×

ஆன்மீகம் பிட்ஸ்: அப்பர் வெங்கடேசப் பெருமாள்

அப்பர் வெங்கடேசப் பெருமாள்

காஞ்சிபுரத்திலிருந்து செங்கால்பட்டு செல்லும் வழியில் பாலாற்றைக் கடந்த பின் வரும் ‘திருமுக்கூடல்’ என்ற தலத்தில், பெருமாள், விஷ்ணு, சிவன், பிரம்மா என்ற மும்மூர்த்திகளின் ஸ்வரூபனாக காட்சியளிப்பதை. காணலாம். தேவாரம் பாடிய ‘அப்பர்’ இப்பெருமாளைப் புகழ்ந்து பாடியதால் இவருக்கு ‘அப்பர் வெங்கடேசப் பெருமாள்’ என்ற பெயர்.

திருஷ்டிப் பொட்டு உள்ள பெருமாள்

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடுக்கு அருகிலுள்ள ‘திருவிடந்தை என்னும் தலத்தில், (திருவாகிய இலக்குமியை எந்தையாகிய பெருமாள் கொண்டு இருப்பதால் ‘திருவிடந்தை’ என்ற பெயர்) உள்ள உற்சவர் பெருமாளின் திருமுகத்தில் இயற்கையாகவே ‘திருஷ்டி பொட்டு’ உள்ளது. இக்கோயிலில் தந்தத்திலான பல்லக்கு இருக்கிறது. வரலாற்று தொன்மை கருதி அதை இப்போது உபயோகிப்பது இல்லை. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இதன் மூலவரின் பெயர் ‘ஆதிவராகர்’.

நாகம் குடைபிடிக்கும் முருகன்

காஞ்சிபுரம் குமரன் கோட்ட முருகனுக்கு 5 தலை நாகம் குடை பிடிக்கிறது. வள்ளி தெய்வானைக்கு 3 தலை நாகம் குடை பிடிக்கிறது. இது அபூர்வ தரிசனம்.

அலங்காரச் சிறப்பு

அலங்காரச் சிறப்புடையவர் முருகப் பெருமான். சுவாமிமலை திருக்கோயில் மூலவருக்கு விபூதி அபிஷேகம் செய்யும்போது அருள்படுத்த ஞானியாகக் காட்சித் தருவார். சந்தன அபிஷேகத்தில் பாலசுப்பிரமணியராகக் கம்பீரமாகக் காட்சித் தருவார். கருவறையை உற்றுப் பார்த்தால் சுவாமிநாதர் நிற்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் நிற்கும் பெருமான் பாணலிங்கமாகக் காட்சித் தருவார்.

வேலுக்கு அபிஷேகம்

அறுபடை வீடுகளிலேயே வேலுக்கு அபிஷேகம் நடக்கும் திருத்தலம் திருத்தணி சுப்பிரணிய சுவாமி கோயிலில் மட்டும்தான். குடவரைக் கோயிலாதலால் மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. வேலுக்கே அபிஷேகம் செய்வர்.

வெள்ளை மயில்

மயில்களை அதற்குரிய இயல்பான நிறத்தில் தான் பார்ப்போம். ஆனால் திருப்பரங்குன்றத்தில் வெள்ளை மயில்களைக் காணலாம். சுப்பிரமணியரின் தரிசனத்திற்காக தேவர்களும், மகரிஷிகளும் வெள்ளைமயில் வடிவில் வருவதாக ஐதீகம்.

நந்திக்குத் தனிக்கோயில்!

திருச்சி தெப்பக்குளம் அருகில், நந்திக்குத் தனிக் கோயிலும் அதற்குப் பூஜையும் நடக்கிறது. வேறு எங்கும் நந்திக்கு என்று தனிக்கோயில் இருப்பதாகத் தெரியவில்லை.

விஸ்வரூப முருகன்!

குண்டுக் கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் முருகப் பெருமான் 11 தலை 22 கைகளுடன் விஸ்வரூபம் எடுத்த நிலையில் காட்சி தருகிறார். அதேபோல் இக்கோயிலில் 18 திருக்கரங்களுடன் கூடிய 7 அடி உயர துர்க்கையும் உள்ளார்.

மிளகாய் அம்மன்!

ஆனைமலை ஊரிலுள்ள ஆலயத்தில் 30 அடி நீளத்தில் சயனித்த கோலத்தில் அருள் புரிகிறாள் அருள்மிகு மாசாணி அம்மன். இழந்த பொருளைத் திரும்பப் பெறும் பொருட்டு மிளகாயை அரைத்துத் தடவி இங்கு அம்பாளை வழிபடுகின்றனர்.

தேவதீர்த்தம்!

திருச்செங்கோடு மலையில் எழுந்தருளியிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் திருமேனி நவபாஷாணத்தால் வடிவமைக்கப்பட்டது. இங்கு இறைவனின் திருவடியின் கீழ் வற்றாத ஒரு சுனை இருக்கிறது. இதனை தேவதீர்த்தம் என்று தீர்த்தப் பிரசாதமாக பக்தர்களுக்குக் கொடுக்கின்றனர்.

தட்சணாமூர்த்திக்கு ருத்ராபிஷேகம்!

திருப்பரங்குன்றம் கோயிலில் தட்சணாமூர்த்தி இடது கையை தன் காலுக்குக் கீழே உள்ள நாகத்தின் தலைமீது வைத்துள்ளது. இவருக்கு ருத்ராபிஷேகம் செய்கின்றனர். இதனால் தோஷங்களும் நீண்டகால நோய்களும் விலகுகின்றன.

தொகுப்பு: பரிமளா

The post ஆன்மீகம் பிட்ஸ்: அப்பர் வெங்கடேசப் பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Upper Venkatesap Perumal ,Kanchipuram ,Chengalpattu ,Thirumukoodal ,Perumal ,Upper ,
× RELATED வரும் 11ம் தேதி முதல் கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை