×

வளங்கள் நல்குவார் வாயு புத்திரன்

‘நாமக்கல்’ என்ற ஊரின் பெயர்க் காரணமே ஆச்சரியமானது. ஆரைக்கல் என்னும் அதிசய மலையை மையமாக கொண்ட பகுதி. ஆரைக்கல் என்ற பெயருக்கு முன்பாக நாமகிரித்தாயாரின் திருநாமத்தை இணைத்து நாமகிரிஆரைக்கல் என்று அழைக்கப்பட்டது. இது காலப்போக்கில் நாமக்கல் என்று உருமாறியதாக கூறப்படுகிறது. இப்படி தெய்வாம்சம் நிறைந்த நாமக்கல்லில் 246 அடி உயரம் கொண்ட ஒரே கல், மலையாக காட்சியளிக்க அதன் உச்சியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஒரு கோட்டை. கோட்டையின் மேற்கு திசையில் குடவரை சிற்பக் கலையின் உச்சம் தொடும் நரசிம்மர் கோயில். இவை இரண்டிற்கு நடுநாயகமாக, 18 அடி உயரத்தில் கம்பீரமாக நின்று அருட்பாலிக்கிறார் தேசம் முழுவதும் கொண்டாடும் நாமக்கல் ஆஞ்சநேயர்.

வானமே கூரையாக திறந்த வெளியில், தொழுத கைகளுடனும், இடுப்பில் கத்தியோடும் ஆஜானுபாகுவாக நின்று சிந்தையை ஈர்க்கும் ஆஞ்சநேயர் சிற்பம், ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது தனிச்சிறப்பு. கோயிலின் பக்கவாட்டு சுவர்களில் அஷ்டபுஜநரசிம்மர், வைகுண்ட பெருமாள், வராகர், உலகளந்த பெருமாள் சிற்பங்கள் கவனத்தை ஈர்க்கிறது.

புராண காலத்தில் இரண்யவதத்திற்குப் பிறகு உக்கிரம் பொங்க காட்சியளித்தார் நரசிம்மர். பிரகலாதனின் வேண்டுகோளால் சாந்தமூர்த்தியாகி, சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர்ந்தார். விஷ்ணுவை பிரிந்த மகாலட்சுமி, கமலாலயக் குளத்தில் நின்று கணவரை நினைத்து தவம் செய்தார். சஞ்சீவி மலையோடு சாளக்கிராமத்தை தூக்கி வந்த அனுமன், கமலாலயக் குளத்தைக் கண்டதும், தனது தாகம் தீர்க்க சாளக்கிராமத்தை அங்கு வைத்தார். தாகம் தீர்த்த அனுமனால் சாளக்கிராமமான நரசிம்மரை அங்கிருந்து தூக்கிச் செல்ல முடியவில்லை. அன்று முதல் மக்களுக்கு அருட்பாலித்து வருகிறார் நரசிம்மர். அவர் மலையாக அமர்ந்த இடமே ‘‘நாமகிரி’’ என்று போற்றப்படுகிறது.

அவருடன் அருட்பாலித்த லட்சுமி தேவியை நாமகிரித் தாயார் என்று தேவர்கள் வணங்கி வருகின்றனர்.நாமகிரி, அரங்கநாதர் ஆரைக்கல் என்று மருவிய பெயர், காலத்தின் சுழற்சியில் நாமக்கல் ஆனது. கல்லாய் மாறிய நரசிம்மர், குடவரைக் கோயிலில் அமர்ந்து அருட்பாலிக்க, ஆஞ்சநேயர் நரசிம்மரை கை கூப்பி வணங்கியவாறு திறந்த வெளியில் நின்று பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார்..

கோபுரம் இல்லாதது ஏன்?

காற்று, மழை, வெயில், புயல் என்று இயற்கை சீற்றங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்று அருட்பாலிக்கிறார் நாமக்கல் ஆஞ்சநேயர். லோகநாயகனான ஸ்ரீநரசிம்மரே கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார் என்பதும், நாமக்கல் ஆஞ்சநேயர் நாளுக்கு நாள், வளரும் அபூர்வ சக்தி கொண்டவர். அதனால் அவரை ஒரு கட்டுமானத்திற்குள் வைக்காமல் காற்று வெளியில் பிரதிஷ்டை செய்துள்ளதாக புராணங்கள் கூறகின்றன.

சிலையின் மகிமை

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை பிரம்மாண்டத்தின் பிம்பமாக நிற்கிறது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்ட, ஆஞ்சநேயர் முகம் அழகிய தேஜஸ் ஒளியில் மிளிர்கிறது. எதிரேயுள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் உபகோயில்தான் இந்த ஆஞ்சநேயர் சந்நதி என்றாலும் பக்தர்கள் கூட்டம், இங்குதான் அலை மோதுகிறது. இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியா சக்தி (நரசிம்மர்), ஞான சக்தி (ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற சிறப்புக்குரியது நாமக்கல்.

ராகு, சனி பகவான் தோஷங்களிலிருந்து காக்கும் வடைமாலை

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துதல், எலுமிச்சம் பழம் மாலை சாத்துதல், துளசி மாலை சாத்துதல், வடை மாலை சாத்துதல், பூ மாலை சாத்துதல் என்று பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கடனை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் வடைமாலை சாத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

முன்பு ஒரு சமயம் நவகிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதால் அவருக்கு கீழ்ப்படிந்தார்கள். பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும் ராகுவாலும் இடையூறுகள் ஏற்பட்டால் அவர்களை திருப்திப்படுத்துவதற்கு ராகுவுக்கு பிடித்த உளுந்தும் சனிக்கு பிடித்த எள் எண்ணெயும் கொண்டு வடை செய்ய வேண்டும். அந்த வடையை மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி பகவான், ராகு இருவரின் தொல்லைகளில் இருந்து விடுபடுவார்கள் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

அபிஷேக பலன்கள்

நல்லெண்ணெய் அபிஷேகம்: பித்ரு, சனி தோஷத்தை நிவர்த்தி செய்கிறது. பஞ்சாமிர்த அபிஷேகம்: காரியங்கள் நிறைவேற காரணமாகிறது. சந்தன அபிஷேகம்: தீர்வில்லா பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. சீயக்காய்

அபிஷேகம்: மனோசக்தியையும், நம்பிக்கையையும் கொடுக்கிறது. பால் அபிஷேகம்: மண்ணை வளப்படுத்தி மும்மாரி தருகிறது.

தங்கக் கவசத்தில் ஆஞ்சநேயர்

நாமக்கல் ஆஞ்சநேயர் தங்கக் கவச அலங்காரத்தில் பிரமாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் பணத்தைச் செலுத்தி தங்க முலாம் பூசிய இந்த தாமிர கவசத்தை சாத்துவதால் லட்சுமியின் அருள் கிடைக்கும். வீட்டில் செல்வ வளம் பெருகும். வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு அடைய தங்கக் கவசம் சாத்தி ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர் ஆயிரக்கணக்கான பக்தர்கள்.

The post வளங்கள் நல்குவார் வாயு புத்திரன் appeared first on Dinakaran.

Tags : Vayuputra ,Namakkal ,Aaraikal ,Araikal ,Namagiriaraikkal ,Namagrithaiyar ,Vaalangal ,Vayuputran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை!