×

சிறுகதை-பல்லாங்குழி!

நன்றி குங்குமம் தோழி

பதினாறு வருடத்திற்கு பிறகு சொந்த மண்ணில் கால்பதித்த கஸ்தூரிக்கு உடலில் வேதிவினை நிகழ்ந்தது. கால்டாக்சியை அனுப்பிவிட்டு மகள் அதீதியோடு ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.“அம்மா… திடீரென்று தாத்தாவ பார்க்கணும்னு எப்படி தோணிச்சு?”“அதுவா… இரண்டு மாசமா கெட்ட கெட்ட கனவு… என் அம்மாவின் முகம்தான் அடிக்கடி வந்தது. கையில் பல்லாங்குழியோடு எதையோ சொல்ல வராங்க. ஆனா, சொல்லாமல் முகத்தை மூடிகிட்டு அழுவுறாங்க… அதான் ஊரு பக்கமே போகக்கூடாதுன்னு இருந்த நான் முடிவை மாத்திக்கிட்டு கிளம்பிட்டேன்.”“ம்ம்… அப்பா நம்மள அனுப்பி வச்சதை நெனச்சா ரொம்ப ஆச்சரியமா இருக்கும்மா…”“எனக்கும்தான்… அதுவும் ஏரோபிளைன்ல கடல் கடந்து வந்திருக்கோம்.”

பதிமூன்று வயதுடைய அதீதி தாயின் சாயலை உள்வாங்கியிருந்தாள். இதுவரை இது போன்ற இடங்களில் கால் பதித்திராத அதீதிக்கு அந்த ஊரும் அதன் வனப்பும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. உச்சி வெயில் நேரம் என்பதால் உழுத எருதுகளை நிறுத்தி நுகத்தடியில் பிணைத்திருந்த மாட்டின் பூட்டாங்கயிற்றை தறித்துவிட்டு, மாட்டை அடித்து விரட்டி ஓட்டிக்கொண்டு சென்றார் ஒருவர்.“அம்மா… வாயில்லாத ஜீவனை இப்படி சித்திரவதை பண்ணுறாங்களே? தப்புதானே? இவங்கள தண்டிக்க சட்டத்துல இடமில்லையா?” மகள் ஆதங்கத்தோடு கேட்டபோது அவள் தலையை வருடினாள் தாய். தன் சிறு பிராயத்தில் இதே கேள்வியை கேட்டு அப்பாவிடம் திட்டு வாங்கியது நிழலாடியது.

“அப்படியில்லை…உழவுக்கு உயிரூட்டி அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு புகட்ட மனிதனோடு உழைப்பை பகிர்ந்துகொள்ளும் விலங்கு இனம்தான் உழவுமாடுகள்…. அதற்கான உணவும் இந்த வயலில் இருந்துதான் கிடைக்கிறது தெரியுமா! உலகிற்கே சோறு போடுகிறவர்கள்தான் நம் விவசாயிகள். அவர்கள் இல்லை என்றால் உலகமே இல்லை…” பலதும் சொல்லி மகளுக்கு புரிய வைக்க முயன்றாள்.ஆனால், அதீதியின் முகத்தில் தெளிவில்லை. அவளிடம் வேறொரு கேள்வி இருப்பதை உணரமுடிந்தது. நவீன உலகில் அதிலும் அயல்நாட்டில் வசிப்பவளுக்கு இதையெல்லாம் புரிந்துகொள்வது ரொம்பவே சிரமம்தான்.

சற்று நடந்தபோது காட்டுவாறியில மாட்டுக்கு தண்ணீர் காட்டிக்கொண்டு நிற்கும் அந்த நபர் கஸ்தூரிக்கு அறிமுகமான நபராய்த் தோன்றியது. நெற்றியை சுருக்கி யோசித்தபடி நடந்தாள். இடதுபுற வரப்பில் உள்ள காவாட்டம் புல்லில் எருதுகளை மேயவிட்டுக் கொண்டிருந்த வயதானவரை பார்த்தவுடன் ‘அட… நம்ம சாமியாடி தாத்தா! பளிச்சென்று நினைவு கீற்று வெட்டிச்சென்றது. ஊர் மக்கள் இவளை மறந்திருந்தாலும் சண்முகத்திற்கு நடந்த கொடுமைகளை மறந்திருக்க வாய்ப்பில்லை. புளியமரத்தில் கட்டி வைத்து அடித்ததில் சண்முகத்தின் உடலில்தான் எத்தனை ரத்தக்கோடுகள் ஐயோ… இன்னைக்கு நெனச்சாலும் நெருப்பில் வீசப்பட்ட புழுவாய் மனம் துடிக்கிறதே.

