திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் பிரசித்தி பெற்ற 5ம் படை வீடாக திகழ்கிறது. இக்கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்கும் பணி கடந்த 2009ம் ஆண்டு இந்து அறநிலைய துறை அனுமதியுடன் துவங்கப்பட்டது. 2011ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்ததால் கிடப்பில் போடப்பட்டது.
பின்னர் இந்த பணி தொடங்கி ஜரூராக நடந்தது. தற்போது இந்த பணிகள் நிறைவடைந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதையடுத்து கோபுர நுழைவாயிலில் வாசற்கால் தூண்கள் அமைக்கும் பணி மற்றும் ராஜகோபுரத்தையும், மாடவீதியையும் இணைக்கும் வகையில் ரூ.92 லட்சம் செலவில் 56 படிகள் அமைக்கும் பணியை கடந்தாண்டு மார்ச் மாதம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் குமரகுருபன் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
முருகன் கோயிலின் 9 நிலை ராஜகோபுரத்தின் இருபுறமும் 30 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கருங்கற்கலால் ஆன 2 வாசற்கால் தூண்கள் மலை கோயிலுக்கு நன்கொடை மூலம் கொண்டு வரப்பட்டது. இந்த வாசற்கால் தூண்களில் சிற்ப வேலைபாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று ராஜகோபுரத்தின் வாசற்கால் தூண்கள் அமைப்பதற்கான பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து ராட்சத கிரேன்கள் மூலம் கருங்கற்களால் ஆன வாசக்கால் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சு.தரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷா ரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் முருகன் கோயிலின் உபகோவிலான சப்த கன்னிகள் ஆலயத்தில் புனரமைப்பு பணிகளுக்கு பூஜை நடைபெற்றது.
The post திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுர வாசற்கால் தூண்கள் அமைக்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.