×

யானையும் பகவானும்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இது ஒரு வித்தியாசமான முயற்சி. பொதுவாக, ஆன்மிக விஷயங்கள், கட்டுரைகளாகவோ, கற்பனை கலந்த கதைகளாகத்தான் கொடுப்பது வழக்கம். கேள்விபதில் என்று இருந்தாலும்கூட, அது வெவ்வேறு விஷயமான கேள்விகளும் பதில்களுமாக இருக்கும். ஆன்மிகத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஆழமாகப் புரிந்து கொள்வதற்கு மிகச்சிறந்த வடிவம் உரையாடல்தான். நம்முடைய வேதங்களும் உபநிடதங்களும்கூட உரையாடல் வடிவத்தில்தான் பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. அந்த வகையில் “யானையும் பகவானும்’’ என்ற விஷயத்தைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். வாருங்கள் உரையாடுவோம்.

கேள்வி: கஜேந்திர மோட்சம் கதை எதில் சொல்லப்பட்டிருக்கிறது?

பதில்: கஜேந்திர மோட்சம் எதில் சொல்லப் பட்டிருக்கிறது என்று கேட்பதைவிட எதில் சொல்லப் படவில்லை என்று கேட்பது பொருத்தமாக இருக்கும். அது பிரதானமாக ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப் பட்டிருக் கிறது. பெரும்பாலும் எல்லா ஆழ்வார்களுமே கஜேந்திரமோட்சத்தை, தங்கள் பாசுரங்களின் பல்வேறு இடங்களில் பாடியிருக்கின்றார்கள். நாராயண பட்டதிரி தன்னுடைய நாராயணீயத்தில் இந்த விருத்தாந்தத்தை மிக உருக்கமாகப் பாடுகின்றார்.

கேள்வி: எத்தனையோ கதைகள் இருக்கின்றன, பல அசுரர்களை கண்ணன் அழித்திருக்கின்றான். அப்படி இருக்க கஜேந்திர மோட்சம் கதைக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம்?

பதில்: பொதுவாக, பக்தர்கள் பெருமாளிடம் தங்களுடைய ஆபத்தைச் சொல்லி முறையிடும்போது, பகவான் உதவிய பல பல சந்தர்ப்பங்கள் இருந்தாலும்கூட, மூன்று விஷயங்களைத் தான் பிரதானமாகக் கோடிட்டுக் காட்டுவார்கள். இதை ஆழ்வார்கள் பாசுரங்களில் ஆரம்பித்து, தியாகராஜ ஸ்வாமிகள் கீர்த்தனைகள் வரை நாம் பார்க்கமுடியும். ஏன், தற்கால கவிஞர்கள்கூட இந்த விஷயத்தைத்தான் பாடு பொருளாகக் கொள்கிறார்கள்.

கேள்வி: என்ன மூன்று விஷயங்கள்?

பதில்: ஒன்று கஜேந்திர மோட்சம், இரண்டாவது திரௌபதி மானம் காத்தது, மூன்றாவது பிரகலாதன் சரித்திரம்.

அபயமென்ற கரிக்குதவிய நாமமோ
ஆரணங்கின் மானம் காத்ததோர் நாமமோ
அரன் மனத்திடை சதா ஜபித்திடும் நாமமோ
அவனியோர் உரைத்திடும் ஆயிரம் நாமத்தில்
என்ன சொல்லி அழைத்தால் வருவாயோ
எளியேன் என்றனை இனிது ஆட்கொள்ள
என்ற கீர்த்தனையிலும் இந்த விஷயம் வருகிறது பாருங்கள்.

கேள்வி: இந்த மூன்று சரித்திரங்களில் என்ன விசேஷம்?

