×

‘‘பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்’’

கிறிஸ்தவம் காட்டும் பாதை

‘‘கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்’’ என்று புனித பவுலடியார் கூறுகிறார். ‘பிறந்தார்’ என்று கூறாமல் ‘வந்தார்’ என்று அவர் கூறுகிறார். ஒவ்வொரு நாளும் இந்த உலகத்தில் ஏராளமானோர் பிறக்கிறார்கள். ஆனால், இயேசுவோ வெறும் ‘பிறந்தவரல்ல’, ‘வந்தவர்’. ‘வந்தவர்’ என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாலே, கிறிஸ்துமஸ் ஏன் இவ்வளவு சிறப்பான ஒரு பண்டிகையாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

உலகத்தில் பிறக்கிறவர்கள் அவர்கள் பிறந்ததில் இருந்துதான் வாழ ஆரம்பிக்கிறார்கள் அல்லது தாயின் கருவில் இருந்தே அவர்கள் வாழ்க்கை துவங்குகிறது என்றுகூட சொல்லலாம். ஆனால், இயேசுகிறிஸ்துவின் பிறப்பு அவருடைய வாழ்க்கையின் ஆரம்பமல்ல. அவர் ஏற்கனவே இருந்தவர். பிறப்பின் மூலமாக அவர் இந்த உலகத்தில் வந்தவர். யோவான் சீடர் இதைக் குறித்து திருமறையில் எழுதும்போது, ‘‘இவர் தொடக்கத்தில் இருந்தவர், முதலும் நிறைவுமானவர், தொடக்கமும் முடிவுமானவர், கடவுளாகவே இருந்தவர், மனுஷனைப் பிரகாசிக்கிற ஒளியாய் இருக்கிறவர்’’ என்றும், ‘‘அவர் இப்பொழுது மாம்ச சரீரத்திலே உலகத்தில் வந்திருக்கிறார்’’ என்றும் கூறுகிறார்.

ஆக, தொடக்கத்திலேயே இருந்தவர் பிறப்பின் மூலமாக இந்த உலகத்திலே பிரவேசித்தார் என்று எழுதுகிறார். உலகத்திலே பிறக்கிற மற்றவர்களுக்கும் இவருக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் என்பதைப் பாருங்கள். ஆகவே கிறிஸ்துமஸ் என்பது ஒரு சாதாரண மனிதனின் பிறப்பையல்ல, கடவுளே மனிதனாக இந்த உலகத்திற்கு வந்ததைக் குறிக்கிறது. இயேசுகிறிஸ்துவின் பிறப்பு ஒரு சாதாரண மனிதனின் பிறப்பைப் போலத் தோன்றினாலும், அது எல்லாம் வல்ல கடவுளின் உலகப் பிரவேசம்!

இது ஏதோ எதிர்பாராமல் நடந்த ஒன்றல்ல. திருமறை பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இவரது பிறப்பையும், அதன் தொடர்பான பல விவரங்களையும் முன்னறிவித்திருக்கிறது. இயேசுகிறிஸ்து எந்த ஊரில் பிறப்பார் என்பதை அவர் பிறப்பதற்கு 500 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மீகா என்ற இறைவாக்கினர் முன்னறிவித்தார். இயேசுகிறிஸ்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் எனும் ஊரில் பிறப்பார் என்பதை முன்னறிவித்தார் (மீகா 5:2). மேலும், ஏசாயா இறைவாக்கினர்,

இயேசுகிறிஸ்து பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே, ‘‘இதோ, ஒரு கன்னி கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவாள்’’ என்று கிறிஸ்துவின் பிறப்பை முன்னறிவித்தார். இயேசுகிறிஸ்து பிறந்த பிறகு மத்தேயு என்ற நற்செய்தியாளரும், இந்த இறைவாக்கின் நிறைவேறுதலாகத்தான் இயேசுகிறிஸ்து பிறந்தார் என்பதைச் சுட்டிகாட்டி, ‘இம்மானுவேல்’ என்பதற்கு ‘கடவுள் நம்மோடிருக்கிறார்’ என்று அர்த்தமாம் என்று அந்தப் பெயரின் அர்த்தத்தைக் குறிப்பிட்டு, இவர் மனிதனாக வெளிப்பட்ட கடவுள் என்பதை இவ்வாறாக வெளிப்படுத்துகிறார்.

இந்தக் காரியங்கள் எல்லாம் இயேசுகிறிஸ்துவின் பிறப்பு மற்ற எல்லா பிறப்புகளைக் காட்டிலும் மிகவும் சிறப்பானது என்பதைக் காட்டுகிறது. கிழக்கில் இருந்து வந்த அந்த ஞானிகளும், எருசலேம் நகரத்திற்கு வந்து, குழந்தையாய் இருந்த இயேசுவைப் பணிந்து, தொழுது கொண்டு, பொன்னையும், தூபவர்க்கத்தையும், விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களையும் காணிக்கையாக வைத்தார்கள். ஒரு நட்சத்திரம் அவர்களுக்கு முன்னால் சென்று, இயேசுகிறிஸ்து பிறந்த இடம் வரை அவர்களை அழைத்துச் சென்றது என்ற அற்புதத்தையும் திருமறையில் வாசிக்கிறோம்.

மேலும் ஆட்டு மந்தையைக் காத்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு விண்ணகத் தூதர் காட்சியளித்து, இயேசு பிறந்த செய்தியைக் கூறியது மட்டுமல்லாமல், இன்னும் பல விண்ணகத் தூதர்கள் கூட்டமாய்த் திரண்டு வந்து, ‘உன்னதத்தில் இருக்கிற கடவுளுக்கு மாட்சியும், பூமியிலே சமாதானமும், மானிடர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, கடவுளைத் துதித்தார்கள்’ (லூக்கா 2:14) இப்படி இந்தச் செய்தியைக் கேட்ட அந்த மேய்ப்பர்கள் வந்து இயேசு கிறிஸ்து பிறந்திருப்பதைக் கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்து தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைப் பிரபலப்படுத்தினார்கள்.

இந்த நிகழ்வுகளெல்லாம் இவர் பிறப்பு சாதாரணமானதல்ல, கடவுளே மனு உருக்கொண்டு இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது. ஆகவே கிறிஸ்துமஸ் என்பது ஒரு மனிதன் இந்த உலகத்தில் பிறக்கும் ஒரு சாதாரண சம்பவமல்ல. அனைத்தையும் படைத்த கடவுளே மனுவுரு எடுத்து, ஒரு கன்னிப் பெண்ணின் மூலமாக இந்த உலகத்தில் பிரவேசித்த இந்த ஆச்சரியமான நிகழ்வைத்தான் கிறிஸ்துமஸ் என்று கொண்டாடுகிறோம். ஆக, அவர் உலகத்தில் பிறந்தவர் மட்டுமல்ல, அவர் உலகத்திலே வந்தவர்.!

பேராயர்
தே.ஜெயசிங் பிரின்ஸ்
பிரபாகரன் – மதுரை

The post ‘‘பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்’’ appeared first on Dinakaran.

Tags : Christ Jesus ,Christianity ,St. Paul ,Jesus ,
× RELATED கிறிஸ்தவம் காட்டும் பாதை: மனம் விரும்புவதைச் செய்யுங்கள்!