×

குறளின் குறள்: நெஞ்சொடு கிளத்தல்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருக்குறளில் காமத்துப் பாலில், பிரிவுத் துயரால் துன்புறும் தலைவி, தன் நெஞ்சோடு பேசுவதாக அமைந்த பத்துப் பாடல்களின் தொகுப்பே `நெஞ்சொடு கிளத்தல்’ என்ற அதிகாரம். (அதிகாரம் 125) இந்தத் தொகுப்பில் உள்ள பத்துக் குறட்பாக்கள் ஒவ்வொன்றிலும், `நெஞ்சு’ என்ற சொல்லாட்சி காணப்படுவது இந்த அதிகாரத்தின் தனிச்சிறப்பு. கடமை காரணமாகத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான்.

ஆனால், அவனிடமிருந்து அவன் எப்போது திரும்பி வருகிறான் என்பது பற்றிய எந்தச் செய்தியும் இதுவரை வரவில்லை. காதலி பிரிவுத் துயரால் தவிக்கிறாள். உடல் மெலிகிறாள். யாரிடம் போய்த் தன் வருத்தத்தைப் பகிர்ந்துகொள்வது? பிரிந்து சென்ற தலைவனையே, தான் எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பதை இன்னொரு வரிடம் நாணத்தை விட்டுவிட்டு எப்படிச் சொல்வது? அந்தரங்கமான வருத்தம் அல்லவா இது?

எனவே, தலைவி தன் வருத்தத்தைச் சொல்லப் பிறரை நாடாமல் தன் நெஞ்சையே நாடுகிறாள். தன் நெஞ்சுடனேயே பேசத் தொடங்குகிறாள். தன் உணர்வுகளையெல்லாம் தன் நெஞ்சிடமே கொட்டித் தீர்க்கிறாள். இந்த அதிகாரம் ஒரு புதுமையான உத்தியில் அமைந்துள்ளது. இதில் வள்ளுவர் எங்குமே பேசவில்லை. எதையுமே அவர் தன் கூற்றாகத் தெரிவிக்கவில்லை. பேசுவதெல்லாம் அவர் படைத்த பாத்திரமான தலைவிதான். அவள் தன் நெஞ்சோடு பேசுகிற தனி உரைதான் இந்த அதிகாரம் முழுவதும்.

பிரிவாற்றாமையில் எழுந்த இந்தப் பத்துக் குறட்பாக்களும், இலக்கியச்சுவை உடையவை. பிரிவுத் துயரை `விப்ரலம்பம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறது வடமொழி. பழந்தமிழ் இலக்கியம் நெடுக பிரிவாற்றாமை குறித்த பாடல்கள் இருந்தாலும், வள்ளுவர் தலைவியே பேசுவதாகப் படைத்துள்ள இந்தப் பத்துப் பாடல்களும், தனி அழகு நிரம்பியவை. திருக்குறள் என்ற நீதிநூலை, அதையும் தாண்டி இலக்கியமாக்குவதற்கு காமத்துப் பாலில் உள்ள உணர்ச்சிச் செறிவு மிகுந்த இந்த அதிகாரமும், இதுபோன்ற பிற காமத்துப்பால் அதிகாரங்களுமே உதவுகின்றன.

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்

எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

(குறள் எண் 1241)

நெஞ்சே! இந்தத் துன்பம் தரும் பிரிவாற்றாமை என்ற நோயினைத் தீர்க்கும் மருந்து ஏதாவதொன்றை நினைத்துப் பார்த்து நீயாகிலும் எனக்குச் சொல்ல மாட்டாயா? என் பிரிவுத் துயரைத் தீர்க்க எந்த மருந்துமின்றித் தவிக்கிறேனே நான்!

காதல் அவரில ராகநீ நோவது
பேதைமை வாழிஎன் நெஞ்சு.
(குறள் எண் 1242)

என் நெஞ்சே! நீ வாழ்க. அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க நீ மட்டும் அவரை நினைத்துத் துன்புறுவது ஏன்? அவ்விதம் துன்புறுவது உன் அறியாமையே.

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
(குறள் எண் 1243)

நெஞ்சே! நீ என்னுடன் இருந்தும் அவரையே நினைத்து வருந்துவது ஏன்? இந்தத் துன்ப நோயைத் தோற்றுவித்தவரிடம் நம்மீது அன்புற்று நம்மை நினைக்கும் குணம் இல்லையே? என்ன செய்வது?

கண்ணும் கொளச்சேரி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காண லுற்று.
(குறள் எண் 1244)

நெஞ்சே! நீ அவரிடம் போகும்போது என்னுடைய இந்தக் கண்களையும் அழைத்துச் செல்வாயாக. அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.
(குறள் எண் 1245)

நெஞ்சே! நாம் விரும்பி நாடினாலும் நம்மை நாடாதவர் அவர். ஆனால், என்ன செய்ய? அவர் நம்மை வெறுத்துவிட்டார் என எண்ணி நாம் அவரைக் கைவிடல் இயலுமோ?

கலந்துணர்த்துங் காதலர்க் கண்டால் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு.
(குறள் எண் 1246)

என் நெஞ்சே! ஊடல் கொண்டபோது ஊடலை நீக்கிக் கூடுகின்றவரான காதலரைக் கண்டால் நீ சண்டையிடுவாய். அவரை உணரமாட்டாய். பொய்யான சினம் கொண்டுதான் நீ அவரைக் காய்கின்றாய்.

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானே பொறேனிவ் விரண்டு.
(குறள் எண் 1247)

நல்ல நெஞ்சமே! ஒன்று காமத்தை விட்டுவிடு. அல்லது நாணத்தை விட்டுவிடு. இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் ஆகாது.

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு.
(குறள் எண் 1248)

என் நெஞ்சே! நம் துன்பத்தை எண்ணி இரங்கி வந்து அவர் அன்பு செய்யவில்லை. ஆனால், நீயோ ஏங்கி, நம்மைப் பிரிந்த காதலரின் பின்னால் செல்கிறாயே? உன் பேதைமையை என்னென்பது!

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழச் சேறியென் நெஞ்சு.
(குறள் எண் 1249)

என் நெஞ்சே! காதலர் நம் உள்ளத்துக்குள்ளேயே இருக்கிறார். அப்படியிருக்க நீ அவரை யாரிடத்தில் போய்த் தேடிச் செல்கிறாய்?

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.
(குறள் எண் 1250)

நம்மோடு சேர்ந்திருக்காமல் நம்மைப் பிரிந்து சென்றவரை நாம் நெஞ்சத்திலேயே உடையவராய் இருக்கிறோம். அப்படியிருக்க நாம் அவரை நினைத்து மெலிந்து அழகிழந்து வருகிறோமே? இப்படி தலைவி தன் நெஞ்சுக்குச் சொல்வதாகப் பத்துக் குறட்பாக்களை எழுதி நம் நெஞ்சைக் கொள்ளைகொள்கிறார் வள்ளுவப் பெருந்தகை. நெஞ்சு என்ற சொல்லைப் பழந்தமிழ் இலக்கியங்கள் பல இடங்களில் ஆளுகின்றன. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் செம்புலப் பெயல் நீரார் பாடியுள்ள ஒரு பாடல் தலைவன் தலைவி இருவரின் நெஞ்சமும் செம்மண்ணில் பெய்த மழைநீர் போல ஒன்று கலந்ததாகக் கூறுகிறது.

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

அருணகிரிநாதர் எழுதிய கந்தர் அனுபூதி `நெஞ்சம்’ என ஆரம்பிக்கும் காப்புச் செய்யுளுடன்தான் தொடங்குகிறது.

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத் தருள் சண்முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்!

நெஞ்சம் என்ற கடினமான கல்லும் நெகிழ்ந்து உருகும் வகையில் அடைக்கலம் தேடி வந்தவனுக்குத் தஞ்சமளிக்கிறான் சண்முகன், அந்த முருகப்பெருமானைப் பாடும் இந்தப் பாமாலை சிறந்து அமைய ஐந்து கரத்தையுடைய யானைமுகன் பாதம் பணிவோம் எனத் துதிக்கிறார் அருணகிரியார். உமாபதி சிவாச்சாரியார் எழுதிய புகழ்பெற்ற நூல் நெஞ்சுவிடு தூது. இறைவனைத் தலைவனாகக் கொண்டு தன்னைத் தலைவியாக எண்ணி மதுரபாவனையில் எழுதப்பட்ட கலிவெண்பாக்களாலான செய்யுள் நூல்.

தலைவி தன் நெஞ்சையே தலைவனுக்குத் தூதனுப்புகிறாள். அப்போது தூது செல்லும் தன் நெஞ்சுக்கு அவள் என்னவெல்லாம் சொல்லித் தூதனுப்புகிறாள் என்பதை நயம் படச் சித்திரிக்கிறார் நூலாசிரியர். பதி பசு பாசம் முதலிய சைவ சித்தாந்தக் கருத்துகளின் விளக்கமாகவும் இந்த நூல் அமைந்துள்ளது. `தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய்வைத்த சொல்’ எனத் திருக்குறளையும் இந்நூல் ஓரிடத்தில் போற்றிப் புகழ்கிறது. துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், மீனாட்சிசுந்தரம்பிள்ளை போன்றோரும் நெஞ்சைத் தூதுவிடும் உத்தியில் பக்தி இலக்கியம் படைத்துள்ளனர்.

அனுமன் தன் நெஞ்சில் எப்போதும் ராமபிரானையே நினைத்துக் கொண்டிருப்பவன். ராம.. ராம.. என்றே ஓயாமல் ஜபித்துக் கொண்டிருப்பவன். அவனது பக்தியின் பெருமையை மக்கள் உணரவேண்டும் என விரும்பினார் ஸ்ரீராமர்.

