×

மகானின் வாக்கு!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மகான்கள் வாக்கு ஒருபோதும் பொய்யாகாது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அது அப்படியே பலிக்கும். அந்த அளவிற்கு இறையருள் நிரம்பப் பெற்றவர்கள் மகான்கள். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் ஸ்ரீபாத சுவாமி! காசியை இருப்பிடமாகக் கொண்ட அவர், ராமேஸ்வர யாத்திரைக்காகப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். சீடர்கள் சிலர் பின் தொடர்ந்தார்கள். வழியில் ஆலந்தி எனும் ஊரில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்றில், சீடர்களுடன் முகாமிட்டார் மகான். அந்த ஆஞ்சநேயர் கோயிலில் ஒரு பெரும் அரசமரம் இருந்தது. கோயிலுக்கு வருபவர்கள் அந்த அரச மரத்தையும் வலம் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மகான் அந்தக்கோயிலில் தங்கியிருந்த போது, கோயிலுக்கு வந்தவர்கள் மகானையும் தரிசித்து வணங்கினார்கள்.

அப்போது கோயிலுக்கு வந்த ருக்மிணி என்ற பெண், மகானைக் கண்டு வணங்கி எழுந்தாள். யாரோ ஒரு மகான் என்று எண்ணியிருந்தாளே தவிர, அவர்தான் ஸ்ரீபாத சுவாமி என்ற மகான் என்பது ருக்மிணிக்குத் தெரியாது.அவள் வணங்கி எழுந்ததும், ‘‘புத்ரவதி பவ!’’ என்று ஆசிர்வதித்தார் மகான். ‘‘நீ ஒரு குழந்தைக்குத் தாயாவாய்!’’ என்று ஆசி வழங்கிய மகானின் வார்த்தைகளைக் கேட்டதும், ருக்மிணி வருந்தினாள். காரணம்? மகான்களின் வாக்கு பொய்யாகாது. ஆனால் ருக்மி ணியின் கணவர் விட்டல்பந்த் என்பவரோ, காணாமல் போய் ஆண்டுகள் கடந்து விட்டன. தெளிவான தகவலும் இல்லை. அப்படியிருக்கக் குழந்தை எவ்வாறு பிறக்கும்? அதை எண்ணித்தான் அழுதாள் ருக்மிணி.

‘‘அம்மா! ஏன் அழுகிறாய்?’’ எனக் கேட்டார் மகான். ருக்மிணி சொல்லி விட்டாள்; ‘‘சுவாமி! என் கணவர் காணாமல் போய் விட்டார். ஆண்டுகள் பல ஆகி விட்டன. சமீபத்தில் தான் அவர் காசியில் ஸ்ரீபாத சுவாமி என்ற மகானிடம் துறவு பெற்று, அவருடன் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் தாங்கள் இப்படி ஆசி வழங்கி விட்டீர்களே! அதை நினைத்துத் தான் அழுகிறேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை’’ என்றாள் ருக்மிணி. ருக்மிணி சொன்னதைக்கேட்ட மகான் ஒரு சில விநாடிகளில் உண்மையைப் புரிந்து கொண்டார்; ‘‘நம்மிடம் சமீபத்தில் சந்நியாசம் பெற்றுத் துறவியாக இருக்கும் சைதன்யா தான் இந்தப் பெண்ணின் கணவர். எந்தச் சொந்த பந்தமும் இல்லை என்று சொல்லியல்லவா துறவு பெற்றார் அவர்? காசியில் நம் மடத்தி லேயே இருக்கும் அவரை, நாம் திரும்பிப்போனதும் விசாரிக்க வேண்டும்’’ எனத் தீர்மானித்தார் மகான்.

ஆகவே தன்னை வெளிப் படுத்திக் கொள்ளாமல், ‘‘அம்மா! நீ கவலைப்படாதே! என்னவென்று நான் விசாரித்துப் பார்க்கி றேன். நீ கவலைப் படாமல் திரும்பிப் போ! உனக்குக் குழந்தை பிறக்கும்’’ என்றார் மகான் ஸ்ரீபாத சுவாமி. ருக்மிணி வீடு திரும்பினாள்; ‘‘தெய்வமே சொல்லித்தான் என் திருமணம் நடந்தது. கணவர் எங்கோ போய் விட்டார். இந்த மகானோ இப்போது, ‘குழந்தை பிறக்கும்’ என்று அழுத்தமாகச் சொல்லி ஆசி கூறுகிறார்.

