×

காயல்பட்டினத்தில் 90 செமீ மழை பெய்யும் என கணிக்கவில்லை: ஒன்றிய அரசு செயலாளர் ஒப்புதல்

புதுடெல்லி: ‘தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 90 செமீ மழை கொட்டித் தீர்க்கும் என எந்த வானிலை கணிப்பு மாதிரியும் கணிக்கவில்லை’ என ஒன்றிய அரசின் புவி அறிவியல் துறை செயலாளர் எம்.ரவிச்சந்திரன் கூறி உள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கடந்த 1875ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி, கொல்கத்தா துறைமுக எச்சரிக்கை மையமாக தொடங்கப்பட்டது. அதன் 150வது ஆண்டு அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஐஎம்டியின் புதிய லோகோவை ஒன்றிய புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜூ டெல்லியில் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

விழாவில் அவர் பேசுகையில், ‘‘சமீபத்தில் தமிழ்நாட்டில் அதிகப்படியான மழை பெய்தது. இதுபோன்ற கனமழையை நம்மால் தடுக்க முடியாது. நம்மால் எச்சரிக்கை செய்ய முடியும். உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். எனவே வானிலையை இன்னும் துல்லியமாக நாம் கணிக்க, கூடுதலாக கண்காணிப்பு மையங்கள் அமைக்க வேண்டும்’’ என்றார். புவி அறிவியல் துறை செயலாளர் எம்.ரவிச்சந்திரன் பேசுகையில், ‘‘வெப்ப மண்டல பகுதிகளில் வானிலை முன்னறிவிப்பை கணிப்பது மிகவும் கடினமான செயல்.

கடந்த வாரம் தென் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் அதிகனமழை பெய்தது. இதில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 90 செமீ மழை பெய்யும் என எந்த வானிலை முன்னறிவிப்பு மாதிரியும் கணிக்கவில்லை. நாம் பயன்படுத்துவது இந்தியாவின் வானிலை கணிப்பு மாதிரி அல்ல. அது, ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் வானிலை மாதிரிகள் கலந்த தொகுப்பாகும். எனவே எந்த வானிலை மாதிரியும் இதனை கணிக்க முடியாது. இதற்கு காரணம், கடல் அருகில் அமைந்துள்ளதால் வானிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவதே’’ என்றார்.

The post காயல்பட்டினத்தில் 90 செமீ மழை பெய்யும் என கணிக்கவில்லை: ஒன்றிய அரசு செயலாளர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Kayalpatnam ,Union Government ,New Delhi ,Tuticorin district ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...