பட்டாபிஷேகம் கோலாகலமாக நிறைவடைந்த நிலையில் எல்லோருக்கும் சீதா தேவியின் திருக்கரத்தால் பரிசுப்பொருள்கள் வழங்கப்படுகின்றன.அவ்வகையில் தன் மகனே போன்ற அனுமனுக்கு ஓர் அழகிய விலையுயர்ந்த முத்து மாலையைப் பரிசளித்தாள் சீதாதேவி. ஆனால், அதைக் கழுத்தில் அணிந்துகொள்ளாமல் அதில் உள்ள முத்துக்களைப் பல்லால் கடித்துப் பார்க்கத் தொடங்கினான் அனுமன். பரிசுப் பொருளை ஏன் கடித்துப் பார்க்கிறாய் என ராமன் கேட்டார்.

`இந்த முத்துக்களில் என் ராமன் இருக்கிறானா எனப் பார்த்தேன். இல்லை. என் நெஞ்சத்தில் ராமன் இருக்கிறார். அதுபோதும் எனக்கு. ராமனில்லாத இந்த முத்துக்களால் ஆன மாலை எனக்கு வேண்டாம்’ என்றான் அனுமன்.`உன் நெஞ்சத்தில் நான் இருக்கிறேன் என்பதைப் பொதுமக்கள் முன்னிலையில் உன்னால் நிரூபிக்க முடியுமா?’ என ராமர் கேட்க `அதற்கென்ன நிரூபிக்கிறேன்’ என்றான் அனுமன்.

அவன் தன் நெஞ்சத்தைப் பிளந்து காட்டியபோது அனுமன் நெஞ்சில் ராமன் சீதை இருவரும் அமர்ந்திருப்பதைக் கண்டு பொதுமக்கள் பரவசம் அடைந்தார்கள். ராமன் பிரியத்தோடு அனுமன் நெஞ்சைத் தடவிக் கொடுக்க பிளந்த நெஞ்சம் ஒன்றுசேர்ந்து மீண்டும் முன்போல் ஆகியது என்கிறது ஓர் அபூர்வ ராமாயணக் கதை.

நீதி வழுவாத சிந்தனைகளே மனிதர்களின் நெஞ்சுக்கு அணிகலன் எனப் பேசுகிறது அன்னை சக்தியைப் போற்றும் ஒரு பாரதி பாடல்;

`நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்
பஞ்சுக்குநேர் பல துன்பங்களாம் இவள்
பார்வைக்கு நேர் பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெலாம்
தஞ்சமென்றே உரைப்பீர் அவள்பேர் சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்…’

மகாகவி பாரதியார் இன்னும் பல முக்கியமான இடங்களில் நெஞ்சம் என்ற சொல்லப் பயன்படுத்துகிறார்.

`வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
யாரம் படைத்த தமிழ்நாடு’

என இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தைப் பற்றிப் பேசும்போது அந்தக் காப்பியம் நெஞ்சை அள்ளுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

`நெஞ்சு பொறுக்குதிலையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்.
அஞ்சியஞ்சிச் சாவார் – அவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே’

என சமகாலத்தில் வாழ்ந்த மனிதர்களின் கோழைத்தனத்தை எண்ணிக் குமுறியுள்ளார்.

`எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்’

என்ற வரிகளில் தம் நெஞ்சம் திண்ணியதாக இருக்க வேண்டும் என்பதே அவர் பிரார்த்தனை.

பல திரைப்பாடல்களில் நெஞ்சம் என்ற சொல் இடம்பெற்று நம் நெஞ்சைக் கவர் கிறது. `நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி நினைத்தால் எல்லாம் நமக்குள்ளே, ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே.., நெஞ்சம் மறப்பதில்லை அது தன் நினைவை இழப்பதில்லை…, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா..’ என இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். `நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சிருக்கும்வரை’ என்றெல்லாம் தலைப்பிலேயே நெஞ்சம் என்ற சொல்லைத் தாங்கியும் திரைப்படங்கள் வந்துள்ளன.மனிதனின் வாழ்க்கை என்பது அவரவர் நெஞ்சின் எண்ணங்களைப் பொறுத்தே உருவாகிறது. வள்ளுவரின் வழியில் நின்று தீய எண்ணங்களை விலக்கி தூய எண்ணங்களை நினைப்போமானால், நம் நெஞ்சில் அமைதி தோன்றும். நம் வாழ்வில் நிலையான ஆனந்தம் ஏற்படும்.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

The post குறளின் குறள்: நெஞ்சொடு கிளத்தல்! appeared first on Dinakaran.

Tags : Kuralin Kuralin ,Kuralin ,Kuralin Kuralin Kuralin ,Thirukkuralil Kamathu Palil ,Kuralin Kural ,
× RELATED குறளின் குறல்: திருக்குறளில் ஆமை!