×

ஜோதிட ரகசியங்கள்

பிதுர் தோஷம் ஏன் வருகிறது?

லக்னத்தில் அல்லது ராசியில் மற்றும் 5,9-ஆம் இடங்களில் தனித்த சர்ப்பக்கிரகங்கள் (ராகு,கேது) பெரும்பாலும் பிதுர் தோஷத்தை குறிகாட்டுகிறது.

1. நாம் முற்பிறவியில் நமது கணவன் அல்லது மனைவியை கவனிக்காமல் இருந்ததையும்,
2. நமது அப்பா, அம்மாவை கவனிக்காமல் இருந்ததையும்,
3. நமது மகனை அவனது மனைவியுடன் பிரித்து வைத்ததையும்,
4. அல்லது நமது மகளை அவளது கணவனுடன் பிரித்து வைத்ததையும், இத்தோஷம் காட்டுகிறது.

இதைத் தகுந்த பரிகாரத்தால் போக்கிக் கொள்ள வேண்டும். தோஷம் முற்றியிருந்தால், ராமேஸ்வரம், திருப்புல்லாணி முதலிய தலங்களில் முறையான பரிகாரங்களை செய்வது நல்லது.

யோகங்களைத் தடுக்கும் தோஷங்கள்

ஜாதகம் குறிகாட்டும் தோஷங்களை போக்கிக் கொண்டால், அதன் பிறகு யோகங்கள் செயல்பட ஆரம்பிக்கும். நாம் நம்முடைய ஜாதகத்தில் சந்திரமங்கள யோகம் இருக்கிறது, குருமங்கள யோகம் இருக்கிறது, பத்ரயோகம் இருக்கிறது, கஜகேசரி யோகம் இருக்கிறது என்றெல்லாம் நினைக்கலாம். அவைகளெல்லாம் செயல்பட விடாமல் சிறுதோஷங்கள் தடுக்கும். யோகங்களைவிட, தோஷங்களுக்கு வலிமை அதிகம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜோதிடரும் ஜோதிடமும்

அண்டவெளியின் ஆதார சக்திகளும், துணை சக்திகளும் ஒவ்வொரு மனிதனின் வாழ்வை எப்படி நகர்த்துகின்றன என்பதை ஆராய்ந்து சொல்லும் அறிவியல்தான் ஜோதிடம். மனம் செய்யும் செயல்களை உளவியல் நிபுணர் பரிசீலித்து சரி செய்ய முயற்சிப்பது போலவே, கோள்களின் செயல்களை, ஜாதகக் கட்டம் மூலம் பரிசோதித்து, சரி செய்ய ஜோதிடர் முயற்சிக்கிறார்.

விதியும் மதியும்

ஏழாம் வீட்டில் செவ்வாய், சனி. எங்கே பெண் தேடினாலும் இப்படித்தான் கிடைக்கும் என்ற மனைவியை சுட்டிக்காட்டுகிறது. இல்லறத்தை நல்லறமாக நடத்த, நமக்கு அமைந்த அந்த ஏழாம் நிலையை (யுவதி பாவம்) நாம் எப்படிக் கையாள்வது என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு வெறும் ஜாதகப் பலன்கள் போதாது. அது ஊருக்கு செல்லும் கைகாட்டி போல.
“நீ என்ன செய்தாலும் இப்படித்தான்..போ’’ என்பது ஜாதகத் தகவல்.

“நீ இப்படி இப்படி செய்தால் நிவர்த்தி ஆனாலும் ஆகும்’’ இது வழிகாட்டுதல். தீர்வு காணுதல்.

“ஆனாலும் ஆகும்” என்ற வார்த்தை முக்கியம். ஏழாம் வீட்டு செவ்வாய், சனி பள்ளம் என்ற விஷயத்தைக் காட்டுகிறது. அதில் விழாமல் தப்பிக்க முடியாது. அது விதி. விழுந்தாலும் சமாளித்துக் கொள்வது மதி.

“விதி இதுதான். முடிந்தால் மதியால் வென்று கொள்” என்பதற்குத்தான் இறைவன் மதியையும் சேர்த்துக் கொடுத்து அனுப்பி இருக்கிறான்.

கண் நோய்கள், இரத்த அழுத்தமா?

ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பட்டால் மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண்நோய்கள், ரத்த அழுத்தம், இதயநோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய்களையும், ஜுரம் போன்றவை ஏற்படும். தினம் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். ஒரு முறை கும்பகோணம் சக்கரபாணி கோயிலுக்கு சென்று வாருங்கள். ஒளியிழந்த சூரியன் தன்னொளி தனக்கு மீளவும் கிடைக்க ஸ்ரீசக்கரத்தையே சரணடைந்து பிரார்த்திக்க, வைகாசி மாத பௌர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து ஸ்ரீசக்கரபாணி சுவாமி மூன்று கண்களுடனும், எட்டு கைகளுடனும் அக்னி மயமான கேசத்துடனும் அருட்காட்சி தந்தார். ஆதவனின் ஒளியை மீளவும் தந்துஅருள் செய்தார் ஸ்ரீசக்கரபாணி சுவாமிக்கு சூரியன் கோயில் நிர்மாணித்து இத்திருத்தலத்தை வழிபாடு செய்தான். எனவே, இங்கு வழிபட்டால் சூரிய தோஷம் நீங்கும். ஆத்ம பலம் அதிகரிக்கும்.

ஜோதிட பரிகாரங்களை எப்படி நிர்ணயம் செய்கின்றார்கள்?

பொதுவாக, மிகப் பழமையான ஜோதிட நூல்களில், பலாபல நிர்ணயம் குறித்துத் தான் பல விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறதே தவிர, பரிகார விஷயமாக அதிகம் சொல்லப் படவில்லை. ஆயினும், பல அனுபவமிக்க ஜோதிடர்கள், எப்படி பரிகாரம் சொல்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். உதாரணமாக, சனி தோஷ நிவர்த்திக்கு திருநள்ளாறு பரிகாரமாகச் சொல்லப்படுகிறது. காரணம், இங்கேதான் நளன் தனது கஷ்டங்களை எல்லாம் நீக்கிக் கொண்டு சுகம் அடைந்தான்.

அதை போலவே கும்பகோணம் பக்கத்தில் இருக்கக்கூடிய திருவெள்ளியங்குடி என்கின்ற தலம் சுக்கிரனுக்கும், கண் நோய்களுக்கும் பரிகாரமாக சிலர் பரிந்துரைப்பதுண்டு. காரணம் சுக்கிரன், பகவானின் வாமன அவதாரத்தில் இழந்த கண்ணை இங்கே உள்ள பெருமாளை வணங்கிப் பெற்றதாக வரலாறு உண்டு. எந்தெந்த கோயில்களில் தலபுராண வரலாறுகளின் படி தோஷ நிவர்த்தி ஏற்பட்டு சில நன்மைகள் ஏற்பட்டதோ, அத்தலம் அந்த தோஷத்திற்கு பரிகாரமாகச் சொல்லப்படுகிறது.

கிரகங்களே தங்கள் தோஷங்களை நீக்கிக் கொண்ட தலம் என்பதால், கிரகங்களால் ஏற்படும் தோஷங்களையும் மிக எளிதாக நீக்கிக் கொள்ள முடியும் என்ற அடிப்படையில் இந்த பரிகாரங்கள் அமைந்திருக்கின்றன. கிரகங்களால் ஏற்படும் தோஷங்களையும் மிக எளிதாக நீக்கிக் கொள்ள முடியும் என்ற அடிப்படையில் இந்த பரிகாரங்கள் அமைந்திருக்கின்றன.

கிரகங்களும் நம் உடலும்

தலை, இருதயம் சூரியனின் கட்டுப்பாட்டிலும், முகம், தொண்டை சந்திரன் கட்டுப்பாட்டிலும், கைகள், தோள்கள் செவ்வாயின் கட்டுப்பாட்டிலும், மார்பு புதன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. வயிறு, உடல், தோல் பாகம் குருவின் ஆதிக்கத்திலும், அடிவயிறு, பிறப்பு உறுப்பு சுக்கிரன் கட்டுப் பாட்டிலும் உள்ளது. அதே போல, தொடை, கால், பாதம் சனியின் ஆதிக்கத்தின் கீழும் வரும். தலையில் நோய் வந்தால், சூரியனையும், வயிற்றில் கட்டி, வீக்கம் நோய் வந்தால் குருவையும், பிறப்பு உறுப்பு கோளாறுகளுக்கு சுக்கிரனையும், கால் பாதம் போன்றவைகளில் வரும் நோய்களுக்கு சனியையும், நரம்பு கோளாறுகளுக்கு புதனையும், மனக்கோளாறுகளுக்கு சந்திரனையும் பார்க்க வேண்டும். இது தவிர, அதற்குரிய பாவங்களையும் பரிசீலிக்க வேண்டும்.

தொகுப்பு: பராசரன்

The post ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Tags : Lagna ,Rasi ,
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்