×

எண்களின் ரகசியங்கள்: சதாபிஷேகம் ஏன்?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

எண்களின் ரகசியங்கள் 34

நாம் பல்வேறு எண்களின் தனித்துவம் மற்றும் சிறப்புகளைப் பார்த்து வருகின்றோம். ஒவ்வொரு எண்ணும் தனித்துவமாகவும், (individual) சேர்க்கையாலும் (combination) சிறப்பு பெறுகின்றது. உதாரணமாக, 23 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம். அது இரண்டு எண்களைக் கொண்டது. இரண்டு என்ற எண் இரட்டைப்படை எண். மூன்று ஒற்றைப்படை எண். இரண்டு எண்களும் இணைந்தது 23. இதைப் பெருக்கினால் எண் ஆறு வரும்.

கூட்டினால் ஒற்றைப்படை எண் 5 வரும். இந்த எண்ணுக்குள் இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு என்ற எண்களின் குணாதிசயங்கள் ஒளிந்து இருக்கின்றன. இப்போது 33 வரை தொடர்ச்சியாகப் பார்த்து விட்டோம். இனி சற்று துரிதமாக சில சிறப்பான எண்களை மட்டும் பார்ப்போம்.

எண் 40தமிழ் இலக்கியத்தில் பல நூல்கள், 40 பாடல்களால் செய்யப்பட்டவையாக இருக்கின்றன. கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்று நான்கு பழந்தமிழ் நூல்கள் உள்ளன. கார் நாற்பது என்பது, கார்கால நிகழ்வுகளையும், களவழி நாற்பது போர்க்களத்தில் நடைபெறும் நிகழ்வுகளைப் பற்றி 40 பாடல்கள் கொண்டநூல். சிறிய நூல்களை சிற்றிலக்கிய வகைகள் என்று சொன்னார்கள். வடமொழியில் பிரபந்த வகை நூல்கள் என்பார்கள்.

பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான செய்திகளை எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்த நூலின் நோக்கம்.

ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல செய்திகளை எடுத்துக் கூறுகின்றது. உதாரணத்துக்கு, ஒரு பாட்டு. சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது; கற்றறிந்த பெரியோர்களைத் துணைகொண்டு வாழ்தலும் மிக நன்று; சிறிய அளவிலாயினும் தேவைப் படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்னும் பொருள்படும் இந்நூற் பாடலொன்று பின்வருமாறு:

`சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.’

கலிங்கத்துப்பரணியிலும் களம் பாடியது என்ற பகுதி 40 பாடல்களைக் கொண்டது. `அனுமன் சாலிசா’ என்றொரு அற்புதமான நூல் உண்டு. அனுமனின் பக்தியைப் போற்றி அமைந்த 40 துதிப் பாடல்களைக் கொண்டது. இதை இயற்றியவர் துளசிதாசர்.

எண் 48

பொதுவாக மண்டலம் என்றால் 48 ஐக் குறிப்பது. கும்பாபிஷேகம் முடிந்து மண்டல அபிஷேக பூஜை 48 நாட்கள் நடைபெறும். எந்த ஒரு மருந்தும், செயலும் தொடர்ந்து 48 நாட்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பார்கள். அப்பொழுதுதான் அது பூர்த்தியான பலனைத் தரும். ஜோதிடம், மருத்துவம், ஆன்மிகம் என்ற அனைத்து துறைகளிலும் 48 என்கிற எண் முக்கியமானது. அது என்ன 48 கணக்கு என்று பார்க்கலாம்.12 ராசிகள், 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள், இவற்றின் கூட்டுத்தொகை 48. ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள். அரை மண்டலம் 24 நாட்கள்.

எண் 50

அரை நூற்றாண்டு என்று சொல்லுகின்றோம். 50 ஆண்டுகள் முடிந்துவிட்டால் பொன்விழா கொண்டாடுகின்றோம். இலக்கியங்களிலும் இந்த 50 எண் கொண்ட தொகை நூல்கள் உண்டு. `ஐந்திணை ஐம்பது’ என்ற நூல் 50 பாடல்களைக் கொண்டது. `அகப்பொருள் துறை’ நூல். `திணைமொழி ஐம்பது’ என்ற ஒரு நூலும் உண்டு. கண்ணன் சேந்தனார் என்பவர் இயற்றிய நூல்.

எண் 55

55 ஆண்டுகள் நிறைந்துவிட்டால், சாந்தி பூஜை செய்துகொள்ள வேண்டும் என்பார்கள். ஒவ்வொரு வயதிற்கும் ஒரு ஒரு சாந்தி பூஜை உண்டு.

