×

அமுதமெனத் தித்திக்குமா?ஆங்கிலப் புத்தாண்டு..?

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

“தினகரன்” வாசக அன்பர்களுக்கு, எமது அன்பு கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!

புத்தாண்டு என்றாலே, குதூகலம்தான்!! எத்தனையெத்தனை எதிர்பார்ப்புகள்; நம்பிக்கைகள்!!! இந்தப் புத்தாண்டிலாவது வேலை கிடைக்குமா? இது இளைஞர்களின் எதிர்பார்ப்பு. இந்த ஆண்டிலாவது வரன் அமையுமா? மணமாகாத, கன்னிப் பெண்களின் பெற்றோர்களின் கவலை இது. இந்த ஆண்டிலாவது வீடு வாங்கவேண்டுமென்ற ஆசை நிறைவேறுமா? வாடகை வீட்டில் இருந்து, வீட்டின் உரிமையாளர்களின் பிடியில் அகப்பட்டுத் தவிக்கும் நடுத்தரக் குடும்பத்தினரின் கவலை இது! இப்படி, புத்தாண்டு பிறந்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒருவித கனவும், அபிலாஷையும்கூடத்தான்! ஆசையும், எதிர்கால நம்பிக்கையும்தான் மனிதனை வாழவைக்கின்றன. ஆசை இல்லாத மனிதன், அடர்ந்த கானகத்தில் இருக்கவேண்டியவன்தான்!! நம்பிக்கையே வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களின்போது, நமக்கு மன பலத்தையும், முன்னேறி, வெற்றி பெறவேண்டுமென்ற அவாவையும் நம்முள் ஏற்படுத்துகின்றன; வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றிபெற வைக்கின்றது.

ஆங்கிலப் புத்தாண்டின் சரித்திரம்!

பல்லாயிரக் கணக்கான ஆண்டு களுக்கு முன்புவரை. ரோமானிய சாம்ராஜ்யம் (Roman empire) புகழ் பெற்று விளங்கியது. கிறித்துவ மதம் தோன்றிய பிறகு, பல காரணங்களினால், ரோமானிய சாம்ராஜ்யம் அழிந்தது. ரோமானிய சாம்ராஜ்யம் ஜோதிடம், விஞ்ஞானம், மருத்துவம், வானியல் கலை (Astronomy), சரித்திரம் போன்ற அனைத்து கலைகளிலும் உலகப் புகழ்வாய்ந்து, திகழ்ந்தது. ரோமானிய மன்னர்களில் உலகப் புகழ் பெற்றவர்கள் ஜஸ்டீனியன், கான்ஸ்டன்டைன், இம்மன்னன் நிறுவிய மாபெரும் நகரம்தான் “கான்ஸ்டான்டி நோபுள்” (தற்போதைய இஸ்தான்புல்), ஜூலியர் சீஸர், மார்க் ஆண்டனி, அகஸ்டஸ் ஆகியோர். ரோமானிய மக்களின் தெய்வம், “ஜுபிடர்”! அதாவது, நாம் பூஜிக்கும் குரு பகவான்!!

ஜூலியஸ் சீஸரின் காலத்தில்தான், வருட, வார, தின நாட்குறிப்பு (தற்கால தினசரி காலண்டர்) எழுதப்பட்டது. ரோமானிய மன்னர்களின் பெயரிலேயே மாதங்களின் பெயர்களும் நிர்ணயிக்கப்பட்டன. ஜூலியஸ் சீஸரின் பெயரிலேயே ஜூலை மாதமும், அகஸ்டஸ் பெயரில் ஆகஸ்ட் மாதமும் தோன்றின. அப்போதிலிருந்து வழக்கத்தில் இருந்து வந்ததுதான் இன்று நாம் உபயோகிக்கும் “மாத – தினசரி காலண்டர்”.

