×

குருவருள் பெற்றுத்தரும் நாமம்

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

நவ வித்ரும பிம்ப ஸ்ரீந்யக்காரி ரதநச்சதா நாம் இதற்கு முன்பு பார்த்த மூன்று நாமங்களையும் இப்போது மீண்டும் ஒருமுறை நினைவு கூறுவோம். ஏனெனில், இப்போது பார்க்கப் போகும் நாமத்திற்கும் மற்ற மூன்று நாமங்களுக்கும் தொடர்பு உண்டு. முதலில் கதம்ப மஞ்சரீ க்லுப்த கர்ணபூர மனோஹரா என்கிற நாமம் கேட்டல் அதாவது ஸ்ரவணத்தை குறிக்கின்றது. குருவினுடைய வார்த்தையை அப்படியே கேட்பது. அதாவது listening என்று பார்த்தோம்.

அடுத்ததாக தாடங்க யுகலீபூத தபனோடுப மண்டலா என்கிற நாமம் `மனனம்’ என்கிற உயர்ந்த விஷயத்தை உணர்த்துகின்றது என்று பார்த்தோம். குரு எதைச் சொன்னாரோ.. அது அப்படியே அதன் உண்மையான பொருளானது நமது அனுபூதியாக விரிகின்றது. நமது அனுபவ மண்டலத்திற்குள் வருகின்றது. சீடன் அந்த உபதேசத்தை சொற்களாக அல்லாது பிரபஞ்சமாக, விராட் சொரூப தரிசனமாகவே பார்க்கின்றான் என்று பார்த்தோம்.

அப்படி குரு சொல்கிறபோது, தொடர்ந்து ஆரம்பத்தில் மனம் தொடக்கத்தில் இது என்ன… இது சரியா, இது உண்மையா, நமக்கு சுத்தமாக புரியவில்லையே… நாம் நன்கு ஆராய்ச்சி செய்து அதை உணர்ந்த பிறகு ஏற்றுக் கொள்ளலாமா என்று ஓராயிரம் கேள்விகளோடு அலைந்து கடைசியில் ஓய்ந்த பிறகு, ஒரு கட்டத்தில் மனம் குறிக்கிடாமல் இருக்கும்போது சட்டென்று குருவின் வார்த்தை உள்ளே செல்கின்றது. அப்போது அது வார்த்தையாக இல்லாமல், அனுபூதியாக விரியும் நிலையை அடைகின்றது. அதாவது, இப்படி உண்மையான அக தரிசனம் பெறுவதையே மனனம் என்று பார்த்தோம்.

மூன்றாவதாக, பத்ம ராக சிலாதர்ச பரிபாவி கபோலபூஹ்… என்று பார்த்தோம். ஒரு ஆன்மிக சாதகன் அக தரிசனம் பெற்றதோடு மட்டுமல்லாமல் தன்னைத்தானே தரிசிக்கும் நிலையை, அதாவது, உண்மையான நான் என்பதை பார்க்கின்றான். இப்போது இருக்கும் நான் எனும் அகங்காரத்தோடு கூடிய மனம் மறைந்து அதைத் தாண்டிய உண்மையான நான் எனும் சொரூபமேதான் எனப் பார்க்கின்றான் என்று பார்த்தோம். இதைத்தான் நிதித்யாசனம் என்கிறார்கள் என்றும் பார்த்தோம்.

சென்ற நாமத்தில் அதாவது, பத்மராக சிலாதர்ச பரிபாவி கபோலபூஹ்… என்கிற நாமம் அம்பிகையின் கன்னத்தை கண்ணாடியாக வர்ணிப்பதை பார்த்தோம். இப்போது நவ வித்ரும பிம்ப ஸ்ரீந்யக்காரி ரதநச்சதா… என்கிற இந்த நாமம், அம்பிகையினுடைய உதடுகளை உவமையாக விவரிக்கின்றது. இந்த உதடுகளைச் சொல்லும்போது வசின்யாதி, வாக் தேவதைகள் இரண்டு உவமைகளைச் சொல்கிறார்கள். நவ வித்ரும பிம்ப… வித்ரும என்றால் பவழம். ரத்தினங்களில் சொல்லக் கூடிய பவழம். பிம்ப என்பது கோவைப் பழத்தைக் குறிக்கக் கூடியது. நவ வித்ரும பிம்ப ஸ்ரீ… பவழம் என்கிற ரத்தினமானது இயற்கையிலேயே சிவந்த வர்ணமுடையது.

அதற்கு அடுத்து கோவைப் பழமானது இயற்கையிலேயே சிவந்த வர்ணமுடையது. இந்த இரண்டுமே சிவந்த வர்ணமுடையதுதான். ஆனால், அது வெறும் பவழம், கோவைப்பவழம் என்றெல்லாம் சொல்லவில்லை. இந்த வார்த்தைகளுக்கு முன்னால் நவ என்கிற வார்த்தையைச் சேர்க்கிறார்கள். நவ என்றால் புதியது, புதுமையானது (ever fresh) என்று பொருள். இந்தப் பவழமும் கோவைப் பழமும்… வெறும் பவழமோ அல்லது கோவைப் பழமோ கிடையாது. புதிய பவழம். புதிய கோவைப்பழம். கோவைப் பழம் சிவந்த வண்ண முடையதுதான்.

ஆனால், இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டால் அதனுடைய தன்மை போய்விடும். ஆனால், பவழம் கூட சிவந்த வண்ணமுடையதுதான். அதுவே கொஞ்ச வருடங்கள் போனால், அதனுடைய நிறம் மங்கத் தொடங்கி விடும். திரும்பவும் அதை மெருகூட்ட வேண்டும். (polish செய்ய வேண்டும்). ஆனால், இவை இரண்டும் புதிய பவழம், புதிய கோவைப் பழமுமாக எப்போதும் புதுமையாகவே இருந்தது என்றால் எப்படி சிவப்பாக, செம்மையாக இருக்குமோ அதைவிட அம்பாளின் உதடானது சிவப்பு மிக்கதாக இருக்கின்றது.

அதனால்தான் இப்பேற்பட்ட சிவந்த நிறமா என்று பவழமும் கோவைப் பழமுமே அம்பிகையின் உதட்டை பார்த்து வெட்கப்படுகின்றதாம். அப்படியெனில், இங்கு அம்பிகையின் உதட்டுச் சிவப்பானது எப்பேற்பட்டது என்பதை நாம் பார்க்க வேண்டும். இப்போது இங்கு அம்பிகையின் உதட்டுச் சிவப்பை நமக்குக் காட்டி அதாவது known என்பதைக் காட்டி un known எது என்பதையும் இப்போது காட்டப் போகிறார்கள். அந்த unknown என்பது நம் புலன்களால், மனதால், பிடிக்க இயலாத வஸ்து. ஆனால், அதுவே நம் சொரூபமும்கூட என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஏனெனில், மீண்டும் மீண்டும் லலிதா சஹஸ்ரநாமம் அந்த சத்திய வஸ்துவை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கின்றது. அது எப்படி என்று சொல்ல முடியாமல் தவித்துப்போய் உவமைகளாகவும் உருவகங்களாகவும் சொல்லி சொல்லிச் செல்கின்றது. நம் மனமானது உடனே அது நமக்கு எதற்கு என்று எதிர்க்கும் அல்லது வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று பின்வாங்கும். அதனாலேயே இந்த மனம் என்கிற விஷ சுழற்சியில் மாட்டிக் கொள்ளாமல் அம்பிகையே தன் சொரூபத்தை வாக் தேவதைகள் வழியாக கூறிச் செல்கிறாள் என்று உறுதி கூறுகின்றது.

இந்த மனதை கொஞ்சம் ஓரம் கட்டி வைத்துவிட்டு லலிதை என்ன சொல்கிறாள், எதையோ மீண்டும் மீண்டும் சத்தியம்… சத்தியம்… என்று நாமம் வழியாக காட்டுகின்றாளே என்று வெறுமே நாமத்தை இறக்கிக் கொள்ளச் சொல்கின்றது. அப்படி செய்யும்போது, அந்த நாமமே மனதை ஊடுருவி அதைத் தாண்டிச் செல்ல தோணியாக மாறி நம்மை மனதிற்கு அப்பாலும் கொண்டு சேர்க்கிறது. அம்பிகையின் அதாவது நம் நிஜ சொரூபத்தை தரிசிக்க வைக்கின்றது. அதை நாம் ஒரு கணம் தரிசித்துவிட்டால் போதும். பின்பு நீங்கள் விடமாட்டீர்கள். அப்போது அங்கு மட்டுமல்லாமல் நீங்கள் வாழும் இந்த உலகமும் தெளிவாகும் என்றும் கூறுகின்றது.

ஏன் இவ்வளவு விளக்கமெனில் இதை நாம் மீண்டும் மீண்டும் மனதில் கொண்டால் நாமத்தை பொருளோடு பார்க்கும்போது இன்னும் தெளிவாகலாம். இந்த நாமத்தில் அம்பிகையின் உதட்டுச் சிவப்பை பார்த்து, இந்தச் சிவப்பெல்லாம் ஒன்றுமேயில்லை, இந்தச் சிவப்பெல்லாம் ஒரு விஷயமே கிடையாது என்று பவழமும், கோவைப்பழமும் வெட்கப்படுகின்றன என்று பார்த்தோம். அதுமட்டுமல்லாது அம்பிகைக்கு அந்த சிவந்த வண்ணமே பரம மங்களமாக உள்ளது.

அதனாலேயே, நவ வித்ரும பிம்ப ந்யக்காரி ரதநச்சதா… என்று மட்டும் போடாமல்… நவ வித்ரும பிம்பஸ்ரீ ந்யக்காரி ரதநச்சதா… என்று வருகின்றது. இந்த `ஸ்ரீ’ என்கிற எழுத்தானது மங்களத்தையும், பரம ஐஸ்வர்யத்தையும் குறிக்கக் கூடியது. இன்னொன்று `ஸ்ரீ’ என்றாலே அம்பாள்தான். அதாவது, அம்பாளை  வித்யா என்றுதானே சொல்கிறோம்.

இந்த சிவந்த வண்ணமான இந்த உதடே பரம மங்களத்தையும், ஐஸ்வர்யத்தையும் குறிக்கக் கூடியது என்று அர்த்தம். சரி, மேலே சொன்ன அனைத்து விளக்கங்களும் இந்த நாமாவினுடைய ஸ்தூலமான அர்த்தம். அதாவது, பொதுவாக சொல்லக் கூடிய அர்த்தமாகும். இங்கு சூட்சுமமான அர்த்தம் எதுவென்று பார்க்கலாமா! அதாவது, சிதானந்தர் எனும் மகான் சொன்ன விளக்கத்தை பார்க்கலாம். சிவந்த நிறத்தை சிதானந்தர் சமாதி என்று சொல்கிறார். இப்போது இதற்கு முன்னர் நாம் பார்த்த மூன்று நாமங்கள் ஸ்ரவணம், மனனம், நிதித்யாசனம் என்றெல்லாம் வந்து இறுதியாக சமாதி என்று சொரூபத்தில் நிலை பெற்றலை குறிக்கின்றது.

இந்த சமாதியை குறிக்கக் கூடியது சிவந்த வண்ணம். இந்த சிவந்த வண்ணத்தை குறிக்கக்கூடியது அம்பிகையினுடைய அதரம் என்கிற உதடுகள். இந்த அம்பிகையினுடைய உதடுகளை குறிக்கக்கூடியது இந்த நாமம். இப்போது இதற்கு முன்னால் ஒவ்வொரு நாமமாக வரும்போது கர்ணபூர மனோஹரா என்பது ஸ்ரவணத்தையும், தாடங்க யுகலீபூத என்பது மனனத்தையும், பத்மராக சிலாதர்ச என்கிற நிதித்யாசனத்தை முடித்த பிறகு நவ வித்ரும பிம்ப ஸ்ரீ ந்யக்காரி ரதநச்சதா… என்கிற சமாதி அவஸ்தையை அவன் அனுபவிக்கின்றான்.

ஆத்ம சாதகன் அனுபவிக்கக் கூடிய சமாதி நிலை… அந்த சமாதி நிலையை நமக்கு காண்பித்து கொடுக்கக் கூடியது அம்பாளுடைய உதடு. ஏனென்றால், இந்த உதட்டிலிருந்துதான்… மீண்டும் சொல்கிறேன் இந்த சமாதி அவஸ்தையை காண்பித்து கொடுக்கக் கூடிய உதட்டிலிருந்துதான் பரம உபதேசம் நமக்கு பிறக்கின்றது. இந்த உதட்டிலிருந்து பிறக்கக் கூடிய உபதேசத்தைத்தான் நாம் ஸ்ரவணம் பண்ணனும். மனனம் பண்ணனும். நிதித்யாசனம் பண்ணனும். அந்த நிதித்யாசனம் மூலமாக நாம் அடையப்போகும் அந்த சமாதி நிலையை காட்டுவதும் அந்த உதடுதான்.

குருவினுடைய சொல் எனும் உபதேசம் உற்பத்தியாகிற இடம் உதடு. இந்த உதட்டிலிருந்து வரும் வாக்கானது பராவாக்கு ஆகும். வாக்கினுடைய மூன்று நிலைகளான பச்யந்தி, மத்யமா, வைகரீ என்பதையெல்லாம் தொடாமல் அதற்கும் மேலாக உள்ள பராவாக்கிலிருந்து (பரா சக்தி என்று நாம் சொல்கிறோம் அல்லவா. அந்த சக்தியின் ஆதார பீடம். அங்கிருந்து வருவது) வருகின்றது. பராவாக்கிலிருந்து வரும் உபதேசத்தைத்தான் அந்த உதடுகள் கொடுக்கின்றது. அந்த உபதேசத்தின் பலனைக் காட்டித் தருவதும் அந்த உதடுகள்தான்.

