×

முகப்பரு தற்காத்துக் கொள்ளும் வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

பளிச்சென இருக்கும் முகத்தில் திடீரென தோன்றும் பருக்கள் முக அழகையே கெடுக்கும். அதை எப்படி சரிசெய்வது என்று யோசிப்பதைவிட பரு வருவதற்கு முன்பே தவிர்த்துக் கொள்வது நல்லதல்லவா. அதற்கான வழிகளைப் பார்க்கலாம்.

*பரு வந்தால் அதைத் தொட்டுக்கொண்டே இருப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில், பருவை தொடும்போது அந்த பாக்டீரியா மேலும் பரவும். பருக்களை அழுத்தும்போது அந்த இடத்தில் வடு, தழும்பு உருவாகவும் வாய்ப்புள்ளது என்பதால் அதைச் செய்யவே கூடாது.

*வெளியில் சென்று வந்தவுடன் கண்டிப்பாக முகம் கழுவ வேண்டும். வீட்டிலேயே இருந்தாலும் குறைந்தபட்சம் ஒரு நாளில் மூன்று முறை முகம் கழுவுவது நலம். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகளும் எண்ணெய்ப்பசையும் நீங்கி முகம் சுத்தமாகவும், பொலிவாகவும் இருக்கும்.

*ஒருநாளைக்கு 2 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும். தேவையான அளவு தண்ணீர் அருந்தும்போது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி, உடல் ஆரோக்கியத்துடன்
இருக்கும்.

*பரு பிரச்னை உள்ளவர்கள் முடிந்தவரை அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிளஷ், ஃபவுண்டேஷன் போன்றவை சருமத் துளைகளை அடைத்துக்கொள்ளும் தன்மை வாய்ந்தவை என்பதால், இவற்றை தேவை முடிந்ததும் கழுவி விடவும்.

*தலைமுடியை கவனிக்க வேண்டும். தலை, முடியில் எண்ணெய் அதிகமாக இருந்தாலும் அது முகத்தையும் எண்ணெய்ப் பசை ஆக்கும். எனவே, தலையை அடிக்கடி
அலசவும்.

*நல்ல சத்தான உணவு உண்பது நல்லது. மாவுச்சத்து, இனிப்பு வகைகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், ஜங்க் புட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

*முகம் எண்ணெய்ப் பசை இல்லாமல் இருக்க வேண்டும். அதே நேரம், முகத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் இல்லை என்றால், சுரப்பிகள் எண்ணெய் மற்றும் சீபத்தை உற்பத்தி செய்து, பருக்களை உண்டாக்கும்.

*தலையணை, படுக்கை விரிப்பு, மெத்தையை அடிக்கடி சுத்தம் செய்யவும். துவைத்த, சுத்தமான டவலைப் பயன்படுத்தவும். இவையெல்லாம் பாக்டீரியா பரவுவதைத் தடுக்கும்.

*மன அழுத்தம் இருந்தாலும் முகத்தில் பருக்கள் தோன்றும். எனவே, முடிந்தவரை மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்ளவும்.

தொகுப்பு: தவநிதி

The post முகப்பரு தற்காத்துக் கொள்ளும் வழிகள்! appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dinakaran ,
× RELATED கோடைகால குழந்தைகள் பராமரிப்பு!