பதில்: இவைகள் எல்லாம் தன்னுடைய அடியவர்கள் மிகமிக ஆபத்தான கட்டத்தில் இருந்தபோது இறைவன் உதவிய சரித்திரங்கள். உதாரணமாக, கஜேந்திரன் என்கிற யானையைக் காக்க மிக வேகமாக பகவான் கருடனின் மீது ஏறி வந்தான். ஒரு வினாடி தாமதித்து இருந்தாலும்கூட கஜேந்திரன் ஆயுள் முடிந்து போயிருக்கும். அதைப் போலவே தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து தன்னுடைய மானத்தை காப்பாற்றிக் கொள்ள திரௌபதி போராடினாள். அவளுடைய முயற்சியில் சோர்ந்து, இனி வழியில்லை என்று சொல்லி, பகவானை அழைத்த போது பகவான் ஒரு நொடியும் தாமதிக்காது அவளுடைய மானத்தைக் காப்பாற்றினார்.

கேள்வி: ஆக.. மூன்று பேரின் ஆபத்தின் போது உதவிய வரலாறு என்பதால் முக்கியமா?

பதில்: அப்படியும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எம்பார் என்கிற ஆச்சாரியர் (சுவாமி ராமானுஜரின் சித்தி பிள்ளை. தம்பி முறை) இதற்கு வேறு விதமாக விளக்கம் தருகின்றார்.

கேள்வி: அது என்ன விளக்கம்?

பதில்: இந்த மூன்று ஆபத்துகளும் பிரகலாதனுக்கோ, கஜேந்திரனுக்கோ, திரௌபதிக்கோ வந்த ஆபத்துக்கள் இல்லையாம்.

கேள்வி: வியப்பாக இருக்கிறதே. அப்படியானால் யாருக்கு வந்த ஆபத்துக்கள்?

பதில்: இவைகளெல்லாம் பகவானுக்கு வந்த ஆபத்துக்கள் என்று அவர் வியப்புடன் சொல்லுகின்றார்.

கேள்வி: அப்படியா! அது எப்படி பகவானுக்கு இருந்த ஆபத்துக்கள் என்று சொல்லலாம்?

பதில்: பிரகலாதன் கதையை எடுத்துக் கொள்வோம். தன் மகனான பிரகலாதனிடம், “உன் ஹரி எங்கிருக்கிறான், சொல்?” என்று அதட்டிக் கேட்கிறான். அப்போது அவன் சொன்ன பதில், “எங்கும் இருக்கிறான்”. அடுத்து “இப்படியெல்லாம் சொன்னால் ஏற்றுக் கொள்ளமாட்டேன். தெளிவாகச் சொல்? இந்த தூணில் இருக்கிறானா?’’ என்று கேட்க, ‘‘ஆம்” என்று பதில் சொல்ல, அந்தத் தூணில் பகவான் காத்திருந்து, அவன் வாக்கு தவறக்கூடாது என்பதற்காக நரசிம்மவதாரம் எடுத்து காப்பாற்றுகிறான்.

கேள்வி: இது பிரகலாதனுக்கு வந்த ஆபத்து தானே?

பதில்: இல்லை. அந்த தூணில் பகவான் இல்லை என்று ஆகியிருந்தால் என்ன நடந்திருக்கும். பிரகலாதனை கொன்றிருப்பான். அல்லது அவனே சொன்னது போல, தன் நம்பிக்கை பொய்த்து போனதை எண்ணி இறந்திருப்பான்.

கேள்வி: அதனால்தான் பிரகலாதனுக்கு வந்த ஆபத்து என்கிறோம்?

பதில்: பிரகலாதன் இறப்பது இருக்கட்டும். இரணியன் என்ன செய்திருப்பான். ‘‘பார்த்தீர்களா, ஹரி இல்லை, அவன் வரமாட்டான்,’’ என்று மூன்று உலகத்திலும் சொல்லியிருப்பான். பகவத் நம்பிக்கை குலைந்து போயிருக்கும். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியே பகவான் ஓடி வந்தான் என்பது எம்பாரின் நிர்வாகம். திரௌபதி விஷயத்திலும், கரணம் தப்பினால் மரணம். அவள் மானம் காப்பாற்றியதன் மூலம், தன் மீது வரும் பழியை நீக்கிக்கொண்டான். கஜேந்திரன் விஷயத்திலும், அவன் அழைத்த பேருக்கு பதில் சொல்லவும், அந்த ஆதிமூலம், தான் தான் என்பதை நிரூபிக்கவும் வந்தான்.

