×

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணி: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட 8,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் முலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்து அவதரித்த நாளே கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்துவை உலகிற்கு வரவேற்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் தயாராகி விடுவார்கள். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுப்படுத்தும் விதமாக கிறிஸ்துமஸ் திருநாளன்று கிறிஸ்தவர்கள் அனைவரும் தேவாலயத்திற்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை நடத்துவதுடன், வீடுகளிலும் நட்சத்திரங்களை தொங்க விட்டு, கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரித்து, கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சுமார் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவித்துள்ளார். துணை ஆணையர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையர்கள் தலைமையில் 8,000 போலீசார் விரிவான பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையின் பாதுகாப்பு பணிக்கு உதவியாக ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். டிச.24-ல் இரவு முதல் டிச.25 கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் வரை சென்னையில் உள்ள 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மக்கள் அதிகளவு கூடும் தேவாலயங்களுக்கு கூடுதலாக சட்டம் – ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவலர்கள் சாதாரண உடையில் கண்காணித்து திருட்டு, ஈவ்டீசிங் உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு, போக்குவரத்தை சரிசெய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும் கிறிஸ்துவ தேவாலயங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

The post கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணி: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Christmas ,Police Commissioner ,Sandeep Rai Rathore ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...