தெய்வமே! ஒன்றும் புரியவில்லையே!’’ என்று எண்ணியபடியே வீடு திரும்பினாள் ருக்மிணி. ருக்மிணியின் கல்யாணம் தெய்வம் சொல்லித்தான் நடந்தது. அவள் கணவரான விட்டல் பிறந்ததே, மகான் ஒருவரின் ஆசியால் தான். (அதைப் பார்க்கலாம். உண்மைகள் புரியும்) மகாராஷ்டிரத்தில் உள்ள பிரதிஷ்டானபுரி (பைதான்) எனும் ஊருக்கருகில் உள்ள ஒரு (ஏபகான்வ்) கிராமத்தில் இருந்தவர் கோவிந்தபந்த்; நற்குணங்களும் நற்செய்கைகளுமே வாழ்வாகக் கொண்டிருந்த அவருக்குப் பிள்ளை இல்லை.

ஒருமுறை கஹினிநாத் எனும் மகான் அந்தக் கிராமத்திற்கு வருகை புரிந்தபோது, அவரை வணங்கிய கோவிந்த்பந்த் தன் மனக்குறையை மகானிடம் சொல்லி முறையிட்டார். வந்த மகானும், ‘‘உத்தமமான மகப்பேறு வாய்க்கும்’’ என்று ஆசி கூறி அகன்றார். அந்த மகானின் ஆசிர்வாத பலத்தால், கோவிந்த்பந்திற்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. விட்டல் எனப்பெயர் இட்டார்கள். சிறு வயதிலிருந்தே தெய்வபக்தியுடன் புத்திசாலியாகவும் இருந்தார் விட்டல்; தலைசிறந்த கல்விமானாக ஆனார். ஒரு சமயம் தீர்த்த யாத்திரையாக வந்து கொண்டிருந்த விட்டல், ஆலந்தி என்ற ஊரில் சித்தோபந்த் என்பவரைச் சந்தித்தார். சித்தோபந்த் பெரும் செல்வந்தர். அவருக்குத் திருமண வயதில் ருக்மிணி என்ற பெண் இருந்தாள்.

ஒருநாள் சித்தோபந்த் கனவில் பண்டரிநாதன் காட்சியளித்து, ‘‘இங்கு வந்திருக்கும் என் பக்தனும் நல்லவனுமான விட்டலுக்கு, உன் மகள் ருக்மிணியைத் திருமணம் செய்து வை!’’ என உத்தரவு இட்டார்.அதை ஏற்ற சித்தோபந்த், விட்டலுக்குத் தன் மகளான ருக்மிணியைத் திருமணம் செய்து வைத்தார். இல்லறம் நல்லறமாகவே நடந்து வந்தது. ஆனால் மகப்பேறு இல்லை. அதே சமயம் விட்டலின் மனது தெய்வ நாட்டத்திலேயே அழுத்தமாக இருக்கத் தொடங்கியது. சொல்லப்போனால், அவர் மனது துறவறம் ஏற்பதைப் பற்றி்கூடச் சிந்திக்கத் தொடங்கியது.

ஆனால் விட்டல் துறவறம் ஏற்பதை அவர் மனைவி விரும்பவில்லை. அந்த நேரத்தில்தான், ஒருநாள் தீர்த்த யாத்திரை என்ற பெயரில் வீட்டை விட்டுப் புறப்பட்ட விட்டல், காசிக்குப் போன போது அங்கே பாத சுவாமி என்ற மகானைச் சந்தித்தார்; ‘‘அடியேனுக்கு எந்தச் சொந்த பந்தமும் இல்லை. தெய்வீகத்தில் உன்னத நிலையை அடைய விரும்புகிறேன். அடியேனைச் சீடனாக ஏற்றுக் குரு உபதேசம் செய்யுங்கள்!’’ என வேண்டினார் விட்டல்.

அதை ஏற்ற குருவும், விட்டலுக்கு மந்திர உபதேசம் செய்து, அவருக்கு ‘சைதன்யா’ எனத் தீட்சா திருநாமம் சூட்டினார். அந்த சைதன்யாவையும் மற்ற சில சீடர்களையும் காசியில் தன் ஆசிரமத்திலேயே விட்டு விட்டுத்தான், பாதசுவாமி தீர்த்த யாத்திரைக்கு வந்திருந்தார். அவ்வாறு வந்திருந்த இடத்தில் அவரை, ருக்மிணி தரிசித்து நமஸ்காரம் செய்ய, ‘‘உத்தமமான மகப்பேறு வாய்க்கும்’’ எனஆசிர்வதித்தார் பாதசுவாமி. இப்போது ருக்மிணி மூலம் உண்மை தெரிய வந்ததும், தீர்த்த யாத்திரை முடிந்து காசிக்குத் திரும்பியதும் முதல்வேலையாகச் சைதன்யாவை அழைத்து, உண்மையைக் கூறுமாறு வற்புறுத்தினார்.

சைதன்யா உண்மையை அப்படியே ஒப்பித்து விட்டார்; தன்னுடைய முன்னாள் பெயர் விட்டல் என்பதில் தொடங்கி, தனக்கு மனைவி இருப்பது உண்மையென்றும் ஆனால் தன் மனது குடும்ப வாழ்க்கையை விரும்பவில்லை என்றும், தான் துறவு பெறுவதைத் தன் மனைவி விரும்பவில்லை என்பதையும் விரிவாகக் கூறினார்; அதற்காகத் தன்னை மன்னிக்கும்படியும் வேண்டினார்.

‘‘நான் உன்னை மன்னிக்கத் தயார்! ஆனால் நீ உடனே ஊருக்குத் திரும்பி உன் மனைவியோடு மீண்டும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும்! இது என் கட்டளை!’’ என்றார்குருநாதர். சைதன்யா எனத் துறவுத் திருநாமம் பெற்ற விட்டல், குரு நாதர் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஊர் திரும்பினார்.

திரும்பிவந்த கணவரைக்கண்டு மனம் மகிழ்ந்தாள் ருக்மிணி. ஆனால் ஊர்மக்கள் மகிழ வில்லை; ‘‘சந்நியாசியாக இருந்தவன், எப்படி மீண்டும் குடும்ப வாழ்க்கைக்கு வரலாம்?’’ என்று எல்லோரும் பரிகாசம் செய்தார்கள்; ஏசினார்கள்; இழிவாகப்பேசினார்கள்; கொடுஞ்சொல்லால் காய்ச்சி எடுத்தார்கள். அப்படியும் திருப்திப்படாத ஊர்மக்கள், ஒட்டு மொத்தமாக விட்டலின் குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார்கள்.

ஊர்க்கட்டுப் பாட்டினால் மிகவும் துன்பப்பட்ட விட்டல், ஊருக்கு ஒதுக்குப்புறமாகக் குடியிருக்கத் தொடங்கினார். நாளடைவில் ருக்மிணிக்கும் விட்டலுக்கும் மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையுமாக, நான்கு குழந்தைகள் பிறந்தன. நிவிருத்தி நாதர், ஞானதேவர், சோபானர் என்று ஆண் குழந்தைகளுக்குப் பெயரிட்டு, பெண் குழந்தைக்கு முக்தாபாய் எனப்பெயர் இட்டார்கள்.

இந்த நால்வரையும் முறையே சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மா, பராசக்தி ஆகியோரின் அம்சங்களாகச் சொல்வார்கள். இந்த நால்வருமே ஆன்மிகத்தின் எல்லை கண்ட மகான்கள். இவர்களில் ஒருவரான ஞானதேவர் தான் பிற்காலத்தில் பகவத் கீதைக்கு ‘ஞானேசுவரி’ எனும் புகழ்பெற்ற ஒப்பற்ற விரிவுரை ஒன்று எழுதினார். மகான்களின் வாக்கு ஒருபோதும் பொய்யாகாது; இன்னும் பல மகான்களை உருவாக்கும் என்பதை நிரூபிக்கும் நிகழ்வு இது.

தொகுப்பு: V.R.சுந்தரி

The post மகானின் வாக்கு! appeared first on Dinakaran.

Tags : Mahan ,God ,Sripada Swami ,Kashi ,Rameswara Yatra ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…