×

தூங்கானை மாடம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மும்பையிலிருந்து பூனே செல்லும் நெடுஞ்சாலையில் லோனாவாலா என்ற சுற்றுலா தலமொன்றுள்ளது. லோனாவாலாவிலிருந்து பிரியும் கிளைச்சாலை யொன்றில் 7 கி.மீ. தொலைவில் வரலாற்றுப் புகழ்பெற்ற குர்லா குடைவரைகள் உள்ளன.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பெளத்த வழிபாட்டிற்காக தோற்றுவிக்கப் பெற்ற இக்குடைவரை களில் ஒன்று வளைந்த கூரை அமைப்புடன் திகழ்கின்றது. உள்ளே பெளத்த ஸ்தூபமொன்றும் இடம் பெற்றுள்ளது. இக்குட போகத்தினுள் நுழைந்து மேற்கூரைப் பகுதியை உற்று நோக்குவோமாயின் அதன் அமைப்பு மேலிருந்து தொங்கும் யானை உடலினுள் நாம் இருப்பது போன்று தோன்றும். வளைந்த மேற்கூரையின் உட்புறம் முழுவதும் மரத்தாலான விட்டங்கள் தொங்குவதைக் காணலாம்.

அவை யானை உடலின் விலா எலும்புகள் போன்று திகழும். வளைந்த கூரை அமைப்பும், மரவிட்டங்களும் வெளவால்கள் கூரையில் தொங்குவதைத் தடுப்பதற்கென்றே அமைக்கப்பெற்ற பிரத்தியேக அமைப்பாகும். இதே மராட்டிய மாநிலத்தில் உள்ள அஜந்தா குகைகள் வரிசையில் பத்தாம் குடைவரையாகத் திகழும் சைத்ய கிருஹம், பத்தொன்பது மற்றும் இருபத்தாறாம் சைத்ய கிருஹம் ஆகியவை கர்லா குடைவரை போன்றே தூங்கானை வடிவிலேயே திகழ்கின்றன. தூங்கு என்ற தமிழ்ச்சொல் தொங்குதல் என்பதை உணர்த்தும் சொல்லாகும். தூங்கானை குடபோகம் என்பது குடைவரையின் உள்வெளி மேலிருந்து தொங்கும் யானையின் உள்ளுடல் போன்றே திகழ்வதாகும்.

நடுநாட்டுத் தேவாரத் தலங்களுள் ஒன்றான பெண்ணாகடம் திருக்கோயிலுறை பெருமானை,
`பெண்ணாகடத்துப் பெருங்கோயில்சேர்
பிறை உரிஞ்சும் தூங்கானை மாடம் மேயான்’
என்று திருஞானசம்பந்தரும்;
`துன்னார் கடந்தையுள் தூங்கானை
மாடச் சுடர்க் கொழுந்தே’

எனத் திருநாவுக்கரசரும் போற்றியுள்ளனர். எண்தோள் ஈசர்க்கு மாடம் எழுபது செய்த கோச்செங்கணான் கட்டிய இம்மாடக்கோயில் தூங்கானை மாடமாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கதாகும். தொங்குகின்ற யானை உடல்போன்று கருவறையின் உட்புறத் தோற்றம் விளங்குவதோடு, தூங்கானை மாட விமானம் புறத்தோற்றத்தில் யானையின் பின்னுடல் போன்றே திகழ்வதாகும். இதனைக் கட்டடக் கலை நூல்கள் ‘கஜபிரிஷ்டம்’ எனக் குறிப்பிடும். சமயக் குரவர் இருவரும் தூங்கானை மாடம் பற்றிப் பேசுவதால் அவர்கள் காலமான கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இக்கட்டடக் கலை மரபு சிறந்திருந்தது என்பதறியலாம்.

பல்லவர்களின் கடற்றுறையான மாமல்லபுரத்தில் கடற்கரையோரம் ஐந்து வகையான கோயில்கள் ஒரே இடத்தில் இருப்பதைக் காணலாம். ஐந்து என்ற எண்ணிக்கையில் உள்ள பொருள்களுக்கெல்லாம் பஞ்சபாண்டவர் பெயர்களை இட்டு அழைப்பது பாமரர் மரபு. அவ்வகையில் இங்கு திகழும் ஐந்து வகையான கோயில்களையும் பஞ்ச பாண்டவர் ரதங்கள் என்று அவர்கள் பெயராலேயே மக்கள் வழிவழியாக அழைத்து வருகின்றனர். இங்கு திகழும் ஐந்து கோயில்களும் தமிழகத்தில் பண்டு திகழ்ந்த ஐந்துவித வடிவமைப்பில் இருந்த கோயில்களே ஆகும். இவை கட்டுமான கோயில்களாக எழுப்பப் பெறாமல் அங்கிருந்த குன்றுகளைச் செதுக்கி கட்டுமானக் கோயில்கள் போன்று தோற்றமளிக்கும் வகையில் உருவாக்கப்பெற்ற மலைத்தளிகளாகும்.