இப்போது உபதேசமும் அவளே. அந்த உபதேசம் காட்டும் பாதையும் அவளே. அடைய வேண்டிய வஸ்துவும் அவளே. அடைய வேண்டிய லட்சியமும் அவளே. சத்திய வஸ்துவும் அவளே. எனவே, when the path is not different from destination… என்று எடுத்துக் கொண்டால், TRUTH IS THE PATHLESS LAND. SO, There is no need to step on. Step என்று சொல்வதற்கு அங்கு இடமே கிடையாது.

அப்பொழுது குருவினுடைய வாக்கியமே அங்கு step. அவ்வளவுதான். அதனால், நாம எந்த stepமும் எடுத்து வைக்க வேண்டிய அவசியமில்லை. குருவினுடைய வாக்கியம்தான் இங்கு நமக்கு step… அதனால்தான் குருவினுடைய பாதுகையை நாம் பூஜை பண்றோம்… ஏனெனில், நாம் step எடுத்து வைக்க வேண்டியதில்லை. Already Guru given a step. அவருடைய பாதுகையும்… வாக்கியம்தான் நமக்கு step. அவ்வளவுதான். இதில், நமக்கு becoming-க்கோ அல்லது ஆகவேண்டியதோ, அடைய வேண்டியதோ to attain anything என்பதோ கிடையாது. அதனால்தான் குருவினுடைய திருவடிகளை பூஜை செய்கின்றோம். குருவினுடைய திருவடியை பிடித்துக் கொண்டால் போதும்.

அதுவே, வெளியே பார்க்கும் குருவினுடைய திருவடியிலிருந்து உள்ளே ஒரு திருவடிக்கு அதுவே நகர்த்தும். அதுவும் அம்பிகையின் பெருங்கருணையால் நடக்கும். நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை. பொதுவாக, சைவமோ வைஷ்ணவமோ சாக்தமோ… துவைதமோ, விசிஷ்டாத்வைதமோ, அத்வைதமோ போன்ற தத்துவங்களில் பேதம் இருக்கிறதே தவிர, எதிலுமே குரு, குருவினுடைய பாதத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

நீங்கள் ஒரு அடிகூட எடுத்து வைக்க அவசியமே இல்லை. குருவினுடைய திருவடியே போதும். நீ எங்கேயும் உன் மனதையோ எண்ணத்தையோ அகங்காரத்தையோ உபயோகப்படுத்தி நகராதே. எப்படி அப்படி நகராமல் இருப்பது என்பதையும் அந்த குருவே சொல்லிக் கொடுப்பார். சொல்லிக் கொடுங்கள் என்று தனிமையில் அமர்ந்து உள்ளுக்குள் கேளுங்கள் என்பதே இந்த நாமங்களின் மையம். நாம் கேட்டால் யார் வந்து பதில் கொடுப்பார்கள் என்றெல்லாம் எண்ணாமல், வெறுமே கேளுங்கள்.

மீதியை அது பார்த்துக் கொள்ளும். அந்த குரு சொரூபமே இங்கு லலிதாம்பிகையாக இருக்கின்றாள். அதுவே அனைத்தையும் கொடுக்கும். மீண்டும் மீண்டும் கேளுங்கள். அவ்வளவுதான் சொல்ல முடியும். இந்த நாமத்திற்கான கோயிலாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலைத் தவிர வேறென்ன சொல்ல முடியும். ஆதிசங்கரர் தொடங்கி எத்தனை ஞானிகள் அவளின் பாதம் படர்ந்து சொரூபத்தை உணர்ந்திருக்கிறார்கள். எனவே, இந்த நாமத்தைச் சொல்லும்போது காஞ்சி காமாட்சியையும் சேர்த்து தியானித்தபடி சொல்லுங்கள்.

(சக்தி சுழலும்)

The post குருவருள் பெற்றுத்தரும் நாமம் appeared first on Dinakaran.

Tags : Adi Shakti ,Lalita Sahasranamas ,Ramya Vasudevan ,Krishna Nava Vidruma ,Bimba Sreenyakari… ,
× RELATED அருள்மழை பொழியும் அகிலாண்டேஸ்வரி