இது ஒருபுறமிருக்க, ஆங்கிலேயர்கள் நம் நாட்டின் நிர்வாகத்தைக் கைப்பற்றியவுடன், தங்களது ஆங்கிலப் புத்தாண்டை வழக்கில் கொண்டுவந்தனர். பதவியுயர்வு, ஊதிய உயர்வு, பெரும் பதவிகளுக்கு நியமனம், அரசாங்கப் பண்டிகைகள், ஓய்வு சலுகைகள் ஆகிய அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டியே நிர்ணயிக்கப்பட்டன. ஆதலால், ஆங்கிலேயர், நம் நாட்டை அரசாண்ட காலத்தில் ஆங்கிலப் புத்தாண்டு தினம், பாரதத்திலும் தனிச் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வந்தது. புத்தாண்டன்று பள்ளிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் விடுமுறை நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

அன்று பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும், மாணவர்கள் ஒன்றுசேர்ந்து, “God save our gracious King” (நமது பெருமை மிக்க மன்னரை இறைவன் பாதுகாக்கட்டும்!) என்ற பாடல்களைப் பாட வேண்டும் என்ற பழக்கமும் இருந்து வந்தது. அவ்விதம், ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்திலிருந்து, ஆங்கிலப் புத்தாண்டிற்குத் தனிச் சிறப்பு இருந்து வருகின்றது இன்று வரையிலும்!!

இனி, வரும் புத்தாண்டில் (2024) கிரக ரீதியில் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கவிருக்கின்றது என்பதை டிகிரி சுத்தமாகக் கணித்து அறிந்து எமது வாசக அன்பர்களுக்கு வழங்குவதில் மனநிறைவை அடைகின்றோம். வழக்கம்போல், அவசியமான ராசியினருக்கு, தகுந்த, எளிய, சக்திவாய்ந்த பரிகாரங்களையும் கூறியிருக்கின்றோம். முடிந்தவரை பரிகாரங்களைச் செய்து, பயனடையுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

2024-ம் ஆங்கிலப் புத்தாண்டின் விசேஷ நாட்கள்!

ஜனவரி 1 – ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு.

ஜன. 11 – அனுமன் ஜெயந்தி.

ஜன. 14 – போகிப் பண்டிகை.

ஜன. 15 – மகர சங்கராந்தி (பொங்கல் பண்டிகை). உத்தராயண புண்ணிய காலம்.

ஜன. 16 – மாட்டுப் பொங்கல், பசு, காளைகளை நன்னீராட்டி, மஞ்சள் பூசி. திலகமிட்டு, மாலையிட்டு, அலங்கரித்து, நல்ல உணவளித்து, கற்பூர தீபாராதனை காட்டி, மும்முறை வலம் வந்து, பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம் மற்றும் திருவள்ளுவர் தினம்.

ஜன. 17 – உழவர் திருநாள்; காணும் பொங்கல். பெரியோர்கள், உற்றார் உறவினர், உடன் பிறந்தோர் ஆகியோரைக் கண்டு, வணங்கி, அவர்களின் ஆசியைப் பெற வேண்டிய உன்னத தினம்.
ஜன. 25 – தைப் பூசம்,

ஜன. 26 – இந்திய குடியரசு தினம்,

ஜன. 30 – திருவையாறு தியாக பிரம்மம் – ஆராதனை தினம்.

ஜன. 31 – திருவண்ணாமலை மகான் சேஷாத்திரி மகா ஸ்வாமிகள் ஆராதனை தினம்.

பிப்ரவரி 9 – தை அமாவாசை, சமுத்திர ஸ்நானம், புஷ்கரணிகள், புண்ணிய நதிகளில் நீராடி, பித்ருக்களை பூஜிக்க வேண்டிய மகத்தான புண்ணிய தினம்.

பிப். 16 – ரத சப்தமி, சூரிய பகவானின் ரதம் திரை திரும்பும் தினம்,

பிப். 24 -மாசி மகம்,

மார்ச் 8 – மகா சிவராத்திரி – சைலத்தில் விசேஷம், சிவ பெருமானை உபவாசம் இருந்து, பூஜிக்க வேண்டிய மகத்தான புண்ணிய தினம்,

மார்ச் 14 – காரடையான் நோன்பு.

மார்ச் 25 – பங்குனி உத்திரத் திருவிழா, ஹோலிப் பண்டிகை.

ஏப்ரல் 9 – தெலுங்கு வருடப் பிறப்பு.

ஏப். 14 – தமிழ் வருடப் பிறப்பு.