கேள்வி: ஸ்வாரஸ்யமாக இருக்கிறதே…!

பதில்: இது தத்துவம்தான். நம்மாழ்வாரின் திருவொய்மொழி முதல் பாசுரம் என்ன தெரியும்?

கேள்வி: உயர்வற உயர்நலம் உடையவன்யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.

பதில்: இதில் துயரறு சுடரடி என்று வருகிறதே. யாருடைய துயரத்தை நீக்குகிறது.

கேள்வி: பக்தர்களின் துயரத்தைத்தான்?

பதில்: தன் திருவடிகள் மூலம் பக்தர்கள் துயரங்கள் நீங்குவதால் பகவான் தன் துன்பம் நீங்கியதாக மகிழ்கிறான். பக்தர்களின் துயரங்களை நீக்கியதன் மூலம், அவர்கள் துன்பத்தைப் பார்த்து துன்பப்பட்ட பகவானின் துயரத்தை நீக்கிய திருவடிகள் என்று ராமானுஜர் பொருள் சொன்னார். சரி கஜேந்திர மோட்சம் கதைக்கு வருவோம். யானைகள் என்றால் பகவானுக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் பிரமோற்சவம் 10 நாளில் ஒருநாள் கஜவாகனத்தில் வருகிறார், பெருமாள்

கேள்வி: ஏன் யானையை பகவானுக்குப் பிடிக்கிறது?

பதில்: யானையை யாருக்குத்தான் பிடிக்காது. பகவானே ஒரு யானையைப் போல் இருப்பதால் பிடிக்கிறது.

கேள்வி: பகவான் யானையா?

பதில்: ஆமாம். கிருஷ்ணாவதாரத்தில் குழந்தைக் கண்ணன் தவழ்ந்து வருவதை, யானை வருவது போல என்று பாடுகிறார் பெரியாழ்வார். தெருவில் அலங்கரிக்கப்பட்ட யானை போகும் பொழுது நீங்கள் உற்றுப்பார்த்தால் கம்பீரமாக இருக்கும் அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கிற மணி ஒலித்துக்கொண்டே இருக்கும். வாயில் மத நீர் ஒழுகிக் கொண்டே இருக்கும். அது கருப்பாகவும் புஷ்டியாகவும் இருக்கும். நான்கு கால்களால் அசைந்து அசைந்து நடக்கும்.

கண்ணன் நிறைய ஆபரணங்களையும், மணிகளையும் அணிந்து கொண்டு, இரண்டு கைகளாலும், இரண்டு கால்களாலும் தவழ்ந்து வருகின்ற காட்சியைக் காணுகின்ற பொழுது, யானையின் ஞாபகம்தான் ஆழ்வாருக்கு வருகிறது. யானைக்கு வாயில் மத நீர் ஒழுகுவது போலவே குழந்தையின் வாயிலும் எச்சில் அமுதம் ஒழுகிக் கொண்டே இருக்கும் அல்லவா. இவற்றையெல்லாம் ஒரு பாசுரமாக காட்சிப்படுத்துகிறார்.

தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத்
தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய
நின்று ஊர்வது போல்
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப உடை
மணி பறை கறங்க
தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்
நடை நடவானோ

கேள்வி: அடடா… குழந்தைக் கண்ணனை நேரில் தரிசிப்பது போலவே இருக்கிறது.

பதில்: ஆழ்வார்கள் தங்களுக்கு ஞானத்தில் பிரத்யட்சமாகத் தோன்றிய காட்சியைத் தான் பாசுரங்களில் பாடுகின்றார்கள். மற்ற ஆழ்வார்களும் இந்த விஷயத்தைப் பாடி இருக்கின்றார்கள். ஆனால், ஆண்டாள், தன்னுடைய கல்யாணத்துக்கு எப்படி கண்ணன் வந்தான் என்பதைச் சொல்கிறார் தெரியுமா?
கேள்வி: சொல்லுங்கள்?

