×

ஒடிசாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை மீட்பு: பல்ப்பின் சூட்டை பயன்படுத்தி 5 மணி நேரத்தில் மீட்ட வீரர்களுக்கு பாராட்டு!!

புபனேஸ்வர்: ஒடிசாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய பச்சிளம் குழந்தையை மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். பல்ப்பின் சூட்டை பயன்படுத்தி குழந்தையை உயிருடன் மீட்ட வீரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. ஒடிசாவில் சாம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு அருகே திறந்து கிடந்த ஆழ்துளை கிணறில் இருந்து குழந்தை அழுகை சத்தம் கேட்பதாக போலீசாருக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு வந்து ஆய்வு செய்தபோது 20அடி ஆழ இரும்பு கிணற்றில் பெண் குழந்தை ஒன்று சிக்கி இருந்தது தெரியவந்துள்ளது. உடனே அங்கு மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன.

குழந்தை விழுந்த குழியில் ஏற்கனவே வீசப்பட்டிருந்த பிளாஸ்டி பாட்டில் சிக்கி இருந்தது. அதன் மேல் குழந்தை விழுந்ததால் ஆழத்தில் இருந்த கண்ணாடி துகள்கள் மீது விழுந்து காயமடைவதில் இருந்து குழந்தை தப்பியுள்ளது. இரவில் மீட்பு பணிகள் தொடர்ந்த நிலையில் அங்கு 12 டிகிரி செல்சியஸ் வரை குளிர் நிலவி உள்ளது. சிறிது நேரத்தில் குழந்தை அழுகை சத்தம் நின்றதால் மீட்பு படையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் மருத்துவர்களின் அறிவுரைப்படி 100வாட் பல்ப் ஒன்றை அந்த குழி வழியாக உள்ளே அனுப்பியுள்ளனர். அந்த பல்பில் இருந்த சூட்டினால் ஏற்பட்ட கதகதப்பில் குழந்தை மீண்டும் அழத் தொடங்கியுள்ளது. இதனால் உத்வேகமடைந்த வீரர்கள் 5 மணிநேரத்தில் குழந்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். அவர்களுக்கு அந்த மாநில முதலமைச்சர் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

The post ஒடிசாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை மீட்பு: பல்ப்பின் சூட்டை பயன்படுத்தி 5 மணி நேரத்தில் மீட்ட வீரர்களுக்கு பாராட்டு!! appeared first on Dinakaran.

Tags : Odisha ,Bhubaneswar ,Adaldula ,
× RELATED ஒடிசா மாநிலம் பாலசோரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம்