×

ஜோதிட ரகசியங்கள்

கால சர்ப்ப தோஷம்

ராகு – கேது பிடியில் கிரகங்கள் இருப்பின் கால சர்ப்ப தோஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பழைய நூல்களில் இந்த தோஷம் பற்றிய குறிப்புகள் பெரிய அளவில் இல்லை. ஒரு 100 ஜாதகங்களைப் பார்த்த பொழுது இந்த தோஷம் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் சில ஜாதகங்கள் ஓஹோ என்று இருக்கின்றன.

வெறும் ராகு – கேது ஸ்தான பலத்தைப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவதைவிட, ராகு கேதுக்கள் வாங்கிய சாரம், சேர்ந்த பார்த்த கிரகங்கள் இவற்றை வைத்துக் கொண்டு நடைமுறை பலன்களையும் சரி பார்த்து ஒரு குறிப்பிட்ட ஜாதகத்தில் ராகு கேதுக்கள் எப்படி வேலை செய்கிறது என்பதை நிதானமாக நிர்ணயிக்க வேண்டும்.

ராகு கேதுக்கள் ஒன்று, ஏழு, இரண்டு, எட்டு இடங்களில் இருந்தால் அவசியம் வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலை துர்க்கை சன்னதியில் விளக்கேற்றி வணங்குவது நல்லது.

அஷ்டமாதிபதி என்ன செய்வார்?

ஒவ்வொரு லக்கினத்திற்கும் எட்டாம் இடத்திற்கு உரியவர் அஷ்ட மாதிபதி என்பார்கள். இந்த அஷ்டமாதிபதியினுடைய தசை வந்து விட்டால் எல்லோருமே பயப்படுவார்கள். அது உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். குறிப்பாக, இந்த திசையில் பெரும்பாலும் செய்யக்கூடாத காரியங்களைச் செய்துவிட்டு அல்லது பேராசைப்பட்டு ஏதாவது சட்டப்படி அல்லாத செயல்களைச் செய்து நஷ்டங்களையும் துன்பங்களையும் சந்திப்பார்கள்.

எனவே, அஷ்டம திசை நடக்கும் பொழுது எக்காரணத்தை முன்னிட்டும் பிறருக்கு வாக்கு கொடுப்பதோ தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுவதோ, ஏற்கனவே உள்ள வணிகத்தை கடன் வாங்கி பெரிய அளவில் வளர்க்கும் முயற்சிகளிலோ ஈடுபடுவது கூடாது. அந்த திசா காலம் முழுக்க, இருப்பதைக் கொண்டு வாழ்வதற்கு முயற்சிக்க வேண்டும். ஏதேனும் செய்துதான் ஆக வேண்டிய காரியங்கள் இருந்தால் அதை மிகவும் நிதானமாகவும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்தும் செய்ய வேண்டும். அஷ்டம திசை நடப்பவர்கள் அஷ்டமி நேரத்தில் பைரவரை வழிபடுவது நல்லது. முருக பக்தர்கள் முருகனுடைய ஆலயத்திற்கு செல்வதும், கந்த சஷ்டி கவசத்தை தொடர்ந்து பாராயணம் செய்வதும் பலன் தரும்.

ஐந்தாம் இடம் ராகு இருந்தால் குழந்தை பிறக்காதா?

சில பேர் ஐந்தாம் இடத்தில் ராகு – கேது போன்ற சர்ப்ப கிரகங்கள் இருந்தாலும், சனி போன்ற பாவ கிரகங்கள் இருந்தாலும், குழந்தைகள் பிறக்காது என்று சொல்வார்கள். இன்னும் சிலர் பயமுறுத்துவார்கள். ஐந்தாம் இடத்தில் குரு இருந்தால், `காரகோ பாவ நாஸ்தி’ என்று புத்திரகாரகன் ஐந்தாம் இடத்தில் இருப்பது ஆகாது என்று சொல்வார்கள். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஒருவருக்கு புத்திர பிரார்ப்தி ஏற்பட வேண்டும் என்று சொன்னால், ஐந்தாம் இடம் மட்டுமல்ல, ஒன்பதாம் இடத்தையும் பார்க்க வேண்டும். இதற்கு `பாவ வலிமை’ என்று பெயர். இதை லக்னம் வழியாகப் பார்ப்பதை போலவே, ராசி வழியாகவும் பார்க்க வேண்டும்.