எண் 56

புராதன இந்தியாவில் 56 தேசங்கள் இருந்தன என்பார்கள். அவை:-

குருதேசம், சூரசேனதேசம், குந்திதேசம், குந்தலதேசம், விராடதேசம், மத்சுயதேசம், திரிகர்த்ததேசம், கேகயதேசம், பாஹ்லிக தேசம், கோசலதேசம், பாஞ்சாலதேசம், நிசததேசம், நிசாததேசம், சேதிதேசம், தசார்ணதேசம், விதர்ப்பதேசம், அவந்திதேசம், மாளவதேசம், கொங்கணதேசம், கூர்சரதேசம், ஆபீரதேசம், சால்வ தேசம், சிந்துதேசம், சௌவீரதேசம், பாரசீகதேசம், வநாயுதேசம், பர்பரதேசம், கிராததேசம், காந்தாரதேசம், மத்ரதேசம், காசுமீரதேசம், காம்போசதேசம், நேபாள தேசம், ஆரட்டதேசம், விதேகதேசம், பார்வததேசம், சீனதேசம், காமரூபதேசம், பராக்சோதிசதேசம், சிம்மதேசம், உத்கலதேசம், வங்கதேசம் (புராதனம்), அங்க தேசம், மகததேசம், ஹேஹயதேசம், களிங்கதேசம், ஆந்திரதேசம், யவனதேசம், மகாராட்டிரதேசம், குளிந்ததேசம், திராவிடதேசம், சோழதேசம், சிம்மளதேசம் பாண்டியதேசம், கேரளதேசம், கர்னாடகதேசம்.

எண் 60

நம் வாழ்நாளில் 60 என்கிற எண் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. 60-வது வயது தொடக்கத்தில் `உக்ரரத சாந்தி’ பரிகாரம் செய்து கொள்வார்கள். 61-வது வயது தொடக்கத்தில் `சஷ்டி அப்த பூர்த்தி’ விழா எனப்படும் மணிவிழா கொண்டாடுவார்கள். தங்களுக்கு திருமணம் செய்துவைத்த பெற்றோருக்கு பிள்ளைகளெல்லாம் சேர்ந்து திருமணம் செய்துவைத்து மகிழும் ஓர் அற்புத நிகழ்வே அறுபதாம் கல்யாணம். தம்பதிகள் சஷ்டியப்தபூர்த்தி முடித்த பெரியவர்களிடம் ஆசி பெறவும், இளையவர்களை ஆசிர்வதிக்கவும் வேண்டுகிறார்கள்.

ஒரு ஜாதகத்தில் 60-ஆம் ஆண்டு பூர்த்தியின் போது அதே கிரகநிலைகள் இருக்கும் என்பார்கள். எனவேதான் மணிவிழா எனப்படும் சஷ்டி அப்த பூர்த்தி கொண்டாடுகின்றோம். ஆண்டுக்கு ஒரு கலசமாக 60 ஆண்டுகளுக்காக 60 கலசங்களில் புனித நீரை நிரப்பி மந்திரங்கள் ஓதி அபிஷேகம் செய்கிறார்கள். 60 ஆண்டுகள் ஒரு மனிதன் கடந்துவிட்டாலே சீனியர் சிட்டிசன் என்கிறோம். ஓரளவு நிறைவான வாழ்வின் காலத்தை கடந்துவிட்டதாக பொருள். இன்னும் ஒரு வகையில் இது வானபிரஸ்த காலமாகக் கொண்டு தங்களுக்கு பின் இருப்பவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஆலோசனை மட்டும் (அதுவும் கேட்டால் மட்டும்) வழங்கி ஓய்வெடுக்கும் காலம் இது. ஓய்வு என்பது நாம் நினைத்த ஆன்மிக, சமூக சேவை முதலியவற்றை மகிழ்ச்சியுடன் செய்வது என்று கொள்ள வேண்டும்.

தமிழ் ஆண்டுகள் 60

பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோத்பத்தி, ஆங்கிரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்ரம, விக்ஷீ, சித்ர பானு, சுபானு, தாரண, பார்திப, விய,.ஸர்வஜித், ஸர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துர்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ.பிலவங்க, கீலக, சௌம்ய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராக்ஷஸ, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்ரி, துர்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி, குரோதன, அக்ஷய. சுவாமி மலையில் உள்ள படிகள் 60. நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய திருத்தொண்டர் தொகையில் உள்ள நாயன்மார் 60 பேர். ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60.

எண் 63

சைவ சமயத்தில் உள்ள நாயன்மார்கள் எண்ணிக்கை 63. நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப் படும் சைவ அடியார்கள். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63. சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாகக் கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் – இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார் நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற்சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் திருவுருவங்களும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு `அறுபத்து மூவர் திருவீதி உலா’ என்று பெயர்.

