×

மகிழ்ச்சியைத் தருமா மார்கழி மாதம்?

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

மார்கழி 4 (20-12-2023) சனி பகவான், கும்ப ராசிக்கு மாறுதல்
மார்கழி 4 (20-12-2023) குரு பகவான், வக்கிர கதி நிவர்த்தி
மார்கழி 9 (25-12-2023) சுக்கிரன், விருச்சிக ராசிக்கு மாறுதல்
மார்கழி 11 (27-12-2023) செவ்வாய், தனுர் ராசிக்கு மாறுதல்
மார்கழி 23 (08-01-2024) புதன், தனுர் ராசியில் பிரவேசம்.

மாதங்கள் பலவாக இருந்தாலும், மார்கழி மாதத்திற்கென்று தனிப் பெருமையும், தெய்வீகப் புகழும் உள்ளன. ஆதலால்தான், மற்ற மாதங்களுக்குக் கிட்டாத ஓர் தன்னிகரற்ற பேறு இம்மாதத்திற்கு மட்டுமே கிடைத்துள்ளது! அப்படிப்பட்ட பெருமைதான் என்ன இந்த மார்கழி மாதத்திற்கு மட்டும்…?

குருஷேத்திர புண்ணிய பூமியில் நிகழ்ந்த மிகப் பெரிய மகா பாரதப் போரில், கீதாச்சாரியனான கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு, தர்மத்தின் சூட்சுமங்களை உபதேசித்தபோது, “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!” எனத் திருவாய்மலர்ந்தருளியிருப்பதே இத்தகைய ஈடிணையற்ற பெருமைக்குக் காரணமாகும்!

மார்கழி மாதம் என்பது தேவர்களின் உலகங்களுக்கு விடியற்காலை நேரமாகும்! “தட்சிணாயனம்” எனப்படும் ஆறுமாதக்கால இரவு நேரப் பொழுது முடிந்து, “உத்தராயனம்” என்னும் ஆறுமாதப் பகல் நேரம் ஆரம்பிக்கவுள்ள அதிகாலை நேரமே மார்கழி மாதம்! தேவர்கள், கந்தவர்கள், வித்யாதரர்கள், கின்னர கிம்புருடர்கள் உறக்கம் நீங்கி, கண் விழித்து, தேவ கங்கையில் நீராட ஆயத்தமாகும் நேரமே இந்த மார்கழி!!

இத்தகைய தெய்வீகத் தூய்மையை மனத்தில் நினைத்துத்தான் பரம பக்தையான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளும், தனது திருப்பாவையில், “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்…” எனப் பாடி, இம்மாதத்தின் உயர்வை உலகறியச் செய்துள்ளாள்! இதுபோன்றே, பரமசிவ பக்தரானவரும், மதுரை மீனாட்சி சுந்தரப் பெருமானின் திருவருளைப் பெற்றவருமான, மாணிக்க வாசகரும், இம்மாதத்தின் சூரியோதய காலத்தில் திவ்ய நாமங்களைச் சொல்லி, பார்வதி – பரமேஸ்வர திவ்ய தம்பதியினரைப் பூஜிப்பதாக, “திருவெம்பாவை” எனும் ரத்தினத்தை, நமக்குத் தந்தருளியுள்ளார்.

இம்மாதத்தில் அதிகாலையிலேயே துயிலெழுந்து, ஸ்நானம் செய்து, திருவெம்பாவையைச் சொல்லி பூஜித்து வந்தால், பாவங்கள் அனைத்தும் விலகும். உங்கள் குடும்பங்கள் சகல சௌபாக்கியங்களையும் பெற்று, செழித்தோங்கும். அதிகாலை நேரத்தில்தான் நமது மனமும் பளிங்குபோல் நிர்மலமாக இருக்கும். அதனால்தான், பூஜைக்கும், தியானத்திற்கும், ஜெபத்திற்கும், திவ்ய நாம பஜனைக்கும் ஏற்ற நேரமாக விடியற்காலை நேரத்தைத் தேர்ந்தெடுத்து, உபதேசித்தருளியுள்ளனர், நம் முன்னோர்கள்.

“கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து
அணைந்தான் கனையிருள் அகன்றது
காலை அம் பொழுதாய்
மதுவிரிந்து ஒழுகின மா மலர்
எல்லாம் வானவ அரசர்கள் வந்துவந்து
ஈண்டி எதிர்திசை நிறைந்தனர்
இவரொடும் புகுந்த
இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்”

என தொண்டரடிப் பொடி ஆழ்வாரும்,

“பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்,
புன்மையிருட்கணம் போயின யாவும்,
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல்லாயிரர் சூழந்து நிற்கின்றோம்”

என அரங்கன் திருப்பள்ளி எழுச்சியில் பாடிப் பரவசமடைந்துள்ளார்.

இத்தகைய பெருமைபெற்ற மார்கழி மாதத்திற்கென்று, மேலுமோர் தெய்வீகப் புகழ் உள்ளது. ஆடி மாதம், சுக்கிலபட்சம் (வளர்பிறை) ஏகாதசியன்று பகவான் ஸ்ரீமந் நாராயணன் உறங்க ஆரம்பிக்கிறார். ஆதலால்தான், அன்றைய ஏகாதசிக்கு “சயன ஏகாதசி” என்ற தனிச் சிறப்பு ஏற்பட்டது. அன்று உறங்கத் தொடங்கும் பகவான், மார்கழி மாதத்தில்தான் கண்விழித்தருள்கிறார். ஆதலால்தான், நாமும் மார்கழி மாதத்தில், அதிகாலையிலேயே எழுந்திருந்து, நீராடி, திருப்பாவை, திருவெம்பாவை போன்ற தெய்வீகப் பாடல்களைச் சொல்லி, பகவானை பக்தி – சிரத்தையுடன் பூஜித்து வருகிறோம். அனைத்து பாவங்களையும் போக்கி, இக – பர சுகங்களை அளிக்கவல்லது இது!

இப்புனித – புண்ணிய, தெய்வீக மார்கழி மாதத்தில், கிரக நிலைகள் நமக்கு எத்தகைய பலன்களை அளிக்கவுள்ளன என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன், இம்மாதத்தின் மிக முக்கிய புண்ணிய தினங்களைத் தெரிந்து கொள்வோமா…?

மார்கழி மாதத்தின் விசேஷ புண்ணிய தினங்கள்!

மார்கழி 1 (17-12-2023) : தனுர் மாத பூஜை ஆரம்பம்.

அதிகாலையிலேயே நீராடி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளையும், ரங்கமன்னாரையும் திருப்பாவை பாசுரங்களைச் சொல்லி, வணங்கி வந்தால், குடும்பத்தில் சுபீட்சம் பெருகும். அதேபோன்று, தினமும் “திருவெம்பாவை” பாடல்களையும் அதிகாலையில் சொல்லி பார்வதி – பரமேஸ்வரரை வணங்கி, மாணிக்கவாசகர் உள்ளிட்ட அனைத்து நாயன்மார்களையும் மானசிகமாக (மனதால்) பூஜித்து வந்தால், அளவற்ற நன்மைகள் கிட்டும்.

மார்கழி 4 (20-12-2023): வக்கிரகதியில் இருந்துவரும் சனி பகவான், மகர ராசியை விட்டு, தனது மற்றொரு ஆட்சிவீடான கும்ப ராசியில் பிரவேசிக்கும் விசேஷ தினம். திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, நவக்கிரக சந்நதிகள் தரிசனம் மற்றும் நெய், எள் எண்ணெய் தீபம் ஏற்றுதல், கிரக தோஷங்களைப் போக்கும். சூரியனார்க் கோயில் தரிசனமும் தோஷங்களைப் போக்கும். மேஷம், கன்னி, தனுசு ஆகிய ராசியினர்களைத் தவிர மற்ற ராசியினர் பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

மார்கழி 7 (23-12-2023): வைகுண்ட ஏகாதசி. முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பதால், “முக்கோடி ஏகாதசி” என தெய்வீகப் புகழ்வாய்ந்த புண்ணிய தினம். இன்று உபவாசம் இருந்து பகவானைப் பூஜித்தால், நல் வாழ்வு கிட்டும். அனைத்து வைணவத் தலங்களிலும் விசேஷ தரிசனம்.

மார்கழி 10 (26-12-2023) : தத்தாத்ரேய ஜெயந்தி. மும்மூர்த்திகளும் ஒன்றாய் இணைந்து, அத்திரி மகரிஷியின் தர்ம பத்தினியான அனுசூயை தேவிக்கு, தத்தாத்ரேயராக தரிசனம் அளித்த மகத்தான புனித தினம். மேலும், திரிபுர பைரவி ஜெயந்தி. திருமாலின் அவதாரங்களில் பத்தாவது அவதாரமாகிய கல்கி அவதாரத்திற்கு ஈடான, மகத்தான சக்தி வாய்ந்ததாகவும், ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் உண்டாகும் தோஷங்களைப் போக்க வல்லதான சக்தி மிகுந்த அவதாரமாகவும் போற்றிப் புகழப்படுவது.

மார்கழி 11 (27-12-2023) : ஆருத்ரா தரிசனம். சிதம்பரம் நடராஜ பெருமான் திவ்ய தரிசனம் விசேஷம். பாவங்கள் விலகும். மனம் தெளிவு பெறும்.

மார்கழி 12 (28-12-2023): பரசு ராமர் ஜெயந்தி. மகரிஷி ஜமதக்னிக்கும், அவர்தம் தர்ம பத்தினி ரேணுகா தேவிக்கும் புத்திரராக பரசு ராமர் அவதரித்த புண்ணிய தினம். கர்ணனுக்குப் போர் வித்தைகளைக் கற்றுத் தந்தவர். கேரள மாநிலம் இவரால் சிருஷ்டிக்கப்பட்டதே!

மார்கழி 19 (04-01-2024): சங்கராஷ்டமி. இவ்விரதத்தைக் கடைப் பிடித்தோமையானால், தொய்வுற்றிருந்த சொந்தத் தொழில் அபிவிருத்தியடையும், தொழில் முன்னேற்றத் திற்காக தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும்.

மார்கழி 23 (08-1-2024): காஞ்சி ஸ்ரீமகா பெரியவா ஆராதனை தினம். கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என பூஜிக்கப்படும் காஞ்சி காமகோடி பீடம் மகா பெரியவாளின் ஆராதனை தினம். அன்றைய தினம் காஞ்சி சென்று, அம்மகா புருஷரின் பிருந்தாவனத்தை தரிசிப்பது நல்வாழ்வினைப் பெற்றுத் தரும். பாவங்களைப் போக்கும்.

மார்கழி 25 (10-01-2024): செல்வத்திற்கு அதிபதியானவளும், திருமாலின் திருமார்பை அலங்கரிப்பவளும், மகாலட்சுமியின் அம்சங்களை ஒருங்கே பெற்ற கமலா ஜெயந்தி. தசாவதாரத்தில், பரசு ராமருக்கு இணையான அனைத்து சக்திகளைப் பெற்றவரும், ஜென்ம ஜாதகத்தில் சுக்கிர பகவானின் தோஷங்களை அடியோடு போக்குபவளுமாகிய கமலா அவதார தினம்.

மார்கழி 26 (11-01-2024) : அனுமன் ஜெயந்தி.

ராம பக்தரான ஆஞ்சநேயர் அவதரித்த புண்ணிய தினம். ஸ்ரீமத் சுந்தர காண்டம் படிப்பது, கேட்பது, நினைப்பதாலேயே நம் துன்பங்கள் அனைத்தையும் போக்கும். வடமாலை சாற்றி, வெல்ல பானகம் நைவேத்தியம் செய்வது மகத்தான பலனைத் தரும்.

மார்கழி 29 (14-01-2024) : போகிப் பண்டிகை. தேவர்களின் தலைவரான இந்திரனைக் குறித்து கொண்டாடப்படும் பண்டிகையாகும். ஒவ்ெவாரு பண்டிகைக்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பும், சக்தியும் உண்டு. அதே போல், இப்பண்டிகைக்கும் பழையனவற்றைக் கழிதலும், புதியனவற்றைப் புகுத்துதலும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. கடைப் பிடிப்போர்க்குத் துன்பங்கள் விலகும். நன்மைகள் பெருகும்.

இனி, இந்த மார்கழி மாதத்தில் கிரகங்கள் அளிக்கவிருக்கும் நன்மைகளையும், பிரச்னைகளையும் ஜோதிடக் கணிப்பின் விதிகளின்படி, மிக மிகத் துல்லியமாகக் கணித்துப் பார்ப்போம்.

The post மகிழ்ச்சியைத் தருமா மார்கழி மாதம்? appeared first on Dinakaran.

Tags : Bhagwat Kaingarya ,Sagara Chakraborty ,AMrajagopalan Margazhi ,Lord ,Saturn ,Margazhi… ,Margazhi ,
× RELATED தை பிறந்தால் வழி பிறக்கும்! கன்னியர் கழுத்தில் தாலி ஏறும்!!