ஏப். 17 – ராம நவமி, அயோத்தியா, பத்ராசலம், வடுவூர், தில்லை விளாகம், மதுராந்தகம் விசேஷம்,

ஏப். 21 – மீனாட்சி திருக் கல்யாணம்,

ஏப். 23 – வைகையில் கள்ளழகர் பவனி,

மே 1 – குரு பகவான், மேஷ ராசியிலிருந்து, ரிஷப ராசிக்கு மாறுதல். உழைப்பாளர் தினம்.

மே 4 – அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.

மே 5 – திருவண்ணாமலை அங்காரக சதுர்த்தி. யம தர்ம ராஜரைப் பூஜிக்க வேண்டிய மகத்தான புண்ணிய தினம்.

மே 10 – அட்சய திருதியை. வெள்ளி பாத்திரத்தில் தயிர் சாதம் வைத்து, ஏழைகளுக்கு தானம் செய்வது மகத்தான புண்ணிய பலனை அளிக்கும்; பாவங்களைப் போக்கும். பலராமர் அவதார தினமும் கூட.

மே 12 – ஸ்ரீமத் ராமானுஜர், ஆதி சங்கர பகவத் பாதாள் அவதார தினம்.

மே 14 – மக்களின் சகல பாவங்களையும் போக்கி, நல்வாழ்வளித்திடும், மகா புண்ணிய நதியான கங்கையின் அவதார தினம்,

மே 22 – நரசிம்ம ஜெயந்தி; வைகாசி விசாகம்.

மே 28 – அக்னி நட்சத்திரம் முடிவு.

ஜூலை 2 – கூர்ம ஜெயந்தி, பகவானின் கூர்ம அவதார தினம்,

ஜூலை 12 – ஆனி உத்திரம்,

ஜூலை 21 – குரு பூர்ணிமா – வியாஸ பூஜை

ஆகஸ்ட் 3 – ஆடிப்பெருக்கு,

ஆகஸ்ட் 7 – ஆடிப்பூரம்

ஆக. 9 – கருட பஞ்சமி

ஆக. 16 – வரலட்சுமி விரதம்,

ஆக:19: ருக், யஜுர் உபாகர்மா, ஹயக்ரீவர் ஜெயந்தி.

ஆக. 26 – கிருஷ்ண ஜெயந்தி, கண்ணனின் அவதார தினம். கோகுலம், மதுரா, பிருந்தாவனம், துவாரகா, கோவர்த்தனம் விசேஷம்.

செப்டம்பர் 7 – விநாயகர் சதுர்த்தி. தடைகற்களைத் தகர்த்தெறிந்து, அவற்றை நாம் உயர்வதற்கான படிக்கற்களாக மாற்றியமைக்க உதவிடும் விநாயகப் பெருமானின் அவதார தினம்.

செப்டம்பர் 8 – ரிஷி பஞ்சமி.

செப்.18 – மகாளயபட்சம் ஆரம்பம்.

அக்டோபர் 1 – கிருஷ்ணபட்ச அங்காரக சதுர்சஸர்வ மகாளய அமாவாசை. சமுத்திரம், கங்கா ஸ்நானம் விசேஷம்.

அக். 3 – நவராத்திரி ஆரம்பம்.

அக். 11 – சரஸ்வதி பூஜை.

அக். 12 – மத்வ சித்தாந்த மகான் மத்வாச்சாரியார் அவதார தினம்.

அக். 30 – தன்வந்த்ரி ஜெயந்தி. இரவு நாக சதுர்த்தி ஸ்நானம்.

அக். 31 – தீபாவளிப் பண்டிகை – குபேர பூஜை.

நவம்பர் 7 – சூரசம்ஹாரம்.

நவ. 12 – யாக்ஞவல்கியர் ஜெயந்தி. சுக்கில யஜுர் வேதத்தை சூரியனிடமிருந்து கற்று, நமக்கு வழங்கிய மகான்.

டிசம்பர் 11 – கைசிக மாத ஏகாதசி. திருக்குறுங்குடி, ரங்கம் கோயிலில் விசேஷம்.

டிச. 13 – அண்ணாமலை தீபம்.

டிச.14 – தத்தாத்ரேயர் ஜெயந்தி.