தெருவில் நுழைந்தவுடன் நாட்டு ஓடு வேய்ந்த லலிதாவின் வீட்டை தேடியவளுக்கு அதிர்ச்சி. வீடு இருந்த இடத்தில் கான்கிரீட் கட்டிடத்தில் கட்சி ஆபீஸ் முளைத்திருந்தது.
கஸ்தூரி மூன்றாம் வகுப்பு படிக்கும்போது சுடுகாயைத் தரையில் தேய்த்து லலிதாவின் கன்னத்தில் வைத்துவிட்டாள். லலிதாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த பழனியப்பன் பெல்ட்டை எடுத்து கஸ்தூரியை விளாசு விளாசென்று விளாசிவிட்டார். அடி வாங்கிய கஸ்தூரியின் மொத்த கோபமும் லலிதா மேல் பாய்ந்தது. ஒருமாதம் வரை பேசாமல் இருந்தாள். லலிதாவே வீடு தேடி வந்து பேசிய பிறகுதான் கஸ்தூரி சமாதானமானாள்.

“அம்மா… என்னம்மா எதுவும் பேசாம வர்றீங்க? இந்த ஊருல யாருக்குமே உங்கள அடையாளம் தெரியிலன்னு நினைக்கிறேன்…?” என்றாள் அதீதி.மெல்ல சிரித்த கஸ்தூரி, தெரியாமல் இருப்பதே நல்லது என்கிறாள் தனக்குள்.“ஏ…சிறுவண்டு இந்தக் காச கொஞ்சம் எடுத்துக்குடு…” இடதுபுறமிருந்து வந்த குரலுக்கு இருவரும் ஒருசேர திரும்பினார்கள். முதுகு வளைந்த பாட்டி கையில் மூங்கில் கொம்போடு நின்றிருந்தாள்.

“அதீதி பாட்டி ஏதோ காசை கீழே போட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன் வா எடுத்துக்கொடுக்கலாம்…” சொல்லிக்கொண்டே சிதறிக்கிடந்த இரண்டு பத்து ரூபாய் காயினை எடுத்து பாட்டியிடம் கொடுத்துவிட்டு தலையை உயர்த்தியபோது அந்த கொடுக்காபுளி மரத்திலிருந்து இரண்டு பச்சைக்கிளி வானத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தது.

“அம்மா… என்ன மரம்மா இது…?”“இது கொடுக்காபுளிமரம்… சாப்பிட்டால் சுவையா இருக்கும்” என்று சொல்லிக்கொண்டே எட்டி ஒரு கொத்து கொடுக்காபுளியை பறித்து உட்பழுப்பினை நீக்கி மேல் கருப்புத்தோலை உரித்து மகளிடம் சாப்பிட கொடுத்தாள் கஸ்தூரி. நுனிப்பல்லில் கடித்து சுவைத்துவிட்டு முகத்தை சுளித்தாள் மகள். பர்கரும், பீட்ஸாவும் சாப்பிடும் பிள்ளைகளுக்கு இந்த சுவை பிடிப்பதற்கு வாய்ப்பில்லை.

பாதிதூரம் நடக்கும்போதே கால் வலிக்கிறது என்றாள் மகள்.“இன்னும் கொஞ்சம் தூரம்தான் அதோ தெரிகிறதே அந்த வீடுதான்” என்று வீட்டை கைகாட்டிய கஸ்தூரிக்கு தன் அம்மா தனத்தின் ஞாபகம் வந்தது.கஸ்தூரி பள்ளியில் இருந்து வர பத்து நிமிடம் தாமதமானால் போதும் கையை பிசைந்துகொண்டு வாசலில் வந்து நிற்பாள் தனம். கஸ்தூரி எங்கே போனாலும் தனத்தின் கண்களில் கவனமும் பதற்றமும் அடைகாக்கும்.கஸ்தூரி பெரியவளானவுடன் வீட்டிற்கு வெளிப்புறத்திலிருந்த தனியறையில் தள்ளப்பட்டாள். பள்ளிக்கூடத்தில் பாரதியை பற்றி பேசி முதல் பரிசு பெற்றவளை பதினாறு நாட்கள் வீட்டைவிட்டு தனிமைப்படுத்தி வைத்தார்கள்.

