×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

557. அச்யுதாய நமஹ (Achyuthaaya Namaha)

விருத்திராசுரன் என்ற அசுரனை அழித்தான் இந்திரன். இனி தன்னை வெல்ல யாருமே இல்லை என்ற அளவுக்குக் கர்வத்தை அடைந்தான் இந்திரன். நானே தேவலோகத்தின் ராஜா, தேவர்கள் ரிஷிகள் அனைவரும் தினமும் வந்து என்னை வணங்க வேண்டும், என்னைக் குறித்து முகத்துதி பாட வேண்டும் என்றெல்லாம் பலவாறு சட்டங்கள் போட்டான் இந்திரன்.

ஒருநாள் இந்திரன் தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து, எனக்குப் பெரிய அரண்மனை ஒன்றை அமைத்துத் தர வேண்டும். இதுவரை யாருமே அவ்வளவு பெரிய அரண்மனையில் வாழ்ந்திருக்கக் கூடாது. அத்தகைய பிரம்மாண்டமான அரண்மனையாக அது இருக்க வேண்டும் என்றான் இந்திரன். விஸ்வகர்மாவும் அப்படியே செய்யத் தொடங்கினார்.இதை எல்லாம் கவனித்த தேவர்களும் முனிவர்களும், திருமால் மற்றும் சிவனின் உதவியை நாடினார்கள். இந்திரனுக்கு எப்படியாவது பாடம் புகட்ட வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று திருமாலும் சிவனும் கூறி விட்டார்கள்.

விஸ்வகர்மா இந்திரனுக்காகக் கட்டிக் கொண்டிருந்த அரண்மனை வாசலில் ஒரு சிறுவன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த இந்திரன், அந்தச் சிறுவனிடம், என்ன சிறுவனே, அரண்மனை எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது பார்த்தாயா என்று கர்வத்துடன் கேட்டான்.அதற்கு அந்தச் சிறுவன், ஆம் இந்திரரே, இதுவரை இருந்த எந்த ஒரு இந்திரனும் இவ்வளவு பெரிய அரண்மனையில் இருந்ததில்லை என்றான்.

அதைக் கேட்ட இந்திரன், இதுவரை யார் இந்திரனாக இருந்தார்கள் என்று கேட்டான். அதற்கு அச்சிறுவன், ஆம் உங்களுக்கு முன்பும் இந்திரன் என்ற பதவியில் பலர் இருந்துள்ளார்கள். இப்போது நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கு முன் உங்கள் பதவியில் இருந்த யாரும் இத்தகைய அரண்மனையில் வாழ்ந்ததில்லை என்று நான் சொன்னேன் என்று விளக்கம் தந்தான்.

அப்படியானால் எனக்கு முன்பு இப்பதவியில் இருந்த இந்திரர்கள் யாவரும் என்ன ஆனார்கள் என்று கேட்டான் இந்திரன். அந்தச் சிறுவன் இந்திரனின் கையைப் பிடித்து ஒரு கரையான் புற்றுக்கு அழைத்துச் சென்றான். அதிலிருந்து வெளிவரும் எறும்புகளைக் காட்டி, இவர்கள் அனைவருமே இதற்கு முன் இந்திரர்களாக இருந்தார்கள். பதவியில் இருக்கும் சமயத்தில் கர்வம் அதிகரித்துச் செருக்குடன் செயல்பட்டதால், அவர்கள் பதவியை இழந்து எறும்பாகப் பிறந்து விட்டார்கள். அப்படி எறும்பாகப் பிறந்தால் தான், உலகம் எவ்வளவு பெரியது, நாம் எவ்வளவு சிறியவர் என்பதைப் புரிந்து கொண்டு பணிவை வளர்த்துக் கொள்ள முடியும் என்று கூறினான் சிறுவன்.

அந்தச் சிறுவனைப் பார்த்துக் கைகூப்பி, நீங்கள் யார் என்று கேட்டான் இந்திரன். கொஞ்ச நேரத்தில் இங்கே ஒரு துறவி வருவார். அவர் நான் யார் என்று சொல்வார் என்று சொல்லி விட்டுச் சிறுவன் மறைந்து விட்டான். அவ்வாறே ஒரு துறவி அவ்வழியே வந்தார். அவரிடம் இச்சிறுவன் யார் என்று கேட்டான் இந்திரன்.

அதற்கு அந்தத் துறவி, என் மார்பில் உள்ள ரோமங்கள் உதிர்ந்து கொண்டே வரும். மொத்தமும் உதிர்ந்தால் அப்போது உள்ள இந்திரன் தனது பதவியை இழந்து விடுவான். மீண்டும் எனக்கு ரோமங்கள் முளைக்கும். அவை உதிர்ந்தவுடன் அடுத்த இந்திரன் பதவி இழப்பான். இதை நீ அறிவாயா என்று கேட்டார். இன்னும் கலங்கிப் போன இந்திரன், அப்படியானால் நீங்கள் யார் என்று கேட்டான். அப்போது அந்தத் துறவி, நான் தான் சிவன், அந்தச் சிறுவன் வடிவில் வந்தவர் திருமால். உனக்குப் பாடம் புகட்டவே நாங்கள் இப்படி வேடமிட்டு வந்தோம். இனியாவது கர்வத்தை விடு என்று உபதேசித்து விட்டுச் சென்றார்.

இப்படி இந்திரன் உள்ளிட்ட பதவிகள் எதுவுமே நிரந்தரம் கிடையாது. ஆனால் திருமால் தனது பதவியில் எப்போதும் நழுவாமல் நிலைபெற்று இருப்பார். ஏனெனில் அவர்கள் பாப-புண்ணியங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். பரமாத்மாவாக விளங்குபவர். அதனால் தான் அச்யுத – தன் நிலையில் இருந்து என்றுமே விலகாதவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 557-வது திருநாமம்.அச்யுதாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் பணிவும் பொறுமையும் வளரும்படி திருமால் அருள்புரிவார்.

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

The post அனந்தனுக்கு 1000 நாமங்கள்! appeared first on Dinakaran.

Tags : Anantan ,Kunkum ,Anmikam ,Namaha Indra ,Vridhrasura ,Ananthan ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்