×

சுத்த ஞானம் அருளும் நாமம்!

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

சுத்தவித்யா அங்குராகார த்விஜ பங்க்தி த்வய உஜ்வலா

இதற்கு முன்பு சொன்ன நாமங்கள் அனைத்தும் காது, தாடங்கம், கன்னம், உதடு என்று ஒவ்வொரு வர்ணனையாக பார்த்துக் கொண்டே வந்தோம். இந்த வர்ணனையில் காது – ஸ்ரவணம் எனும் கேட்டல், தாடங்கம் என்பது மனனத்தையும், கன்னம் நிதித்யாசனத்தையும், உதடு என்பது சமாதியையும், குரு வாக்கியத்தையும் குறிப்பிடு வதாகப் பார்த்தோம். இப்போது அந்த உதடுகளுக்கு உள்ளாக இருக்கக்கூடிய அம்பாளுடைய பற்களை வர்ணிக்கின்றார்கள்.

அப்போது பற்களை வர்ணிக்கும்போது சுத்தவித்யா அங்குராகார த்விஜ பங்க்தி த்வய உஜ்வலா… இப்போது இந்த சுத்த வித்யா என்பதை பார்ப்பதற்கு முன்பு பற்களைப்பற்றி கொஞ்சம் சிந்திப்போம். தந்தம்… என்றொரு வார்த்தை இருக்கின்றது. `தம்ஷ்ட்ரம்’ என்றொரு வார்த்தை உண்டு. நரசிம்ம காயத்ரியை பார்க்குபோது..

வஜ்ர நகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரசிம்ஹ
ப்ரசோதயாத்

அப்போது தம்ஷ்ட்ரம் என்றாலும் பற்கள்தான். தந்தம் என்றாலும் பல்தான். ஏனெனில், விநாயகருக்கு ஏகதந்தன் என்கிற பெயர் இருக்கின்றது. அதனால், தந்தம் என்றாலும் பற்களைத்தான் குறிக்கின்றது. ஆனால், வசின்யாதி வாக் தேவதைகள் தந்தம், தம்ஷ்ட்ரம் என்கிற வார்த்தைகளை எல்லாம் விட்டுவிட்டு `த்விஜம்’ என்கிற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார்கள். த்விஜம் என்றும் பல்லுக்கு பெயர் இருக்கின்றது.

த்விஜம் என்கிற வார்த்தையில் த்வி என்றால் இரண்டு. ஜம் என்றால் பிறக்கிறது. த்விஜம் என்றால் இரண்டுமுறை பிறப்பது. முதலில் நாம் பிறக்கும்போது ஒருவிதமான பற்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட வயதில் அந்த பற்கள் முழுக்க விழுந்து மீண்டும் புதிதாக முளைக்கின்றது. இரண்டு முறை அந்தப் பற்கள் முளைப்பதால் பல்லுக்கு த்விஜம் என்று பெயர்.

பல்லுக்கு மட்டுமே த்விஜம் என்று பெயரா எனில், பறவைகளுக்கும் த்விஜம் என்று பெயர். ஏனெனில், ஒரு பறவையிலிருந்து முட்டை வருகின்றது. அந்த முட்டையிலிருந்து மீண்டும் பறவை பிறக்கின்றது. அப்போது முட்டை ஒரு பிறப்பு. அந்த முட்டையிலிருந்து பறவை பிறப்பது இன்னொரு பிறப்பு. அப்போது இரண்டு முறை பிறப்பதினால் பறவைக்கு த்விஜம் என்று பெயர். அதற்கடுத்து, உபநயன சம்ஸ்காரம், மந்திர தீட்சை யாருக்கெல்லாம் ஆகியிருக்கிறதோ அவர்களுக்கு த்விஜர்கள் என்று பெயர். பொதுவாக, உபநயன சம்ஸ்காரம், காயத்ரீ உபதேசம் நடக்கின்றது.

அப்போது முதலில் பிறந்ததை ஒரு பிறப்பு என்றும், அதற்கு அடுத்து உபநயன சம்ஸ்காரத்தை அடுத்து காயத்ரீ மந்திரத்தை உபதேசம் வாங்கியது இரண்டாவது பிறப்பு. அதனாலும், த்விஜன் என்று பெயர். அதற்கு அடுத்து, மந்திர தீட்சை வாங்கியிருந்தாலும் அவர்களுக்கும் த்விஜன் என்றுதான் பெயர். ஏனெனில், மந்திர தீட்சை வாங்கியது இன்னொரு பிறப்பாக கணக்கு. அதனால் அவர்களுக்கும் த்விஜர்கள் என்று பெயர்.

இதையெல்லாம்விட மேலான அர்த்தம் என்னவென்றால், சாதாரணமாக தாயின் வயிற்றிலிருந்து பிறப்பது முதல் பிறப்பு. என்றைக்கு ஞானம் என்றொரு விஷயம் இருக்கிறது, ஆத்மா என்றொன்று இருக்கிறது என்கிற எண்ணம் நமக்கு உதிச்சதோ, குருவினுடைய கிருபையினால் என்றைக்கு ஞானத்தைப் பற்றி அத்யாத்ம வாழ்க்கையில் நம் மனதை செலுத்த வேண்டுமென்ற எண்ணம் என்றைக்கு உதித்ததோ அது இன்னொரு பிறப்பிற்கு சமானம். குரு கிருபையினால் என்றைக்கு நம்முடைய வாழ்க்கை அத்யாத்மத்திற்குள் நுழைந்ததோ அது இன்னொரு பிறப்பிற்கு சமானம்.

அப்போது அந்த அத்யாத்ம மார்க்கத்தில் யாரெல்லாம் ஞான மார்க்கத்தில், பக்தி மார்க்கத்தில் பிரம்மத்தை யாரெல்லாம் உபாசிக்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் த்விஜர்கள் என்றுதான் பெயர். மார்க்கங்கள் வெவ்வேறாக இருக்கலாம். எத்தனையோ தத்துவங்கள் இருக்கலாம். யாருக்கெல்லாம் உண்மைப் பொருளை அறிந்து கொள்ள வேண்டுமென்ற அறிவு யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அந்த மேலான உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் த்விஜர்கள் என்றுதான் பெயர்.

அதுதான் உபநயனம். என்றைக்கு ஞானத்தைப் பற்றிய விழைவும், அந்த ஞானத்தை அடைவதுதான் இந்தப் பிறப்பினுடைய மேலான நிலை என்கிற எண்ணம் வருகின்றதோ அதுதான் உபநயனம். அப்போது மூன்றாவது கண் திறக்கின்றது. லௌகீக வாழ்க்கையே உண்மை என்று நம்பி இங்கேயே இருப்பவர்களுக்கு இரண்டு கண்தான் இருக்கின்றது. இந்த வாழ்க்கையின் அர்த்தம் ஏதோ ஒரு உண்மைப் பொருளை உணர்வதற்குத்தான் இந்த வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கின்றது என்கிற எண்ணம் வந்ததெனில், அந்த எண்ணம் வந்த நாளே உபநயனம்.

உபநயனத்தில் இந்த விஷயத்தைத்தான் காயத்ரீ மந்திரமாக உபதேசம் செய்கிறார்கள். அதுதான் மூன்றாவது கண்ணினுடைய திறப்பு. அந்த ஞானத்தினுடைய பிறப்பு மூன்றாவது கண் திறப்பிற்கு சமானமாகும். அந்த இன்னொரு பிறவி பிறக்கறதுனால அந்த அத்யாத்ம தசையில இருக்கறவங்களுக்கெல்லாம் த்விஜர்கள் என்று பெயர். ஏனெனில் இன்னொரு முறை பிறக்கக் கூடாது. இன்னொரு தாயின் வயிற்றில் பிறக்கக் கூடாது.

சரி, இந்த த்விஜர்களை இங்கு ஏன் சொல்ல வேண்டுமென்று பார்ப்போமா! அம்பாளுடைய பல்லை வர்ணிக்கும்போது ஏன் சொல்ல வேண்டும். இங்கு யாருடைய பல்லை வர்ணிக்கிறார்கள் எனில், பரம ஞான வஸ்துவாக இருக்கக்கூடிய லலிதையினுடைய பற்களை வர்ணிக்கிறார்கள். சித் சொரூபிணீ. பரம ஞான வஸ்து. சித் சொரூபிணீயாக இருக்கக்கூடிய அம்பாளுடைய பற்களை வர்ணிக்கும்போது அதற்கு ஞானியரைத் தவிர வேறு யாரையும் உவமை சொல்ல முடியாது.

அங்கு ஞான மயமாக இருக்கிறாள், அம்பாள். அங்கு யாரைச் சொல்ல முடியும். ஞானிகளைத்தான் அவளுடைய பல்லுக்கு உவமையாகச் சொல்ல முடியும். இதற்கு முன்பு வாக்தேவதைகள் நமக்கு தெரிந்த விஷயங்களை உவமையாகக் காண்பித்தார்கள். கண்ணாடி, பவழம், கோவைப்பழம், இப்படியெல்லாம் நமக்கு தெரிந்த விஷயங்களை உவமையாகக் காண்பித்தார்கள். ஆனால், இங்கு ஞானிகளையே உவமையாக்குகிறார்கள். எப்படியெனில், த்விஜர்கள் என்கிற ஞானிகள் இரண்டு வரிசையில் அமர்ந்திருந்தார்கள் என்றால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

நாம் ஒரு சபைக்குள் நுழைகிறோம். அந்த சபையில் இருக்கக் கூடியவர்கள் எல்லோருமே ஞானிகள். அந்த ஞானிகள் இரண்டு வரிசையில் உட்கார்ந்திருக்கிறார்கள். அப்படி உட்கார்ந்திருப்பது எப்படியிருக்குமோ அப்படித்தான் அம்பாளுடைய இரண்டு பல்லினுடைய வரிசைகள் இருக்கின்றது. அந்த சபையில் இருக்கும் அத்தனை பேரும் ஞானிகள். அந்த ஞானிகள் இரண்டு வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள் என்றால் எப்படியிருக்குமோ அப்படி அம்பாளுடைய பல் இருக்கின்றது.

இங்கு தியாகராஜ சுவாமிகளின் எந்தரோ மகானுபாவலு… அந்தரிகி வந்தனமுலு என்கிற கீர்த்தனை இங்கு நமக்கு பொருந்தும். ஏனெனில் இங்கு தியாகராஜ சுவாமிகள் சபையை பார்க்கின்றார். அங்கு எல்லோருமே மகானுபாவலுவாக இருக்கிறார்கள். அதைப் பார்த்தவுடன்தான் அந்த கீர்த்தனை வருகின்றது. இந்த கீர்த்தனைக்கான சூட்சுமம் இங்கு இருக்கிறது. இந்த அழகான பற்கள் ஞானிகள் வரிசையாக அமர்ந்திருப்பதைக் காட்டுகின்றது.

இப்போது நமக்கு ஞானிகள் என்கிற குருவினுடைய தரிசனம் கிடைக்கின்றது. நமக்கு குருவினுடைய கிருபை கிடைக்கின்றது. இப்போது இவை எல்லாமும் ஞானியரின் தரிசனமாகக் கொண்டால் நமக்கு நம்முடைய குருவினுடைய் தரிசனம் கிடைக்கின்றது. அம்பிகை சிறியதாக புன்னகை செய்தால், ஒரு மந்தஸ்மிதம் செய்கிறாள் என்று கொள்வோமாயின், அந்தப் புன்னகை செய்யும்போது மொத்தப் பல் வரிசையும் தெரியாது. புன்னகையில் மொத்த பல்வரிசையும் தெரியக் கூடாது. வாய்விட்டுச் சிரிக்கும்போதுதான் மொத்தப் பல் வரிசையும் தெரியும். புன்னகை செய்யும்போது ஒரு பல் அல்லது இரண்டு பல்தான் தெரியும்.

முன்னால் இருக்கக் கூடிய ஓரிரு பற்கள் மட்டும்தான் தெரியும். இப்போது அம்பாள் பண்ணக் கூடிய அந்த புன்னகையில் தெரியக் கூடிய அந்த ஒரு பல் இருக்கிறது இல்லையா, அந்த ஒரு பல்தான் நம்முடைய குருநாதர். எத்தனையோ ஞானிகள் இருக்கிறார்கள். எத்தனையோ மகான்கள் இருக்கிறார்கள். நமக்கு யார் மூலமாக காண்பிக்க வேண்டுமோ அவர்கள் மூலமாக காண்பிப்பாள்.

இந்த முப்பத்திரண்டு என்பது ஒரு எண்ணிக்கை. ஆனால், அவளுடைய விஸ்வரூபத்தில் எண்ணற்ற ஞானிகளை குறிப்பதாகத்தான் அமைந்திருக்கிறது. ஆனாலும், நாம் முப்பத்தியிரண்டு என்கிற எண்ணிக்கையை வைத்துக் கொண்டாலும்கூட அந்த இடத்தில் இன்னொரு சூட்சுமம் வருகின்றது. என்னவெனில் ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தில் ஷோடசாக்ஷரிக்கு சுத்த வித்யா என்று பெயர். அதனால், ஒரு விதை முளைத்து இரண்டாகவிடும்.

எந்தவொரு செடியாக இருந்தாலும் ஒன்றாக இருக்கும் முதலில். அந்த விதையிலிருந்து முளைக்கும்போது அது இரண்டாகப் பிளக்கும். அப்போது பதினாறு அட்சரங்கள் ஷோடசாக்ஷரி மந்திரம் பீஜமாக இருக்கின்றது. விதையாக இருக்கின்றது. அந்த விதை வெளியே வந்து இரண்டாகப் பிளந்தால் அந்த பதினாறு அட்சரங்களும் இரண்டிரண்டாகப் பிளந்தால் முப்பத்தியிரண்டு. அதைப்போல, அம்பாளுடைய பற்கள் இருக்கின்றன. இந்த இடத்தில் வசின்யாதி வாக்தேவதைகள் பற்களின் எண்ணிக்கையை குறிப்பிடவில்லை. ஆனால், இங்கு அந்தப் பார்வையிலும் நாம் பார்க்கலாம்.

இந்த நாமத்தில் உள்ள சுத்தவித்யா என்பதற்கு ஞானம் என்று பொருள். சுத்த வித்யா என்றால் ultimate knowledge… எந்த பேரறிவுக்கு எல்லைகள் வகுக்கப்படவில்லையோ அதற்குத்தான் சுத்தவித்யா என்று பெயர். Ultimate wisdom. எதைத் தெரிந்து கொண்டால் தெரிந்து கொள்ள வேண்டியது வேறெதுவும் இல்லையோ அதுவே சுத்தவித்யா.

இந்த இடத்தில் அம்பாளின் ஒரு புன்னகையில் நமக்கு ஞானியரின் தரிசனம் கிட்டுகின்றது. அதனால்தான், அம்பிகையை குரு அம்சமாகச் சொல்கிறோம். அந்த ஞானிகளும் அம்பிகையும் வேறு வேறு அல்ல. அவள்தான் ஞானிகளின் ரூபத்திலும் வருகிறாள். அந்த ஞானிகளை தரிசிப்பதற்கான அனுக்கிரகத்தையும் அவள்தான் செய்கின்றாள். அந்த ஞானியரை காண்பித்துக் கொடுப்பதும் அம்பாள்தான்.

அப்போது இங்கு என்ன வருகின்றது, `த்விஜ பங்க்தி த்வயோஜ்வலா’ என்பது ஞானிகளின் வரிசைகள் போல் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, அதற்கு முன்னால் சுத்த வித்யா அங்குராகார… அங்குரம் எனில் பீஜம். விதை. அங்குராகார என்று வரும்போது. அங்குரம் எனில் விதை. சுத்த வித்யா எனில் ஞானம். அந்த அங்குராகாரமாக இருக்கக் கூடிய த்விஜர்கள், ஞானம் என்கிற விதையை தன்னுள் வைத்திருக்கக் கூடிய ஞானிகள் என்றும் இந்த நாமத்திற்கு இன்னொரு உயர்ந்த பொருள்.

அவர்களுக்கு சிஷ்யன் என்கிற நல்ல நிலம் கிடைத்தால், சிஷ்யன் என்கிற சத் பாத்திரம் எப்போது கிடைக்கின்றதோ அந்த ஞானிகளுடைய விதை அந்த சிஷ்யனுடைய நல்ல நிலத்தில் மரமாக வளரும். அப்போது சுத்த வித்தையை தனக்குள் விதையாக வைத்திருக்கக்கூடிய ஞானிகள் எப்படிப் பிரகாசிப்பார்களோ அதுபோல அந்த ஞானிகள் வரிசையாக உட்கார்ந்திருப்பதுபோல அம்பிகையினுடைய பற்களினுடைய வரிசை பிரகாசிக்கின்றது. இங்கு கடைசி வார்த்தையான ஜ்வலா…

பிரகாசமாவது. அது த்வயோ ஜ்வலா.. இரண்டு வரிசை. மேல் வரிசை. கீழ் வரிசை. வெவ்வேறு உவமையைச் சொல்லிக் கொண்டு வந்தவர்கள். இங்கு ஞானி களையே உவமையாக்குகின்றனர். இந்த நாமத்திற்கு திருவாரூரைத் தவிர வேறென்ன சொல்ல முடியும். நிறைய ஞானியரை தன்னகத்தே கொண்ட தலங்களுள் திருவாரூரும் ஒன்று. திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பார்கள். இந்த நாமமும் இன்னொரு பிறப்பான த்விஜத்தை பற்றியே பேசுகின்றது.

எனவே, திருவாரூரில் பிறப்பது என்பது ஞானம் என்கிற இன்னொரு பிறப்பற்ற பிறவியை எடுப்பது என்பதாகும். நிறைய நாயன்மார்கள் திருவாரூரிலேயே இருந்தனர். தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சாமா சாஸ்திரிகள் மூவருமே திருவாரூர் மண்ணில் அமர்ந்து அம்பிகையின் தரிசனத்தை பெற்றனர். திருவாரூரில் அருளும் கமலாம்பிகையை இந்த நாமத்தை சொல்லி தரிசியுங்கள். அந்த கோயில் பற்றிய சில விஷயங்களை பார்ப்போமா!

* முசுகுந்த சக்ரவர்த்தியால் தேவேந்திரனிடமிருந்து பெற்று வரப்பட்ட ஏழு லிங்கத்தலங்களுள் (சப்தவிடங்கத் தலங்கள்) வீதிவிடங்கர் எனும் மரகதலிங்கம் இங்கு உள்ளது.

* பங்குனி உத்திரத்தன்று இத்தல ஈசன் பக்தர்களுக்காக ஆடும் நடனம், ‘பக்தர் காட்சி’ என அழைக்கப்படுகிறது.

* தியாகராஜரை பூஜிக்கும் சிவாச்சாரியார்கள் நயினார் எனவும், பூஜைக்கு உதவுபவர்கள் அணுக்கத் தொண்டர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

* இந்த தியாகராஜருக்கு முசுகுந்த சக்ரவர்த்தி செய்த முசுகுந்தார்ச்சனை, முகுந்தனான திருமால் செய்த முகுந்தார்ச்சனை போன்ற சிறப்பு அர்ச்சனைகள் நிகழ்த்தப்படுகின்றன.

* கேட்ட வரங்களையெல்லாம் தரும் தியாகராஜரால் ஒரே ஒரு வரம் மட்டும் தரமுடியாதாம். அது, மறுபிறவி! ஏனெனில் தன்னை வணங்கும் அடியாருக்கு முக்தியளித்து விடுபவராம் இந்த தியாகராஜர்.

* இத்தல இறைவி கமலாம்பிகை தனி சந்நதியில் தவக்கோலத்தில் நான்கு கரங்களுடன், தாமரை, பாசம், அக்கமாலை ஏந்தி கால் மேல் கால் போட்டு யோகாசனை நிலையில் அருள்கிறாள்.

* ஐம்பத்தோரு எழுத்துகள் பொறிக்கப்பட்ட திருவாசியுடன் கூடிய அட்சரபீடம் தனிச் சிறப்பு கொண்டது.

* தன் தோழியின் இடுப்பில் அமர்ந்திருக்கும் முருகனுடைய இடது கை சுண்டு விரலைப் பிடித்தபடி காட்சிதரும் நீலோத்பல அம்பிகை பிராகாரத்தில் அழகுற காட்சியளிக்கிறார்.

* சங்கீத மும்மூர்த்திகளான முத்துசாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரிகள், தியாகையர் மூவரும் பிறந்த தலம் திருவாரூர்.

(சக்தி சுழலும்)

The post சுத்த ஞானம் அருளும் நாமம்! appeared first on Dinakaran.

Tags : Adi Shakti Ramya Vasudevan ,Krishna ,Suddavidya Ankurakhara ,Dvija Pangti ,Dwaya Ujjwala ,Sudda Gnanam ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...