×

வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்!

நன்றி குங்குமம் தோழி

மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பவர்கள்தான் ஆசிரியர்கள். ஆனால் அந்த ஆசிரியர்களுக்கே எப்படி பாடம் சொல்லித் தரவேண்டும் என்று பயிற்சி அளித்து வருகிறார் சென்னையை சேர்ந்த உமா மகேஸ்வரி. இவர் ‘சூப்பர் ஸ்டார் அகாடமி’ என்ற பெயரில் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிவதற்கான பயிற்சி மையம் ஒன்றை அமைத்து அதன் மூலம் பல பெண்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘நான் ஆசிரியராகத்தான் வேலை பார்த்து வந்தேன். அப்போதுதான் எனக்கு மான்டசரி கல்விமுறைப் பற்றி தெரிய வந்தது. இது ஒரு சர்வதேச கல்வி முறை என்பதால் அதற்கான பயிற்சியினை நான் 2006ல் எடுத்தேன். பயிற்சி முடித்த பிறகு நான் ஆசிரியராக வேலை பார்க்க திட்டமிட்ட போது, நான் பயிற்சி பெற்ற மையத்திலேயே என்னை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்சியாளரா சேரச் சொன்னாங்க. அந்த சமயத்தில், நாம வேறு ஒருவருக்கு வேலை பார்ப்பதற்கு பதில் நாமே ஏன் ஒரு பயிற்சி மையத்தினை ஆரம்பிக்கக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. மேலும் மான்டசரி கல்வி முறை ஒவ்வொரு பள்ளிகளும் பின்பற்ற வேண்டியது என்பதால் இதற்கான டிமான்ட் அதிகமாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. இதை மனதில் கொண்டுதான் நான் என்னுடைய பயிற்சி மையத்தினை துவங்கினேன். இதன் மூலம் பல ஆசிரியர்களை உருவாக்க விரும்பினேன்.

மான்டசரி கல்வி என்பது சர்வதேச அளவிலான கல்விமுறை, இதனை இந்திய கல்வி முறையில் இணைக்க முடியாது. காரணம், இங்கு ஆசிரியர் வேலைக்கு பி.எட் படிச்சிருக்க வேண்டும். அதனால் நான் என்னுடைய பயிற்சி மையத்தினை சர்வதேச அளவில் பதிவு செய்து அதற்கான ஐ.எஸ்.ஓவினை பெற்றிருக்கேன். அப்போதுதான் எங்களின் பயிற்சிக்கான சான்றிதழ் பள்ளிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரமுடியும்.

மேலும் நாங்க பயிற்சி அளிக்கும் முறையினை ஆய்வு செய்த பிறகுதான் எங்க மான்டசரி ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பாங்க. நாங்க தமிழ்நாடு மட்டுமில்லாமல் மத்திய அரசு மற்றும் சர்வதேச அளவில் பதிவு செய்திருப்பதால், தமிழ்நாடு, இந்தியா மட்டுமில்லாமல் அரபிய நாடுகளிலும் அவர்கள் வேலை பார்க்க முடியும்’’ என்றவர் ஆசிரியர் பயிற்சி அளிக்கும் முறைகள் குறித்து விவரித்தார்.

‘‘மான்டசரி என்பது சர்வதேச அளவிலான பயிற்சி என்றாலும், அதற்கான தனிப்பட்ட பயிற்சி முறைகள் உள்ளன. அதன் அடிப்படையில்தான் நாங்க பயிற்சி அளிக்கிறோம். இங்கு மான்டசரி, மான்டசரி கிண்டர்கார்டன் மற்றும் நர்சரிக்கான டிப்ளமா பயிற்சி அளித்து வருகிறோம். மான்டசரி கல்வி முறைகளை மட்டுமே பின்பற்றும் பள்ளிகள் சென்னையில் மிகவும் குறைவு. அவர்கள் மான்டசரி மட்டுமில்லாமல் உடன் கிண்டர்கார்டன் மற்றும் நர்சரி முறையிலும் பாடங்களை சொல்லித் தருகிறார்கள். அதனால்தான் எங்களுடைய பயிற்சி மையத்தில் அனைத்துக்கான பாட முறைகள் குறித்து ஆசிரியர் பயிற்சி அளிக்கிறோம்.

அப்போது தான் ஆசிரியரால், மூன்று பாட முறைகளில் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தங்களின் டீச்சிங் முறையினை கையாளமுடியும். சொல்லப்போனால் தற்போது பல அரசுப் பள்ளிகளிலும் மான்டசரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வேலைக்கு நியமிக்கிறார்கள். +2 வரை படித்திருப்பவர்கள் மான்டசரி மற்றும் கிண்டர்கார்டன் பயிற்சி பெறலாம். பட்டப்படிப்பு பெற்றவர்கள் மான்டசரி கிண்டர்கார்டன் மற்றும் நர்சரிக்கான பயிற்சி எடுக்கலாம். இவர்கள் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு பாடம் எடுக்கலாம்.

பாட முறைகள் மட்டுமில்லாமல், ஒரு ஆசிரியர் குழந்தைகளுக்கு இடையே உள்ள உறவு மற்றும் பள்ளியின் செயல்பாடு குறித்தும் தெரிந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் குழந்தைகளின் சைக்காலஜி, பள்ளி நிர்வாகம், நியூட்ரிஷன் மற்றும் டயட், சைல்ட் கம்யூனிகேஷன், ஸ்பீச் தெரபி, ஸ்பெஷல் குழந்தைகளுக்கான கல்வி போன்ற பயிற்சிகளும் இதில் அடங்கும். ஒவ்ெவாரு ஆசிரியருக்கும் குழந்தைகளின் உளவியல் தெரிந்திருப்பது அவசியம்.

