுதான். அந்த ஒரு இனிமையான சொல் நாம் எப்போது கேட்போம் என்று தவமிருப்பதை தவிர வேறு வழியில்லை.

இதற்கான கோயிலாக வேதாரண்யம் வேதாரண்யஸ்வரர் கோயிலை சொல்லலாம். நேராக இந்த நாமத்தின் பொருளாகவே இந்தக் கோயில் வருகின்றது. இங்குள்ள அம்பிகையின் பெயர் என்ன தெரியுமா? யாழைப் பழித்த மொழியம்மை. அதாவது சரஸ்வதிமீட்டும் யாழ் எனும் வீணையைவிட அம்பிகையின் வாக்கு உயர்வானது என்றும் அதனாலேயே சரஸ்வதி தன் வீணையை வைத்து விட்டாள் என்றும் பொருள் வருகின்றது.

மேலும், வேறெந்த கோயிலிலும் இல்லாத விஷயமாக இங்குள்ள சரஸ்வதியின் கையில் வீணை இருக்காது. பொதுவாக எல்லா கோயில்களிலும் வீணையோடு கூடிய சரஸ்வதி சிலையை பார்த்திருப்போம். இங்குள்ள சரஸ்வதியின் வீணை இல்லாமல் சரஸ்வதி கண்மூடி அமர்ந்திருப்பதை அதாவது தவக்கோலத்தில் இருப்பதுபோல் இருப்பதை பார்க்கலாம்.

The post குருவின் உபதேசத்தை பெற்றுத் தரும் லலிதாம்பிகை appeared first on Dinakaran.

Tags : Lalithambigai ,Adi Shakti ,Lalita Sahasranamams ,Ramya Vasudevan ,Krishna ,Nija Sallaba ,Madurya Vinirpatsita Kachapi ,Saraswati ,Kachapi ,
× RELATED ஞானத்தையும் பக்தியையும் பெருகச் செய்வாள் லலிதாம்பிகை