×

கோவை அருகே குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சுகாதார சீர்கேடு

 

கோவை, டிச. 30: கோவை அருகே குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோவை அருகே கீரணத்தம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இங்குள்ள குடியிருப்பில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,‘‘கீரணத்தம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 1280 வீடுகள் உள்ளது. இங்குள்ள மக்கள் அனைவரும் தினக்கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த பகுதியில் நீண்ட காலமாக கழிவு நீர் மலத்துடன் கலந்து வெளியேறுகிறது. இதனால் ஏற்படும் சுகாதார சீர் கேட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதி அடைந்து வருகிறோம். மேலும் இங்கு குடிநீர் பிரச்னையும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்றனர்.

இதுகுறித்து கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை நிறுவனர் இளங்கோவன் கூறுகையில்,‘‘கீரணத்தம் குடிசை மாற்று வாரிய பகுதியில், கழிவு நீர் மலத்துடன் வெளியேறுவது மட்டுமின்றி, சாக்கடை உடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்த சுகாதார சீர்கேட்டால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே மக்களின் நலன் கருதி அந்த பகுதியில் சுகாதார சீர்கேட்டை போக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

The post கோவை அருகே குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : Shack Exchange Board ,Coimbatore ,Housing Exchange Board ,Keeranatham Cottage Replacement Board ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்