ஐந்தாம் இடத்து அதிபதி வலிமையோடு இருக்கிறானா என்பதைக் கவனிக்க வேண்டும். ஐந்தில் அமர்ந்திருக்கக் கூடிய கிரகங்கள், சுபகிரக சாரங்களில் அமைந்திருந்தால், அல்லது ஐந்தாம் இடத்தில் உள்ள கிரகம் 5-க்குரியவன் சாரத்திலோ, லக்னாதிபதியின் சாரத்திலோ, ஒன்பதாம் அதிபதியின் சாரத்திலோ அமர்ந்திருந்தால், அங்கு ராகு இருந்தாலும் கேது இருந்தாலும் சனி இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயமாக சந்தான பிரார்த்தி உண்டு.

காலணிகளில் இருக்கிறது ரகசியம்

காலில் அணியும் காலணிகளை நாம் சாதாரணமாக நினைக்கின்றோம். ஆனால், அது சாதாரணமல்ல. தலை என்பது ஜாதகத்தில் முதல் இடம் (லக்கினம்), கால் என்பது 12-ஆம் இடம். காலில் அணியும் காலணிகள் 12-ஆம் இடத்தின் அமைப்பை மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றது. எனவே நாம் காலணிகளை எப்படி பராமரிக்கிறோம் என்பதைப் பொறுத்து, 12-ஆம் இடத்தின் பலா பலன்கள் தெரியவரும்.

அதன் நல்ல சுபபலன்களைப் பெற வேண்டும் என்று சொன்னால், நாம் நம் காலணிகளை மிக நல்ல முறையில் அதற்கென்று உரிய கௌரவத்தோடு பராமரிக்க வேண்டும். அதாவது, ஒரு இடத்தில் போடுகிறோம் என்று சொன்னால் அந்த காலணிகளை உதறி தூக்கி எறிவதோ, ஒவ்வொன்றும் ஒரு பக்கமாகப் போடுவதோ கூடாது. காலணிகளின் அழகை பொறுத்துத் தான் நடையின் அழகு இருக்கிறது. ஒருவருடைய குணத்தின் அழகும் இருக்கிறது.

காலணிகள் எப்படி இருக்கிறது என்பதை வைத்துக் கொண்டு அவர் இயல்பை நாம் எளிதாக கணித்துவிட முடியும். எனவே காலணிகளை முறையாக அதற்குரிய நேர்த்தியுடன் நாம் பராமரித்தால் அற்புதமான பலன்களைப் பெறலாம்.

1. காலணிகளை தூக்கி எறியாமல், அதற்குரிய இடத்தில் வைக்க வேண்டும்.
2. காலணிகளை தகாத முறையில் பயன்படுத்துவது கூடாது.
3. நன்கு துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பழுதில்லாமல் இருக்க வேண்டும்.

மிக நன்றாக மகிழ்ச்சியுடன் வாழ்பவர்களை பார்த்தால், அவர்கள் காலணிகளை எப்படிப் பராமரிக்கிறார்கள்? எப்படி அணிகிறார்கள்? எப்படி நடக்கிறார்கள்? எப்பொழுதெல்லாம் மாற்றுகிறார்கள்? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக, 12-ஆம் இடம் சரியாக இல்லாதவர்கள் காலணிகள் அணிவதிலும் பராமரிப்பதிலும் அலட்சியம் காட்டுவார்கள். அவர்களுக்கு தகுந்த காலணியாகவும் அது இருக்காது. 12-ஆம் இடத்தின் சுபபலன்களைப் பெற வேண்டும் என்று சொன்னால், காலணிகளிலும் கவனம் செலுத்துங்கள்.

தொகுப்பு: பராசரன்

The post ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Tags : Rahu ,
× RELATED ஸ்ரீ ராம தரிசனம்