×

அனு இமானுயேல் ஃபிட்னெஸ்

நன்றி குங்குமம் டாக்டர்

ஸ்வப்னா சஞ்சரி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமானவர் அனு இமானுயேல். அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் இவர். இத்திரைப்படத்திற்கு பின்னர் 2016-ஆம் ஆண்டு ஆக்சன் ஹீரோ பிஜு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அதன்மூலம், 2017-ஆம் ஆண்டு இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின்னர், சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தின் நாயகியானார். இத்திரைப்படத்திற்கு பின்னர் இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கார்த்தி நடித்து வெளியான ஜப்பான் படத்தின் நாயகியும் இவரே. அனு இமானுயேல் தனது ஃபிட்னெஸ் ரகசியத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

வொர்க்கவுட்ஸ்: நான் சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக இருப்பதால், சிறுவயது முதலே ஃபிட்னெஸில் இயற்கையாகவே ஆர்வம் இருக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஃபிட்னெஸ் மிக முக்கியம். அதனால் தினசரி யோகா, வொர்க்அவுட்செய்வதை நான் தவறுவதில்லை. அதிகாலை எழுந்தவுடனேயே முதல் அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் யோகா செய்வேன்.

உடலின் நெகிழ்வுதன்மை, வலிமை, மனதை சமநிலையாக வைத்திருக்கவும் யோகா உதவுகிறது. அதன்பின் சுமார் 45 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் செய்வேன். அதில் ஸ்ட்ரெச்சிங், கார்டியா பயிற்சிகள், பைலேட்ஸ், புஷ்அப், புல் அப், கரன்ச்ஸ், ஸ்குவாட், சைக்கிளிங் போன்றவை இருக்கும். இதில் கார்டியோ பயிற்சிகள் உடலின் தேவையற்ற கலோரிகள் கரைத்து உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

டயட்: ஃபிட்னெஸ்க்கு மிக முக்கியமானது ஆரோக்கியமான உணவு முறை. பொதுவாகவே எங்கள் வீட்டில் அனைவருமே ஆரோக்கியமான உணவு முறைகளையே பின்பற்றுகிறோம். அதிலும், நான் நடிகையாக இருப்பதால், உணவு பழக்கவழக்கங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் 3-4 கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரை குடித்துவிட்டுதான் எனது யோகா பயிற்சியை தொடங்குவேன். ஏனென்றால், காலையில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது, உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை குறைக்கவும் இது உதவுகிறது.

காலை உணவாக, ஒரு கிண்ணம் நறுக்கிய பழங்கள், 2 வேகவைத்த முட்டை, ஓட்ஸில் தயாரிக்கப்பட்ட உணவு அல்லது முளைக்கட்டிய தானியங்கள் இருக்கும். மதியத்தில், கிரீன் சாலட், வறுக்கப்பட்ட காய்கறிகள், கொஞ்சமாக பருப்பு சாதம் எடுத்துக் கொள்வேன். இரவில் ரொட்டி அதற்கு இணையாக சப்ஜி அல்லது தால் இருக்கும். அதுபோன்று இரவு உணவை எப்போதும், 8 மணிக்குள் முடித்துவிடுவேன்.

பியூட்டி : பொதுவாக நான் இயற்கையான அழகுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். அதனால், பெரும்பாலும் நான் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் எல்லாமே ஆர்கானிக்காகவே இருக்கும். நமது தோல் எப்போதும் ஈரப்பதத்துடன் இருந்தாலே மென்மையாகவும், இயற்கையான பளபளப்புடனும் காட்சியளிக்கும். நான் வீட்டில் ஓய்வாக இருக்கும்போது தக்காளிச்சாறு, கற்றாழை போன்றவற்றை முகத்துக்கு பயன்படுத்துவேன். அதுபோன்று படுக்கைக்குச் செல்வதற்கு முன் மேக்கப் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிய பின்பே தூங்கச்செல்வேன்.

அதுபோன்று, இரவில் தூங்கச்செல்வதற்கு முன்பு தினமும் தலைமுடிக்கு எண்ணெய் தடவிவிட்டுத்தான் தூங்கச் செல்வேன், இது முடியின் ஈரப்பதத்தை காப்பதற்கு உதவுகிறது. தலைமுடிக்கு கண்டிஷனர்கள் மற்றும் ஆன்டி-ஃபிரிஸ் சீரம்களைப் பயன்படுத்துவேன். அதுபோன்று, வீட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு ஹேர் ஆயில்களை பயன்படுத்தி மாதத்திற்கு ஒருமுறை ஹேர் ஸ்பா செய்து கொள்வேன். அதுபோன்று, வாரத்திற்கு ஒருமுறை அழகு நிலையம் சென்று தோல் பளபளப்புக்கு தேவையான பராமரிப்புகளை சரிசெய்து கொள்வேன்.

இவைகள்தான் எனது ஃபிட்னெஸ் மற்றும் அழகு ரகசியங்கள் ஆகும். நடிகையாக இருப்பவர்கள்தான் ஃபிட்னெஸை பின்பற்ற வேண்டும் என்று இல்லை. ஒவ்வொரு பெண்ணுமே தனது அழகு மற்றும் ஆரோக்கியத்தில் நிச்சயம் அக்கறை செலுத்த வேண்டும். அப்போதுதான் வளமான வருங்காலத்தை வழங்க முடியும்.

தொகுப்பு: ஸ்ரீ தேவி குமரேசன்

The post அனு இமானுயேல் ஃபிட்னெஸ் appeared first on Dinakaran.

Tags : Anu Emmanuel Fitness ,Anu Emmanuel ,Swapna Sanjari ,
× RELATED `ஜப்பான்’ நாயகி அனு இம்மானுவேல் லேட்டஸ்ட் புகைப்படங்கள்