×

பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக நடந்த ரேவ் பார்ட்டி: ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட ரேவ் பார்ட்டியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாசு என்பவர் பிறந்தநாள் விழாவையொட்டி பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள சொகுசு பண்ணை வீட்டில் பிரமாண்ட ரேவ் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஆந்திராவை சேர்ந்த விஐபி-க்கள், நடிகர்கள், நடிகைகள், மாடல் அழகிகள், ஐடி பொறியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் உயரக மதுபானங்கள் மட்டுமின்றி சந்தையில் உள்ள எம்டிஎம்ஏ மாத்திரைகள், கோகென் போன்ற பலவகையான போதை வசதிகள் பார்ட்டியில் பங்கேற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த பார்ட்டி சட்டவிரோதமாக நடைபெறுவதை அறிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிகாலை 3 மணியளவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருடன் சென்று பண்ணை வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். பார்ட்டியில் இருந்தவர்கள் யாரும் தப்பிக்காத வகையில் அந்த வீட்டை சுற்றிவளைத்த போலீசார் அனைவரையும் காவலில் எடுத்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்த சோதனையில் பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் மற்றும் 15க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். இந்த பார்ட்டியில் ஆந்திராவை சேர்ந்த எம்.எல்.ஏ. ககனி கோவர்த்தன் ரெட்டியின் கார் பாஸ் ஓட்டப்பட்டிருந்த பென்ஸ் கார் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த ஐதராபாத்தை சேர்ந்த வாசு தனி விமானம் மூலமாக விஐபி-க்கள் மற்றும் அழகிகளை அழைத்து கொண்டு பெங்களூரு வந்ததாகவும், இந்த ஒரு நாள் இரவு கொண்டாட்டத்திற்காக சுமார் ரூ.50 லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நிறைவுபெற்ற பிறகு எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்தான அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படும் என பெங்களூரு காவல்துறை தெரிவித்துள்ளது.

The post பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக நடந்த ரேவ் பார்ட்டி: ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Central Crime Branch ,Vasu ,Andhra ,Electronic City ,
× RELATED பெங்களூரு போதை டான்ஸ் வழக்கு;...