×
Saravana Stores

காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாய் ₹40 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும்: அமைச்சர் முத்துசாமி தகவல்

காஞ்சிபுரம், டிச. 9: காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாய், ‘₹40 கோடி மதிப்பில் சீரமைக்கும்பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் அதனை அகற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வெள்ள மீட்பு பணிகளுக்காக அமைச்சர் முத்துசாமி பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். நேற்று மிக்ஜாம் புயலால் பெய்த கன மழையினால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள பி.எஸ்.சீனவாசா பள்ளி வளாகத்தில் மழைநீரானது குளம்போல் தேங்கியுள்ளது.

அதனை தொடர்ந்து, வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு மழைநீரை அகற்றுவதற்கான பணியில் ஈடுபட்டனர். இதனை மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள், அதன் வடிகால் மற்றும் மழைநீர் வெளியேற்றுவதற்கான வழிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி உடனடியாக தேங்கியுள்ள நீரை அகற்றவும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார். பின்னர், லாரிகள் மூலம் மணல் கொண்டு வரப்பட்டு மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மணல் கொட்டி பொக்லைன் இயந்திரங்கள் கொண்டும் சரி செய்யப்பட்டு வரும் பணிகளையும், மோட்டார் இயந்திரங்கள் கொண்டு நீரை வெளியேற்றும் பணியினையும் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி தெரிவித்தாதவது: காஞ்சிபுரம் மாநகராட்சி பொருத்தவரை இந்த மழையில் பெருமளவு நீர் தேங்காத நிலை ஏற்பட்டது. மேலும், மஞ்சள் நீர் கால்வாய் ₹40 கோடியில் புனரமைக்க உள்ளதால் வருங்காலங்களில் மாநகரில் மழைநீர் அனைத்தும் உடனடியாக வெளியேறும் நிலை உருவாகும். தற்போது, தற்காலிகமாக நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பள்ளி மாணவர்கள் எந்த ஒரு சிரமத்திற்கு உள்ளாகவில்லை.முதலமைச்சரின் நடவடிக்கையால் புயலால் தேங்கிய மழைநீர் பல இடங்களில் துரிதமாக அகற்றப்பட்டது. சில இடங்களில் தேங்கிய மழைநீரானது அகற்றப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஒரு மாதத்திற்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததுதான்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி பொருத்தவரை பெரிய பாதிப்பு இல்லை. பாதிப்பு இருந்த பகுதிகள் அனைத்தும் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு சரிசெய்யபட்டுள்ளது. மேலும், மழை செல்லும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு அரசு அதிகாரிகள் துணை நின்றது தெரிய வந்தால் அது குறித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை உடனடியாக காலி செய்ய முடியாது என்பதால் அவர்களுக்கு உரிய இடமளித்து நீர்நிலைகள் காக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஆணையர் செந்தில் முருகன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் திலகர், தசரதன் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாய் ₹40 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும்: அமைச்சர் முத்துசாமி தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Yellow Water Canal ,Minister ,Muthuswamy ,Kanchipuram ,Muthusamy ,
× RELATED மழையினால் வீடு இடிந்தது மூதாட்டிக்கு நிவாரணத்தொகை