தெற்கில் உயர்ந்தும் வடக்கில் சரிந்தும் திகழ்ந்த ஒரு குன்றினைச் சிற்றுளிகளால் செதுக்கிச் செதுக்கி தர்மராஜரதம், பீமரதம், அர்ச்சுனன் ரதம், திரெளபதி ரதம் (நகுலனுக்குப் பதிலாக இங்கு திரெளபதி பெயரினை பாமரர் இட்டுள்ளனர்) ஆகிய நான்கு கோயில்களை உருவாக்கியுள்ளனர். தர்மராஜ ரதம் உயர்ந்த பெருங்கோயிலாகவும், பீமரதம் சாலை வடிவிலும், எண்பட்டை உடைய சிகரத்துடன் அர்ச்சுனன் ரதமும், ஓலைக் குடிசை வடிவில் திரெளபதி ரதமும் அமைந்துள்ளன. இவைகளுக்கு அருகே கம்பீரமாக நிற்கும் சிம்மம் ஒன்றினையும் படுத்த நிலையில் காளையொன்றினையும் அங்கிருந்த பாறைகளைச் செதுக்கி அமைத்துள்ளனர்.

வரிசையாகத் திகழும் இந்த நான்கு கோயில்களுக்கு எதிரே இருந்த ஒரு சிறு குன்றினைச் செதுக்கி ஒரு தனிக் கோயிலையும் அதற்கு இணையாக அருகில் நிற்கும் யானை உருவத்தையும் உருவாக்கியுள்ளனர். இக்கோயிலைச் சகாதேவ இரதம் என்பர். இக்கோயில்தான் தூங்கானை மாடம் என்னும் கஜப்பிரிஷ்ட கோயிலாகும். கருவறையின் உள்தோற்றம் தொங்கும் யானை உடலின் உள்தோற்றம் போன்றும், புற அமைப்பில் யானையின் பின்னுடல் அமைப்பிலும் காணப்பெறும். இது கஜபிரிஷ்ட கோயில் என்பதை கலை ஆர்வலர்களுக்குக் காட்ட இக்கோயிலினை ஒட்டியே நிற்கும் யானையின் சிற்பத்தையும் உருவாக்கியுள்ளனர்.

வடக்கு நோக்கி திகழும் இக்கோயிலின் பின்புறம் நின்றுகொண்டு தூங்கானை மாடக் கோயிலின் பின்புறத்தையும், அருகே நிற்கும் யானையின் பின்னுடல் அமைப்பினையும் ஒப்பிட்டு நோக்குவோமாயின் அந்த அழகில் நம்மையும் மறந்து நிற்போம். அதனை உருவாக்கிய கலைஞனின் கற்பனை வெளிப்பாடும், இரசனை உணர்வும் நம்மை உலுக்கிடும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குர்லா குடைவரையிலும், அஜந்தா குடைவரையிலும் கையாண்டுள்ள தூங்கானை குடபோகம் என்னும் கட்டடக் கலை நுட்பத்தை ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ நாட்டுச் சிற்பிகள் மேலும் செறிவுறச் செய்து புறத்தோற்றத்திலும் யானையுடல் அமையுமாறு தூங்கானை மாடமாக வடிவமைத்துள்ளதைக் காணும்போது பிற புலத்தில் உதித்த கலை தமிழகத்தில் உச்சமெய்தியதை கண்டுணரலாம்.

பின்னாளில், சிறுதொண்டநாயனார் எனப்பெறும் பரஞ்சோதி என்னும் நரசிம்ம பல்லவனின் தளபதி மேலைச்சாளுக்கிய நாட்டின் மீது படைசெலுத்தி வாதாபி நகரை முற்றிலுமாகப் பொடிபட அழித்தது முன்னை நாள் வரலாறு. காஞ்சிபுரத்து கயிலாசநாத கோயிலையும், மாமல்லையில் உள்ள அனைத்து படைப்புகளையும் உருவாக்கிய பெருமை அத்தியந்தகாமன் என்ற பட்டம் சூடிய இராஜசிம்ம பல்லவனையே சாரும்.

இராஜசிம்ம பல்லவனின் (கி.பி. 690-728) காலத்திற்குப் பிறகு அவன் மைந்தன் இரண்டாம் பரமேசுவரன் பல்லவப் பேரரசனாக முடிசூடினான். கி.பி.728 முதல் 730 வரை மூன்று ஆண்டுகளே இவன் ஆட்சி நீடித்தது. மேலைச் சாளுக்கிய மரபில் உதித்த விக்கிரமாதித்தன், முன்னர் பரஞ்சோதியால் வாதாபி நகர் அழிக்கப்பட்டது போன்று காஞ்சி நகரை முற்றிலுமாக அழிப்பேன் என்று வெஞ்சினம் பூண்டு, காஞ்சி நோக்கி பெரும்படையுடன் வந்தான். காஞ்சி நகர் வீழ்ந்தது.

போர் தர்மத்தையும் மீறி அனைத்தையும் அழியுங்கள் என்று தானைத் தலைவர்களுக்கு ஆணையிட்டவாறு கச்சி நகரத்திற்குள் நுழைந்த விக்கிரமாதித்தன் முதலாவதாகக் கண்டது காஞ்சி கயிலாசநாதர் கோயிலைத்தான். படையைப் புறத்தில் நிறுத்திவிட்டு அக்கோயிலுக்குள் நுழைந்தவன், பேரழகில் மயங்கினான். அக்கலையழகு அவன் உள்ளத்தில் எரிந்துகொண்டிருந்த கோபத் தீயை முற்றிலுமாக அவித்தது. கயிலாயமே சென்று வந்த புத்துணர்வோடு வெளிவந்தான். தானைத் தலைவர்களுக்கு அவன் இட்ட முதல் ஆணை ‘‘பேரழகுடைய இக்கோயில் உள்ள நகரத்தில் எந்த ஒரு பொருளையும் அழிக்காதீர்கள்’’ என்பதுதான்.

காஞ்சி நகரைக் கைப்பற்றிய சாளுக்கிய விக்கிரமாதித்தன் பல்லவர் அரண்மனையிலிருந்து கைப்பற்றிய பெரும் செல்வத்தை கயிலாசநாதர் காலடியில் கொட்டி மண்டியிட்டு வணங்கினான். எண்ணற்ற நிவந்தங்களுக்கு ஆணையிட்டான். அங்குக் கல்வெட்டாகவும் அந்த ஆணைகளைப் பொறித்தான். இங்கு வெஞ்சினத்தை கலை வென்றது.

பல்லவ நாட்டு கலைச் செல்வங்களை எல்லாம் கண்டுகளித்த அந்த இளைஞன் தன் சாளுக்கிய நாட்டிலும் இத்தகைய படைப்புகளை உருவாக்க நினைத்தான். தான் காஞ்சியிலிருந்து திரும்பும்போது பல்லவ நாட்டுச் சிற்பிகள் பலரைத் தன்னுடன் அழைத்துச் சென்றான். சாளுக்கிய நாட்டு பட்டடக்கல் என்னும் ஊரில் லோகமாதேவீச்சரம் என்ற பெயரில் அச்சிற்பிகள் துணைகொண்டு கலையழகு மிளிரும் கோயிலொன்றினை எடுப்பித்தான்.

பல்லவநாட்டுச் சிற்பிகளின் பெயர்களை அங்குக் கல்லில் பொறித்து சிறப்பித்தான். சாளுக்கியர்களை இராஷ்டிரகூடர்கள் வென்றனர். கிருஷ்ணன் எனும் இராஷ்டிரகூட மன்னன் பல்லவ சிற்பிகள் படைத்த பட்டடக்கல் கோயில் அழகில் மயங்கினான். அதன் எழில் அவனை எல்லோரா கயிலாச நாதர் கோயிலை உருவாக்கச் செய்தது. காஞ்சி நகரத்து கலை எல்லோரா சென்றது. குர்லா மற்றும் அஜந்தாவில் தோற்றம் பெற்ற தூங்கானை குடபோகம் என்னும் கட்டடக்கலை பல்லவ நாட்டில் தூங்கானை மாடமாக வெளிப்பட்டது.

கச்சிப்பேட்டு பெரிய தளி என்ற காஞ்சி கயிலாசநாதர் கோயிலின் பேரழகு வெஞ்சினம் பூண்டு கொழுந்து விட்டு எரிந்த கோபக்கனலைத் தென்றலென குளிரச் செய்தது. காஞ்சி நகரத்து கலை பட்டடக்கல் சென்று பின்பு எல்லோராவிலும் மணம் வீசிற்று. கலை என்பது கட்டுக்குள் அடங்காது. ரசனை என்பது மனித குலத்தை வளப்படுத்தும் மாமருந்து.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post தூங்கானை மாடம் appeared first on Dinakaran.

Tags : Saffron Spirit ,Mumbai ,Pune ,Lonavala ,Sleepingani Madum ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!