×

செங்கடலில் நீடிக்கும் பதற்றம் இந்தியாவுக்கு வந்த மேலும் ஒரு கப்பல் மீது ஹவுதி படையினர் டிரோன் தாக்குதல்: 25 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்

புதுடெல்லி: செங்கடல் பகுதியில் 25 இந்திய மாலுமிகளுடன் இந்தியா நோக்கி வந்த மற்றொரு கப்பல் மீது ஹவுதி படையினர் டிரோன் தாக்குதல் நடத்தியது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் கப்பலில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது இந்திய கப்பல் என கூறப்பட்ட தகவலை கடற்படை மறுத்துள்ளது. காசா மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேலை கண்டிக்கும் வகையில், செங்கடல் வழியாக அந்நாட்டுக்கு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஏமனின் ஹவுதி போராளிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதன்படி, செங்கடலில் ஏமனை ஒட்டி உள்ள பாப் அல் மன்தாப் ஜலசந்தி பகுதியில், இதுவரை பல்வேறு நாட்டு கப்பல்கள் மீது ஹவுதி டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால், உலகளாவிய கடல் வழி சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹவுதியின் தாக்குதல் அச்சம் காரணமாக, இவ்வழியாக வருவதை பல்வேறு கப்பல் நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன. இந்நிலையில், செங்கடல் பகுதியில் இந்திய நாட்டு கொடியுடன் வந்த எம்வி சாய்பாபா எனும் வணிக கப்பல் மீது ஹவுதி போராளிகள் டிரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் நேற்று தகவல் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே நேற்று முன்தினம் அரபிக்கடல் பகுதியில் மங்களூரு நோக்கி கச்சா எண்ணெய் ஏற்றி வந்த இஸ்ரேலைச் சேர்ந்த எம்வி கெம் புளூட்டோ என்ற வணிக கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 20 இந்திய மாலுமிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீப்பிடித்த அந்த கப்பலை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் செங்கடல் பகுதியில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டது. கப்பலில் 25 இந்திய மாலுமிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இது இந்திய நாட்டு கப்பல் அல்ல என்பதை இந்திய கடற்படை உடனடியாக தெளிவுபடுத்தியது. அந்த கப்பல் ஆப்ரிக்காவின் கபோன் நாட்டு கப்பல் என்றும், இந்திய கப்பல் பதிவு துறையிடம் சான்றிதழ் பெற்றது எனவும் தெரிவித்தது. கப்பலில் இருந்த 25 இந்திய மாலுமிகள் யாரும் தாக்குதலில் காயமடையவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் நடத்தப்பட்ட அதே சமயத்தில் நார்வே நாட்டை சேர்ந்த எம்வி பிளாமனேன் வணிக கப்பலை குறிவைத்தும் ஹவுதி டிரோன் ஏவி உள்ளது. ஆனால், அது குறி தவறி கப்பலை தாக்கவில்லை என அமெரிக்க ராணுவம் கூறி உள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி முதல் தற்போதுவரை ஹவுதி படையினர் 15 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். செங்கடல் பகுதியில் நடத்தப்படும் இந்த தொடர் தாக்குதலால் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

* கடற்படை விசாரணை
குஜராத்தின் போர்பந்தரில் இருந்து 217 கடல் மைல் தொலைவில் அரபிக்கடலில் எம்வி கெம் புளூட்டோ வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல் குறித்து இந்திய கடற்படை விசாரணையை தொடங்கி உள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த இந்த கப்பல் டிரோன் தாக்குதலால் சேதமடைந்துள்ளது. இது தற்போது இந்திய கடலோர காவல் படையின் விக்ரம் கப்பல் மற்றும் கடல் ரோந்து விமான பாதுகாப்புடன் மும்பைக்கு கொண்டு வரபடுகிறது. இதுவரையிலும் இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

* இந்தியாவைப் பொறுத்த வரையில் 20 சதவீத கப்பல் போக்குவரத்து செங்கடல் வழியாக நடக்கிறது.

* சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்கள் இவ்வழியை கடந்தே வருகின்றன.

* சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனான தொலைபேசி உரையாடலில் பிரதமர் மோடி, ஹவுதி போராளிகளால் ஏற்பட்டுள்ள கடல் வழி போக்குவரத்து கவலைகள் குறித்து குறிப்பிட்டார்.

The post செங்கடலில் நீடிக்கும் பதற்றம் இந்தியாவுக்கு வந்த மேலும் ஒரு கப்பல் மீது ஹவுதி படையினர் டிரோன் தாக்குதல்: 25 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Red Sea ,Houthi ,India ,New Delhi ,Dinakaran ,
× RELATED இந்தியா நோக்கி வந்த ரஷ்ய எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்