அதன் மூலம் அவர்களின் தனிப்பட்ட திறமை என்ன என்று அறிந்து அதற்கு ஏற்ப அவர்களை ஊக்குவிக்க முடியும். பள்ளி நிர்வாகம் பொறுத்தவரை ஒரு பள்ளி எவ்வாறு செயல்படுகிறது, தலைமை ஆசிரியரின் பங்கு என்ன என்பதையும் ஆசிரியராக இருப்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். நியூட்ரிஷன் மற்றும் டயட், குழந்தையின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் வளரக்கூடிய வயசில்தான் அவர்கள் பள்ளியில் இணைவார்கள். அது குறித்து ஒவ்வொரு ஆசிரியரும் அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் அவர்களால், பெற்றோர்களுக்கு என்ன ஆரோக்கியமான உணவு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் அதனால் குழந்தைக்கு என்ன பலன் என்பதை எடுத்துச் சொல்ல முடியும்.

சைல்ட் கம்யூனிகேஷன், சில குழந்தைகள் வாய் திறந்து பேசவே மாட்டாங்க. ஒரு சில குழந்தைக்கு பேசுவதில் சிக்கல் இருக்கும். அதை ஒரு ஆசிரியராக போக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பயிற்சிகளும் ஆசிரியர்களுக்கு நாங்க கொடுத்து வருகிறோம். மேலும் மான்டசரி, கிண்டர்கார்டன் போன்ற பாடங்கள் பெரும்பாலும் செயல்முறை கல்வித் திட்டம் என்பதால், அதற்கான பொருட்களை எவ்வாறு உருவாக்க வேண்டும், அதனை பயன்படுத்தும் முறைக்கான பயிற்சிகளும் அளிக்கிறோம். மேலும் ஒவ்வொரு வருடமும் கல்வி முறையில் ஏற்படும் மாற்றம் மற்றும் பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப எங்களின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். இவை தவிர ஃபோனிக்ஸ், அபாகஸ், வேதிக் மாத் போன்ற பயிற்சிகளும் உண்டு’’ என்றவர் வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘பல பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான டிமான்ட் அதிகமாக உள்ளது. எங்களின் பயிற்சி மையத்திற்கு சென்னையில் மட்டும் பத்து கிளைகள் உள்ளன. அதனால் அதன் அருகில் இருக்கும் பள்ளிகளுடன் நாங்க டையப் வைத்திருப்பதால் அவர்களுக்கு டிமான்ட் இருக்கும் போது எங்களிடம் பயிற்சி பெற்றவர்களை அங்கு நியமிப்போம். இங்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் அந்தந்த துறையில் திறமை வாய்ந்தவர்கள். அதாவது நியூட்ரிஷன் மற்றும் டயட் குறித்து உணவியல் நிபுணர் பயிற்சி அளிப்பார். ஆங்கிலம் சரளமாக பேச கேம்பிரிட்ஜில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்திருக்கிறோம். இவ்வாறு ஒவ்வொரு பாடங்களுக்கும் தனிப்பட்ட ஆசிரியர்கள் இருப்பதால், ஒரு ஆசிரியர் பயிற்சிக்கு தேவையான அனைத்து முறைகளையும் அவர்களுக்கு சொல்லித்தர முடிகிறது.

எங்களின் அடுத்த கட்டம், மான்டசரியில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் நியமனம் செய்வதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறோம். அதற்கு தனிப்பட்ட பாடமுறை என்பதால், அதனை வரும் வருடங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். சென்னையில் பல இடங்களில் கிளைகள் உள்ளன. அதேபோல் திருச்சி, மதுரை போன்ற இடங்களில் ஃபிரான்சைசி முறையில் பயிற்சி மையங்களை துவங்கும் எண்ணம் உள்ளது.

அடுத்து பிளே ஸ்கூல் அமைக்க விருப்பம் உள்ள பெண்களுக்கும், அதற்கான அனைத்து வசதிகளும் நாங்க ஏற்படுத்தி தருகிறோம். சில பெண்கள் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்ய விரும்புவாங்க. அவர்களுக்கு ஃபோனிக்ஸ், வேதிக் மாத், அபாகஸ் போன்ற ஸ்பெஷல் ஸ்கில் பயிற்சி அளித்து அதன் மூலம் அவர்கள் தனிப்பட்ட முறையில் பயிற்சிக்கூடம் அமைக்கவும் உதவி செய்கிறோம். ஒரு சில பெண்கள் சிறப்பு ஸ்கில் பயிற்சியுடன் சேர்த்து டியூஷனும் எடுக்கிறார்கள். இவ்வாறு பல தொழில் முறைகளை பெண்களுக்கு ஏற்படுத்தித் தர முக்கிய காரணம் பெண்களும் தொழில்முனைவோராக மாற வேண்டும் என்பதுதான். வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. நாம்தான் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார் உமா மகேஸ்வரி.

தொகுப்பு: ஷன்மதி

The post வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Uma Maheshwari ,Chennai ,Superstar Academy ,
× RELATED கிச்சன் டிப்ஸ்