எண் 64

பழந்தமிழ் இலக்கியங்களில் கற்க வேண்டிய கலைகளாக ஆயகலைகள் என்று 64 கலைகள் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக;

`ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய
உருப்பளிங்கு போல்வாள் என்
உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாராதிடர்.’

– என்பது கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதி பாட்டு.

1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்), 2. எழுத்தாற்றல் (லிபிதம்), 3. கணிதம், 4. மறைநூல் (வேதம்), 5. தொன்மம் (புராணம்), 6. இலக்கணம் (வியாகரணம்), 7. நயனூல் (நீதி சாத்திரம்), 8. கணியம் (சோதிட சாத்திரம்),

9. அறநூல் (தரும சாத்திரம்), 10. ஓகநூல் (யோக சாத்திரம்), 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்), 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்), 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்), 14. மருத்துவ நூல் (வைத்திய சாத்திரம்), 15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்), 16. மறவனப்பு (இதிகாசம்), 17. வனப்பு, 18. அணிநூல் (அலங்காரம்),

19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல் / வசீகரித்தல், 20. நாடகம், 21. நடம், 22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்), 23. யாழ் (வீணை), 24. குழல், 25. மதங்கம் (மிருதங்கம்), 26. தாளம், 27. விற்பயிற்சி (அத்திரவித்தை), 28. பொன் நோட்டம் (கனக பரீட்சை),

29. தேர்ப் பயிற்சி (ரத ப்ரீட்சை), 30. யானையேற்றம் (கச பரீட்சை), 31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை), 32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை), 33. நிலத்து நூல் / மண்ணியல் (பூமி பரீட்சை), 34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்), 35. மல்லம் (மல்ல யுத்தம்), 36. கவர்ச்சி (ஆகருடணம்), 37. ஓட்டுகை (உச்சாடணம்),

38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்),

39. காமநூல் (மதன சாத்திரம்), 40. மயக்குநூல் (மோகனம்), 41. வசியம் (வசீகரணம்), 42. இதளியம் (ரசவாதம்), 43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்), 44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்), 45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்), 46. நாடிப் பயிற்சி (தாது வாதம்),

47. கலுழம் (காருடம்), 48. இழப்பறிகை (நட்டம்), 49. மறைத்ததையறிதல் (முஷ்டி),

50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்), 51. வான்செலவு (ஆகாய கமனம்), 52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்), 53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்), 54. மாயச்செய்கை (இந்திரசாலம்), 55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்),

56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்),

57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்), 58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்), 59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்), 60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்), 61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்), 62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்), 63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்), 64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)இந்த வரிசை சிலவற்றில் மாறி வேறு விதமாகவும் இருக்கிறது.

எண் 70

70-வது வயது ஆரம்பம் – பீம ரத சாந்தி. இரண்டு விதமாக பொருள் சொல்வார்கள். பொதுவாக, கணவன் – மனைவி இருவரும் உயிருடன் இருந்து, (நட்சத்திரக் கணக்குப்படி) அந்த கணவரின் 70-வது பிறந்த நாளில், அவ்விருவரின் நலனுக்காக செய்யப்படும் சடங்கிற்கு பீமரத சாந்தி என்று பெயர். பரமசிவனுக்கு பல பெயர்கள் உண்டு. அவற்றில் பீமன் என்பதும் ஒன்று. இந்த பீமனாகிய பரமசிவனாரை ஆவாஹனம் செய்து அவரது அருட்பிரசாதமாக அந்த தம்பதிகள் மற்றும் அவர்களின் சந்ததிகளின் நன்மைக்காக இந்த சடங்கு செய்யப்படுகிறது. ‘பீமனை’ ஆவாஹனம் செய்வதால் இது பீமரத சாந்தி என்று அழைக்கப்படுகிறது என்று ஒரு பொருள்.

உடலுக்குப் ‘பீமரதம்’ என்பது வடமொழிப் பெயர். ‘பீம’ என்றால் ‘பெருத்த’. நூறாண்டுகள் நம்மை வாழ்க்கைப் பயணம் செய்விக்கும் உடலாகிய இரதத்திற்கு எழுபதாவது ஆண்டு நிறைவில் செய்யப்படும் நன்றியறிவிப்பே பீம இரத சாந்தி! “இத்தனை ஆண்டுகள் பயணம் செய்வித்தாய்; இனி மீதமுள்ள நாட்களிலும் பயணத்தை நல்லபடியாக நிகழ்த்திக் கடைத்தேற்று” என உடலை வேண்டுதல் பீம இரத சாந்தி!

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

The post எண்களின் ரகசியங்கள்: சதாபிஷேகம் ஏன்? appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…