×

தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரம் கடந்தும் நீடிக்கும் சிக்கல் முதல்வர்களை தேர்வு செய்ய முடியாமல் பா.ஜ திணறல்: சட்டீஸ்கரில் இன்று எம்எல்ஏக்கள் கூட்டம் n ம.பி முதல்வர் குறித்து நாளை ஆலோசனை ராஜஸ்தானில் நீடிக்கும் பெருங்குழப்பம்

புதுடெல்லி: சட்டீஸ்கர், ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரம் கடந்தும் புதிய முதல்வர்களை தேர்வு செய்ய முடியாமல் பா.ஜ திணறி வருகிறது. சட்டீஸ்கரில் இன்றும், மபியில் நாளையும் பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. ராஜஸ்தான் நிலவரம் பற்றி அறிவிக்கப்படவில்லை. ம.பி, சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் மாநிலங்களுக்கு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜ அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றார். ஆனால் பா.ஜ வெற்றி பெற்ற 3 மாநிலங்களில் முதல்வர் தேர்வு நடக்கவில்லை. பிரதமர் மோடி தலைமையில் பல மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. டிச.3ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகி ஒருவாரம் கடந்தும் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில் 3 மாநில முதல்வரை தேர்ந்தெடுக்கும் வகையில் மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , சரோஜ் பாண்டே மற்றும் வினோத் தாவ்டே ஆகியோர் ராஜஸ்தான் மாநில பார்வையாளர்களாகவும், அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், கே. லட்சுமணன் மற்றும் ஆஷா லக்ரா ஆகியோர் மத்தியபிரதேச மாநில பார்வையாளர்களாகவும், ஒன்றிய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, சர்பானந்த சோனோவால், பாஜ பொது செயலாளர் துஷ்வந்த் குமார் ஆகியோர் சட்டீஸ்கர் பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து புதிய முதல்வர்கள் தேர்வு குறித்து பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் சட்டீஸ்கர் பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, சர்பானந்த சோனோவால், பாஜ பொது செயலாளர் துஷ்வந்த் குமார் ஆகியோர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் 90 உறுப்பினர்கள் கொண்ட சட்டீஸ்கர் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட 54 புதிய பா.ஜ எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சியின் மாநில தலைவர் அருண் சாவோ அழைப்பு விடுத்துள்ளார். இன்று நடக்கும் கூட்டத்தில் பா.ஜ எம்எல்ஏக்களின் கருத்துக்களை கேட்டறிந்து முதல்வரை தேர்வு செய்ய பார்வையாளர்கள் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ம.பி முதல்வர் நாளை தேர்வு: 230 உறுப்பினர்கள் கொண்ட மத்தியபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ 163 இடங்களில் அபார வெற்றி பெற்றது. அங்கு முதல்வராக உள்ள சிவராஜ்சிங் சவுகானை மீண்டும் பதவியில் அமர்த்த பா.ஜ மேலிடம் விரும்பவில்லை. அதனால் 20 வருடங்களில் முதன்முறையாக பா.ஜ சார்பில் முதல்வர் பெயரை அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தது. ஆனால் அமோக வெற்றி பெற்றதால் முதல்வர் தேர்வில் சிக்கல் எழுந்துள்ளது. முதல்வர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று சிவராஜ்சிங் சவுகான் கூறினாலும், பெரும்பாலான மக்களின் ஆதரவு பெற்ற அவருக்கு பதில் புதிய முதல்வராக யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் பா.ஜ உள்ளது. இந்தநிலையில் ம.பியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்று மபி பா.ஜ மீடியா ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆஷிஷ் அகர்வால் அறிவித்து உள்ளார். ம.பி மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், கே. லட்சுமணன் மற்றும் ஆஷா லக்ரா ஆகியோர் தலைமையில் நடக்கும் புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19 ஆண்டுகளில் ம.பி முதல்வரை தேர்வு செய்ய மேலிட பார்வையாளர்கள் வருவது இது 3வது முறையாகும்.

