×

கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் பட்டாவை ரத்து செய்யக்கோரி மனு

சிவகங்கை, ஜன.1: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன், மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சிங்கம்புணரி அருகே வடக்கு மாம்பட்டி குரூப்பில் சுமார் 300 ஏக்கர் அரசு தரிசு நிலம் சுமார் 50ஆண்டுகளுக்கு முன் தனியார் பலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் வணங்காமுடிபட்டி கிராமத்திற்கு அருகில் உள்ளன.

இந்த நிலங்களை பட்டா வாங்கியவர்கள் யாரும் பயன்படுத்த வில்லை. விவசாயம் செய்யவில்லை. இந்த நிலத்தில் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் வணங்காமுடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த காட்டு இடையன் கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதி உள்ளது. இந்த இடத்தை வாங்கியவர்கள் பின்னர் வேறு நபர்களுக்கு விற்றுள்ளனர். தற்போது கண்மாயில் சரி பாதி பகுதி, கலுங்கு, வரத்துக் கால்வாய், கிராம காளி கோவில் ஆகியவை கம்பி வேலி போட்டு அடைக்கப்பட்டுள்ளது.

இவ்வழியாக செல்லும் பெரியார் பாசன கால்வாய்கள், வரத்துக் கால்வாய்கள், வடிகால்கள், நடைபாதை ஆகிய அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு கம்பி வேலி போட்டு அடைக்கப்பட்டுள்ளன. இதனால் கிராம மக்கள் விவசாயம் செய்ய முடியாமலும், ஆடு மாடுகள் மேய்க்க முடியாமலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். உடனடியாக கண்மாய், கலுங்கு, கிராம கோயில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் பட்டாவை ரத்து செய்யக்கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Kanmai ,Sivagangai ,Tamil Nadu Farmers Union ,State General Secretary ,Sami Natarajan ,District Secretary ,Mohan ,District Deputy Secretary ,Arumugam ,Sivagangai Collector ,North Mambatti Group ,Singampunari ,Dinakaran ,
× RELATED கொட்டாம்பட்டி அருகே சமத்துவ மீன்பிடி திருவிழா