×

பாரா ஆசிய செஸ் விளையாட்டில் 7வது இடம் பெற்ற சென்னை பெண்!

நன்றி குங்குமம் தோழி

சாதாரணமாக இருக்கும் மக்கள் கூட தங்களோட இலக்கை சரியா நிர்ணயிப்பதில் ஏதேனும் ஒரு சிறு தவறோ அல்லது தேர்ந்தெடுத்த இலக்கை அடைய முனையும் போது ஏதேனும் ஒரு இடத்தில் சறுக்கலோ ஏற்பட்டிருக்கும். ஆனால் பிறந்து சில மாதங்களிலேயே அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு தன்னுடைய இலக்கு, கனவு என்ன என்பதனை தன் சிறு வயதிலே அறிந்து அதனை அடைய அதற்கான வழிகளை தேடி பயணித்து அதில் சில வெற்றிகளையும் கண்டுள்ளார் சென்னையை சேர்ந்த ஷரோன் ரேச்சல் அபி.

‘‘18 மாத குழந்தையாக இருந்த போதே அரிய வகை நோயான முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரின் உதவியோடு தான் நடமாடிக் கொண்டு இருக்கேன். முன்பு நான் படிச்ச பள்ளியில் லிப்ட் வசதி கிடையாது. படிகளில் தூக்கிக் கொண்டுதான் மிகவும் சிரமத்துடன்தான் என்னை வகுப்பறைக்கு கொண்டு செல்வாங்க. ரொம்ப சிரமமாகவும் அதே சமயம் எனக்கு ரொம்ப கஷ்டமாகவும் இருக்கும்.

அதன் பிறகு வேறு பள்ளியில் சேர்ந்தேன். இங்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். சின்ன வயதிலிருந்தே மற்ற குழந்தைகள் விளையாடுவதை பார்க்க ஆசையா இருக்கும். நம்மால் இப்படி விளையாட முடியாதா என சில நேரங்களில் தோன்றும். பொதுவாக கிடைக்காத, செய்ய முடியாத விஷயங்கள் மேல் தான் ஆர்வம் அதிகமாகும். அப்படிதான் எனக்கும் இருந்தது. சும்மா பள்ளிக்கூடம் பாடம் மட்டுமில்லாமல், வேறு திறன் இருக்க வேண்டும் என்றுதான் அம்மா எனக்கு செஸ் விளையாட சொல்லிக் கொடுத்தாங்க.

பள்ளிக்கு செல்லும் போது செஸ் ேபார்டினை உடன் எடுத்து செல்வேன். பள்ளியில் சும்மா இருக்கும் நேரத்தில் என் நண்பர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியரும் என்னுடன் செஸ் விளையாடுவார். இப்படி தான் எனக்கு சதுரங்க விளையாட்டு மேல் ஈடுபாடு வர ஆரம்பித்தது’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் தாய் எலிசபெத் அம்மென் அபி.

‘‘சரோனுடைய இந்த நிலையால் நாங்கள் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளானோம். குறிப்பா அவளுடைய சிகிச்சைக்காக எங்கு சென்றாலும், அவளை தூக்கிக் கொண்டு தான் செல்ல வேண்டும். வெளியூருக்கு செல்லும் போது ரொம்பவே சிரமமாக இருக்கும். அதுவே சரோனுக்கு மிகவும் வருத்தமளிக்கும். இது அரிய வகை நோய் என்பதால் இதற்கான மருந்து எதுவும் இல்லை என்றும் சரோனை குணப்படுத்துவது கடினம் என மருத்துவர்கள் சொல்லிட்டாங்க. அதனால் நாங்களும் சிகிச்சையினை நிறுத்திவிட்டோம். தினமும் பிசியோதெரபி மட்டும்தான் செய்கிறாள்’’ என்றார்.

‘‘எனக்கு கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு விளையாட்டின் மேல் எனக்கு இருந்த ஆர்வத்தை வைத்து ஏதேனும் சாதிக்கணும் என தோனுச்சு. வீட்டில் ெசான்ன போது, வீட்டில் இருந்தபடியே எனக்கு அதற்கான பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தாங்க. சுனிதா டீச்சர் கொரோனாவிற்கு முன்பு வரை பயிற்சி அளித்தார். அதன் பிறகு ஆன்லைனில் பயிற்சி தொடர்ந்தது. நானும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன்.

கடந்த அக்டோபர் மாதம் சீனாவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு சார்பாக விளையாட வாய்ப்பு கிடைச்சது. 2020 முதல் இது வரை 50க்கும் மேற்பட்ட மேட்ச்கள் விளையாடி மாநில அளவில் பல பரிசுகளை பெற்றிருக்கேன். 4வது முறையாக நடக்கும் இந்த பாரா ஆசிய விளையாட்டில் 42 நாடுகளில் இருந்து பல்வேறு விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அதில் 309 பேர் இந்தியா சார்பில் கலந்து கொண்டாங்க. அதில் நானும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இதில் நான் வெற்றி பெறவில்லை என்றாலும், ஏழாவது இடம் பெற்று எனக்கான முத்திரையை பதித்திருக்கேன். இது துவக்கம் தான்’’ என்றவர் ஆசிய விளையாட்டில் பங்குபெற்ற அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

‘‘முதல் முறை முயற்சி செய்யும் போதே எனக்கு இந்த போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. என்னுடன் விளையாடுபவர்கள் அனைவரும் கொஞ்சம் பெரியவங்க தான். நான்தான் வயதில் மற்றும் அனுபவத்தில் சிறியவள். அவர்களுடன் விளையாடும் போது என்னால் விளையாட்டு குறித்து பல விஷயங்கள் கற்றுக் கொள்ள முடிந்தது. எந்த இடத்தில் எப்படி காய்களை நகர்த்த வேண்டும் என்ற நுணுக்கங்களை இந்த விளையாட்டு மூலம் கற்றுக் கொண்டேன்.

அது நான் அடுத்தடுத்து விளையாடும் போட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த விளையாட்டில் திறம்பட செய்து, எதிர்காலத்தில் ஒரு செஸ் கோச்சராக வரவேண்டும். செஸ் பயிற்சி மையம் அமைத்து பலருக்கு பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்று கூறும் ஷரோன் ‘யங் அச்சீவர்’ என்ற விருதினை ெபற்றுள்ளார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post பாரா ஆசிய செஸ் விளையாட்டில் 7வது இடம் பெற்ற சென்னை பெண்! appeared first on Dinakaran.

Tags : Para ,
× RELATED தேசிய பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டி வீரர், வீராங்கனைகள் 3 பேர் சாதனை