டிச. 16 – தனுர்(மார்கழி) மாத பூஜை ஆரம்பம்.

டிச. 17 – திருவண்ணாமலை ரமணர் மகரிஷி 145-வது அவதார தினம்.

டிச. 30 – அனுமன் ஜெயந்தி.

ஆங்கிலப் புத்தாண்டின் கிரக ஆதிக்கம்!

ஆளும் கிரகம் (அரசன்) : செவ்வாய்
மந்திரி, மேகாதிபதி : சனி பகவான்
சேனாதிபதி : சனி பகவான்

தான்யாதிபதி : சந்திரன்
ரசாதிபதி : குரு பகவான்
அர்க்காதிபதி : சனி பகவான்

பலன்கள்: அரசாங்க அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். தேவைக்கு அதிகமான மழை; பயிர்கள் பலத்த சேதத்திற்குள்ளாகும். உபரி நீர் கடலில் வீணாகக் கலக்கும். இந்திய நாட்டின் உள் விவகாரங்களில், அந்நிய நாடுகளின் தலையீடுகள் அதிகரிக்கும். ஆளும் கிரகம் செவ்வாயாக இருப்பதால், விபத்துகள் அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். தேச நலனுக்கு விரோதமாகச் செயல்படுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். தான்யாதிபதி சந்திரனாகையினால், விளைச்சல் அதிகமாகும். தங்கத்தின் விலை குறையும்.

15-01-2024, திங்கட்கிழமை: பொங்கல் பண்டிகை!!

பொங்கலோ பொங்கல்! மகர சங்கராந்தி!! உத்தராயண புண்ணிய காலம்!!! ஆங்கிலப் புத்தாண்டு 2024, ஜனவரி மாதம் 15-ம் தேதி, திங்கட்கிழமை, சுக்கிலபட்சம் (வளர்பிறை), சதுர்த்தி திதி, சதய நட்சத்திரம் – 26-ம் பாதம் கூடிய சுபயோக, சுப நன்னாளில், காலை 6.11 மணி முதல் 6.58 மணிக்குள், மகர லக்னத்தில், கோலமிட்டு, மலர்கள், கனிகள், கரும்புத் துண்டு ஆகியவற்றால் அலங்கரித்து, குலதெய்வம், இஷ்ட தெய்வம், பித்ருக்கள் ஆகியோரை மனதால் வணங்கி, புதுப் பானை வைத்து, பொங்கல் செய்து சூரிய பகவானுக்கு அமுது செய்வித்தால், வருடம் முழுவதும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும், மன நிறைவையும், லட்சுமி கடாட்சத்தையும், சுபிட்சத்தையும் பெறுவீர்கள்.

மறுநாளான 16-01-2024 செவ்வாய்க்கிழமையன்று, அதிகாலையிலேயே நீராடி, அவரவர் குல வழக்கப்படி, திருநீறு, திருமண் அணிந்து, பசுக்கள், காளைகள் அவற்றின் குழந்தைகளான கன்றுகள் ஆகியவற்றை நீராட்டி, மஞ்சள், குங்குமம் இட்டு, மலர்கள் சூட்டி, தூப-தீபம் காட்டி, மும்முறை வலம் வந்து, வணங்க வேண்டும். பாவங்கள் அகலும். குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் பொங்கும். நம்மை வாழ வைக்கும் தாயே, பசுவின் உருவில் காட்சியளிப்பதாக வேதங்கள் கூறுகின்றன.

17-01-2024 காணும் பொங்கல்! காலையில் நீராடி, புத்தாடை அணிந்து, தாய் – தந்தையரை, பெரியோர்களைக் கண்டு வணங்கி அவர்களது ஆசியைப் பெற்று மகிழ வேண்டிய புண்ணிய தினம்.

The post அமுதமெனத் தித்திக்குமா?ஆங்கிலப் புத்தாண்டு..? appeared first on Dinakaran.

Tags : Amudamenat ,Bhagwat Kaingarya ,Jyothida Sagara Chakraborty ,AMrajagopalan ,Dinakaran ,New Year ,Amudamenath ,
× RELATED தை பிறந்தால் வழி பிறக்கும்! கன்னியர் கழுத்தில் தாலி ஏறும்!!