இந்த தனிமைக் காலத்தில் உண்ண தனித்தட்டும் படுக்கத் தனிப்படுக்கையும் அளிக்கப்பட்டது. பதினாறாம் நாள் தீட்டு கழித்து வீட்டுக்கு அழைத்துக்கொண்ட பிறகு ஆளாளுக்கு அறிவுரைகள், நின்றாள் குற்றம், நடந்தால் குற்றம் என்றார்கள். பெற்றோர்களின் நிலைப்பாடோ தலைகீழாக மாறிப்போனது. கண்டிப்பை காட்டிய தாய் பாசத்தை பொழிந்தாள். பாசமாய் பழகிய தந்தை குரலை உயர்த்தி பேசினார்.இதற்கிடையில் ஒருநாள், சண்முகம் என்ற பெயரில் வந்த பொங்கல் வாழ்த்து பழனியப்பாவின் கையில் சிக்கியது. பள்ளிக்கூடம் விட்டுவந்த மகளை வார்த்தைகளால் குதறியெடுத்தார்.“அப்பா… நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவுமில்லேப்பா… அந்த பையன் பள்ளிக்கூடத்தை விட்டே போயிட்டான். பார்த்திருக்கிறேனே தவிர பேசியதுகூட இல்லை… சத்தியம்பா…”“பொய் சத்தியம் செய்யிறீயா?” பளார்… கண்களில் மின்மினி பறந்தது.

“என்னங்க வயசுக்கு வந்த பொண்ணை இப்படி அடிக்கிறீங்களே? இது உங்களுக்கே நல்லா இருக்கா?”“நீ வாயை மூடுடி…நீயே ஒரு ஓடுகாலி, உன்ன மாதிரிதானே உன் பொண்ணும் இருப்பா? எல்லாம் உன்னாலதான்… உங்கிட்ட இருந்துதான் இந்த களவானித்தனம் இவளுக்கு வந்திருக்கு…”தனம் அதைக்கேட்டு சுருங்கிப்போனாள். அவளின் கண்கள் குளம் கட்டி நின்றது. அம்மாவின் அருகில் சென்று அவள் கரத்தைப் பற்றிய போது உடைப்பெடுத்த ஆற்று நீரைப்போல் சீறி அழுதாள். தாயின் அரவணைப்பை தேடும் சிறு பிள்ளையின் அழுகை அது. மகள் தாயை தோள்களில் சாய்த்து சமாதானப்படுத்தினாள். மகளின் புரிதல் தனத்தின் மனதை குழைத்தது.

“நான் ஒருவரை காதலித்தேன் கஸ்தூரி… அவரும் என்னை காதலித்தார். இருவரும் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்று முடிவு பண்ணியிருந்தோம். விஷயம் தெரிந்த என் குடும்பத்தார் என்னை மிரட்டி உங்க அப்பா தலையில் கட்டி வச்சிட்டாங்க. திருமணத்துக்கு பிறகு என் காதல் விஷயம் உங்கப்பாவுக்கு தெரிஞ்சிடிச்சு, அன்னையிலிருந்து சித்திரவதையை அனுபவிக்கிறேன்.”இத்தனை நாளும் மறைத்து வைத்திருந்த தன் கதையை சொன்னாள் தனம். கஸ்தூரிக்கு அம்மா மேல் பரிதாபம் தோன்றியது.

“உன் அப்பாவின் குணம் தெரியுமில்லையா? இந்த காதல் கத்தரிக்காயெல்லாம் விட்டுடு நம்ப குடும்பத்துக்கு சரிப்பட்டுவராது…”பதில் இல்லாமல் அங்கிருந்து நகர்ந்தாள் கஸ்தூரி.அடுத்த நாளிலிருந்து அப்பாவின் பார்வையிலும் பேச்சிலும் நிறைய மாற்றம் தெரிந்தது. கஸ்தூரி தூங்கிய பிறகு அவளுடைய நோட்டுப் புத்தகங்களை எடுத்து ஆராயத்தொடங்கினார். அவள் பள்ளிக்கூடம் சென்றுவரும் வழியில் பதுங்கியிருந்து கவனித்தார். ‘‘இந்த வருடத்தோடு படிப்பை ஊத்திமூடிட்டு சமையல் கத்துக்கோ’’ என்றார்.

எல்லாவற்றிற்கும் காரணம் சண்முகத்தின் பெயரை போட்டு யாரோ அனுப்பிய பொங்கல் வாழ்த்துதான் இருவரின் காதலுக்கும் பிள்ளையார் சுழி போட்டது.“இதோ பாரு கஸ்தூரி நீ யாருன்னே தெரியாது… நேத்து உங்க அப்பா என் வீட்டுக்கு வந்து காச்மூச்சின்னு கத்துறார். இனி என் பொண்ணு பின்னாடி சுத்தினா காலை உடைச்சிடுவேன்னு சொல்லுறார். என்ன நடக்குதுன்னு எனக்கு ஒன்னும் புரியில! ஏதோ வயசுல மூத்தவராச்சேன்னு மரியாதை கொடுத்து போறேன், இல்லன்னா நடக்கிறதே வேற…”ஒருமுறை வழியை மறித்து இப்படி பேசினான் சண்முகம்.

அந்த பேச்சு ஒவ்வொரு முறையும் தொடர்ந்தது. எந்த புள்ளியில் இருவரின் மனமும் ஒன்றியதென்று அவர்களுக்கே தெரியாது. வாழ்க்கையில் இணையவேண்டும் என்றால் ஊரை விட்டு ஓடுவதை தவிற வேறு வழியே இல்லை என்பதில் வந்து நின்றது.அன்றிரவு கதவில் சாவியை கொண்டு திருக்கும் ஒலி, நிசப்தத்தை புரட்டிப்போட… அம்மா, அப்பா விழித்துவிடக்கூடாது என்பதால் அடி மேல் அடியெடுத்து மொத்த கவனத்தையும் பாதையில் செலுத்தி நடந்தாள்.

வானத்தில் நிலவு தேய்ந்திருந்தாலும் நட்சத்திரங்கள் ஒளி வீசிக்கொண்டிருந்தன. டார்ச் லைட்டின் ஒளியை அடித்துக்காட்டி தான் இருப்பதை அடையாளப்படுத்தினான் சண்முகம். இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்கியிருந்தான். காதலிப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? கூப்பிட்டு கண்டித்திருந்தாலாவது அமைதியாய் கடந்து சென்றிருக்கலாம், ஆள் போட்டு தூக்கிட்டு வந்து புளியமரத்தில் கட்டிவைத்து அடிப்பதென்பது எவ்வளவு கீழ்த்தரமான செயல்.? நியாயம் கேட்ட ஊர்க்காரர்களிடம் இவனுடைய ஜாதி பெயரை சொல்லி அடித்தபிறகுதான் தன்மானத்தோடு கட்டினா கஸ்தூரியத்தான் கட்டுவேன்னு உறுதிபூண்டான். அதன் பிறகுதான் இருவரின் காதலும் வலுப்பெற்று ஊரைவிட்டு ஓடும் முயற்சிக்கு வித்திட்டது.

லைட்டின் மஞ்சள் ஒளி செம்பருத்தி செடியில் பட்டு மின்னலாய் கொடிபரப்பி நெளிய, காற்றில் அலையும் தாவணியை இழுத்து பிடித்தபடி, அடி மேல் அடியெடுத்து வைத்து, வாசலுக்கு வந்து சேர்ந்தாள் கஸ்தூரி. முதலும் கடைசியுமாக வீட்டை ஒருமுறை பார்த்துவிட்டு திரும்பியபோது எதிர் வீட்டு மாமா பீடியை புகைத்தபடி தெருவில் நின்றிருந்தார். இதயம் நழுவி கைக்குள் வந்ததுப்போலிருந்தது கஸ்தூரிக்கு. அடுத்த நிமிடம் மாமா கூப்பாடு போட்டு ஊரையே கூட்டிவிட்டார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு கஸ்தூரியை ஒருவாரம் வீட்டுச் சிறையில் வைத்து வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தூரத்து சொந்தக்காரன் ராஜேந்திரனுக்கு கட்டாயக் கல்யாணம் பண்ணி வைத்தார்கள். சண்முகத்தை அடித்து கொன்று தற்கொலை என்று பரப்பிவிட்டார்கள். “அம்மா… இந்த வீடா?” “ஆமாம்..” கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி பதில் சொன்னாள். அதீதியை அழைத்துக்கொண்டு வீட்டு வாசலருகே வந்தாள். எதிர் வீட்டிலிருந்து ஓடி வந்த நடுத்தர வயது பெண் கஸ்தூரியை கட்டிக்கொண்டு அழுதாள்.

“உங்க அம்மா சாவோட எல்லாத்தையும் முறிச்சுகிட்டு போயிட்டே… உன் மாமா சாவுக்குகூட வரலீயே கஸ்தூரி… நாங்களெல்லாம் உனக்கு வேண்டாதவங்களா ஆயிட்டோம் அப்படித்தானே?”
“ஐயோ… அப்படியெல்லாம் இல்லத்த… ஆமா, அப்பா எப்படி இருக்கிறார்?”“இப்போவாவது அவர் நெனப்பு வந்துச்சே உள்ளே போய் பாரு…” மகளின் கரத்தை அழுத்தப்
பற்றியபடி உள் நுழைந்தாள்.மரக்கதவு கிறீச்சிட்ட சத்தத்தில் பழனியப்பனுக்கு உணர்வு வந்திருக்க வேண்டும். பழகிப்போன இருட்டுக்குள் கிழிந்த நாராய் கிடந்த பழனியப்பனுக்கு அந்த திடீர் வெளிச்சம் பாய்ந்ததும் கூச்சம் தாங்காமல் கண்கள் சுருங்கி விரிந்து மூடிக்கொண்டன.

“ஐயா மகளும் பேத்தியும் வந்திருக்காங்க கண் திறந்து பாருங்க…” யாரோ ஒருவர் சொன்னது அவர் காதில் விழ, உடல் ஒருமுறை அதிர்ந்தது.அருகில் நெருங்கி போய் “அப்பா” என்று அழைத்தாள்.மூக்குப் புடைத்து காது சிவந்தது. மகளை இன்னும் மன்னிக்கவில்லை என்றது அவரின் உடல் மொழி.

“பேத்தி வந்திருக்கு பாருங்க…” அதே நபர்தான் சொன்னார்.மூடியிருந்த அவர் கைவிரல்கள் மெல்ல அசைந்தது. அதீதியை அவர் அருகில் அழைத்து வந்து அப்பாவின் கரங்களுக்குள் பொதித்தாள். அவர் முகத்தில் தெளிவு பிறந்தது, நெஞ்சுக்கூடு ஒருமுறை ஏறி இறங்கியது. அடுத்த நொடி தலை வலதுப்பக்கமாய் சரிந்தது. முடிந்துவிட்டது அப்பாவின் சாம்ராஜ்யம் மொத்தமும் முடிந்து சரிந்து விட்டதை உணர்ந்தாள். “அப்பா…”சக்தியை மொத்தமாய் திரட்டி ஓலமிட்டு கதறினாள் கஸ்தூரி. அதீதியின் கண்களில் மிரட்சி தெரிந்தது.

அவர் தலைமாட்டிலிருந்த அந்த பல்லாங்குழியை கையில் எடுத்தாள். அம்மா அவளுக்காக கொடுத்த கடைசி பரிசு! அன்று அவசரத்தில் அதை எடுக்காமல் போய்விட்டாள். அப்பாவின் இறுதிக் காரியங்களை முடித்துவிட்டு வீட்டையும் தோட்டத்தையும் அத்தையின் பராமரிப்பில் ஒப்படைத்துவிட்டு கையில் பல்லாங்குழியோடு கிளம்பினாள். “இது வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டும் இல்ல! எந்தக் குழியிலிருந்து தொடங்கினால் செல்வம்(வெற்றி) சேர்க்கலாம் என்று கணக்கிட்டு தொடங்க வேண்டும்.

குடும்பத்தின் நிதி நிலையை திறம்பட சமாளிக்க இந்த ஆட்டம் உதவி புரியும். ஒவ்வொரு குழியாக காய்களை போடுவது பகிர்ந்து கொடுப்பதை வலியுறுத்துகிறது. துடைத்த குழிக்கு அடுத்த குழி வெற்றுக்குழியாக இருக்கும்போது எதுவும் கிடைக்காது. வாழ்க்கையில் கஷ்டங்கள் துன்பங்கள் தொடர்ந்து வந்தால் வருந்தக்கூடாது. பிரச்னைகளை மன திடத்தோடு எதிர்கொள்ள வேண்டும் என்ற உளவியல் கருத்து பல்லாங்குழியில் சொல்லப்பட்டிருக்கிறது” என்று தனம் அன்று சொன்னது கஸ்தூரிக்கு இன்றுதான் புரியவந்தது. ஒரு கையில் பல்லாங்குழியையும் மறு கையில் அதீதியையும் பற்றியபடி வாசலில் இறங்கி நடந்தாள் கஸ்தூரி. எதிரில் மாட்டை அடித்து விரட்டி ஓட்டிக்கொண்டு சென்றார் சாமியாடி தாத்தா.

தொகுப்பு: டெய்சி மாறன்

The post சிறுகதை-பல்லாங்குழி! appeared first on Dinakaran.

Tags : Palangukhuzi ,Kumkum Doshi ,Kasthuri ,
× RELATED கிச்சன் டிப்ஸ்