ராஜஸ்தானில் பெரும் குழப்பம்: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் வென்றாலும் முதல்வர் தேர்வு பா.ஜவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது என்று கூறப்படுகிறது. 2 முறை முதல்வராக இருந்த வசந்தராராஜேவுக்கு மேலிட ஆதரவு இல்லாவிட்டாலும், பா.ஜ சார்பில் வெற்றி பெற்ற 115 எம்எல்ஏக்களில் 60க்கும் மேற்பட்டோர் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதை பா.ஜ மேலிடம் ரசிக்கவில்லை. புதிய முதல்வரை தேர்வு செய்ய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , சரோஜ் பாண்டே மற்றும் வினோத் தாவ்டே ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டாலும், புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் எப்போது நடைபெறும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் ராஜஸ்தான் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவிக்கான போட்டியில் தனது பெயர் இருப்பது தொடர்பாக எழுந்த செய்திகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாபா பாலக்நாத் கூறுகையில்,’ தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நடக்கும் விவாதங்களைப் புறக்கணிக்க வேண்டும். பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் நான் இன்னும் கூடுதல் அனுபவத்தைப் பெற வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

* சட்டீஸ்கரில் யார், யார் போட்டி?

சட்டீஸ்கர் மாநிலத்தில் 2003 முதல் 2018ம் ஆண்டு வரை பா.ஜ முதல்வராக இருந்தவர் ராமன்சிங். அவரை மீண்டும் முதல்வராக தேர்வு செய்ய பா.ஜ மேலிடம் விரும்பவில்லை என்ற தகவல் பரவி உள்ளது. இதனால் முன்னாள் ஒன்றிய அமைச்சர் விஷ்ணு தியோ, ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரேணுகா சிங், முன்னாள் மாநில அமைச்சர்கள் ராம்விசார் நேதம், லதா உசேந்தி, எம்.பி., பதவியை ராஜினாமா செய்த கோமதி சாய் ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியாளராக உள்ளனர். மேலும் எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ள மாநில பா.ஜ தலைவர் அருண் சாவோவும், ஓபிசி வகுப்பை சேர்ந்த மூத்த தலைவர் ஓபி சவுத்திரியும் போட்டியில் உள்ளனர்.

* ராஜஸ்தான் முதல்வர் யார்?

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் 2 முறை முதல்வராக இருந்த வசந்தராராஜே மீண்டும் முதல்வராக ஆசைப்பட்டாலும், அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. பா.ஜ எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாபா பாலக்நாத் முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் உள்ளார். மேலும் ஒன்றிய அமைச்சர்கள் கஜேந்திரசிங் ஷெகாவத், அர்ஜூன் மெக்வால் மற்றும் எம்பி பதவியை ராஜினாமா செய்த தியாகுமாரி ஆகியோர் முதல்வர் பதவிக்கான ேபாட்டியில் உள்ளனர்.

* ம.பி.யில் 4 பேர் போட்டி

மபி முதல்வர் பதவிக்கான போட்டியில் ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய பிரகலாத் பட்டேல் முக்கிய போட்டியாளராக உள்ளார். ஓபிசி சமூகத்தை சேர்ந்த அவர் நரசிங்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் சிவராஜ்சிங் சவுகானுடன் சட்டப்பேரவை வளாகத்தை சுற்றிப்பார்த்தார். இதனால் அவர் தான் புதிய முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்ற யூகம் எழுந்துள்ளது. இதே போல் திமானி ெதாகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டதால், ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நரேந்திர தோமரும் முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் பா.ஜ தேசிய செயலாளர் விஜய் வர்க்கியா, பா.ஜ மாநில தலைவர் விடி சர்மா ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். ஆனால் முதல்வர் பதவிக்கான போட்டியில் நாங்கள் இல்லை என்று 4 பேரும் மறுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரம் கடந்தும் நீடிக்கும் சிக்கல் முதல்வர்களை தேர்வு செய்ய முடியாமல் பா.ஜ திணறல்: சட்டீஸ்கரில் இன்று எம்எல்ஏக்கள் கூட்டம் n ம.பி முதல்வர் குறித்து நாளை ஆலோசனை ராஜஸ்தானில் நீடிக்கும் பெருங்குழப்பம் appeared first on Dinakaran.

Tags : Jana Thnaral ,Chhattisgarh ,Rajasthan ,New Delhi ,Ja Thanari ,PM ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த...