×

ரயில் விபத்துக்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?.. ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ரயில் விபத்துக்களை தடுக்கும் வகையில் கவாச் பாதுகாப்பு கவச முறை செயல்படுத்துவது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நான்கு வாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘எதிர்காலத்தில் ரயில் விபத்துகள் எதுவும் நடைபெறாத விதமாக ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பு வாதத்தில், ‘ரயில் பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு உடனடியாக வழிமுறைகளை ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்க வேண்டும்.

இதற்காக தனி குழு அமைக்க வேண்டும். அதாவது உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு அந்த குழு பல்வேறு விவகாரங்களை ஆராய்ந்து தங்களது பரிந்துரைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதனை உடனடியாக ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தவும் ஆணை பிறப்பிக்க வேண்டும்’ என தெரிவித்தார்.

இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவாச் கவசம் திட்டம் உள்ளிட்டவை எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை நான்கு வாரத்தில் தெரிவிக்க வேண்டும்’ என ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டதோடு, ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

The post ரயில் விபத்துக்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?.. ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Union Government ,New Delhi ,Gavach ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...