×

டி20 உலக கோப்பையில் ஆடுவது குறித்து விரைவில் முடிவு: ரோகித்சர்மா பேட்டி


செஞ்சூரியன்: இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று தொடங்கியது.இந்த போட்டி தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் டி.20 உலக கோப்பையில் ஆடுவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, கிரிக்கெட்டை நேசிக்கும் அனைவரும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விளையாடுவார்கள். விளையாடுவது மட்டுமல்ல, சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் நினைப்பார்கள். நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என எனக்கு புரிகிறது. இதற்கான பதிலை விரைவில் பெறுவீர்கள், என்றார்.

கே.எல்.ராகுல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை சந்திப்பார்கள். ஏதாவது ஒரு கட்டத்தில் அவர்களுக்கு வேறு ஒரு பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழல் நிகழும். எனக்கு தெரிந்து ஒரு சில வீரர்கள் தான் தொடக்கத்தில் இருந்தே ஒரே ஒரு இடத்தில் விளையாடி தங்களுடைய முழு கிரிக்கெட் வாழ்க்கையும் அதே இடத்தில் விளையாடி இருப்பார்கள். இதில் கேஎல் ராகுல் நான் சொன்ன முதல் வகையை சேர்ந்தவர். குறிப்பாக உலகக் கோப்பை தொடரில் அவர் விக்கெட் கீப்பிங் பணியை மிகச் சிறப்பாக செய்தார். விக்கெட் கீப்பர் பணியை தாம் எடுத்துக் கொள்கிறேன் என்று அவர்தான் அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டு செய்தார்.

இதன் மூலம் எங்களுக்கு கூடுதலாக 5, 6 மற்றும் 7வது இடத்தில் ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. கடந்த முறை தென்ஆப்ரிக்காவில் டெஸ்டில் சதம் அடித்தார். அப்போது அவர் தொடக்க வீரராக களம் இறங்கினார். ஆனால் இம்முறை அவர் நடுவரிசையில் விளையாட போகிறார். தென்ஆப்ரிக்க ஆடுகளம் என்பது மிகவும் சவாலானது. இங்கு பவுன்ஸ் மற்றும் சீம் இருக்கும். இதனால் இது போன்ற சூழலில் விளையாடும் போது நீங்கள் பொறுமை காத்து எந்த ஷாட்டுகளை ஆடினால் ரன் கிடைக்கும் என்ற புரிதலோடு விளையாட வேண்டும், என்றார்.

வரலாற்றை படைத்தால் மகத்தானதாக இருக்கும்
நாங்கள் தென்ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஒருவேளை இத்தொடரை நாங்கள் வென்றால் அது உலகக்கோப்பை தோல்விக்கு இழப்பீடாக இருக்குமா என்பது எனக்கு தெரியாது. ஏனெனில் உலகக்கோப்பை போட்டி என்பது அதனுடன் எதையும் ஒப்பிட முடியாது. ஆனால் இதுவும் பெரிய தொடராகும். எனவே அதில் நாங்கள் வரலாற்றை படைத்தால் மகத்தானதாக இருக்கும் என பேட்டியின் போது ரோகித் தெரிவித்தார்.

The post டி20 உலக கோப்பையில் ஆடுவது குறித்து விரைவில் முடிவு: ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Tags : T20 World Cup ,Rohit Sharma ,Centurion ,India ,South Africa ,
× RELATED பவுலர்களால் வெற்றி…ரோகித் ஷர்மா பாராட்டு