பதில்: நிறைய யானைகள் சூழ, அதன் நடுவே தானும் கம்பீரமாக ஒரு யானை நடந்து வருவது போல, வந்தான் என்று பாடுகிறாள்.
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ
நான்

கேள்வி: கண்ணனை யானையாக ஆழ்வார்கள் வருணித்து இருக்கிறார்கள் என்பது சரி, ராமனையும் அப்படி வர்ணித்து இருக்கிறார்களா?

பதில்: ராமனையும் யானையோடு ஒப்பிட்டு வர்ணிக்கிறார்கள். ராமனும் சீதையும் வனவாசத்தில் இருக்கின்றார்கள் அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே போகிறது ஒரு நாள் சீதை நடந்து செல்வதை ராமன் பார்த்து வியந்து போய் ஒரு சிரிப்பு சிரிக்கிறார். சீதையின் பக்கத்திலேயே ஒரு அன்னப் பறவையும் நடக்கிறது. சீதையும் நடக்கிறாள். ஆனால், சீதையின் நடையைப் பார்த்து, சீதையின் நடையழகு தனக்கு வரவில்லையே என அன்னப்பறவை வெட்கத்தோடு நடக்கிறதாம். அதனால் ராமன் சீதையைப் பார்த்து சிரிக்கின்றார்.

சீதை, பதிலுக்கு ராமனைப் பார்த்து ஒரு புன்முறுவல் பூக்கிறாள். அதற்குக் காரணம் என்ன தெரியுமா? அது வனமாக இருப்பதால் யானைகள் கம்பீரமாக அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்கின்றன. அந்த யானைகளின் நடையையும், ஆண் யானை போல் நடந்து வருகின்ற ராமனின் நடையையும் பார்த்து புன்முறுவல் பூக்கிறாளாம். கம்பனின் பிரசித்தியான பாட்டு

ஓதிமம் ஒதுங்க, கண்ட
உத்தமன், உழையள் ஆகும்
சீதை தன் நடையை நோக்கி, சிறியது ஓர்
முறுவல் செய்தான்;
மாது அவள் தானும், ஆண்டு வந்து,
நீர் உண்டு, மீளும்
போதகம் நடப்ப நோக்கி, புதியது ஓர்
முறுவல் பூத்தாள்.
கேள்வி: ஆக, பகவானுக்கு யானை என்றால் மிகவும் பொருத்தம்?
பதில்: யானைக்கும் பகைவனுக்கும் நிறைய சமயம் உண்டு.
கேள்வி: என்னென்ன?

பதில்: நிறைய இருக்கிறது. சிலவற்றை சொல்கிறேன். யானையை நேரே பிடிக்க முடியாது. பெண் யானையைக் காட்டித்தான் ஆண் யானையைப் பிடிக்க முடியும். அதைப் போல, பெண் யானையான மகாலட்சுமியின் புருஷ காரத்தால்தான் (சிபாரிசு) ஆண் யானையான பகவானைப் பிடிக்க முடியும். அல்லது யானையை குருவாக வைத்துக் கொண்டால் குருவின் மூலமாகத்தான் எம்பெருமானாகிய யானையை அடைய முடியும்.

நாம் நினைத்தால் யானையை அடக்கி அதன் மேல் ஏறிவிட முடியாது. யானை நினைத்தால்தான், அனுமதித்தால்தான் யானையின் மீது ஏற முடியும். அதைப் போல, பகவான் சுதந்திரன். அவன் நினைத்தால்தான் அவனுடைய அருள் சித்திக்கும். அதனால்தான் “அவன் அருளால் அவன் தாள் வணங்கி’’ என்று சொன்னார்கள். யானை அங்குசத்துக்கு கட்டுப்படுவது போல, பகவான் பக்தி என்கிற அங்குசத்துக்கு கட்டுப்படுவான். அதனால்தான் நம்மாழ்வாரை `பராங்குசன்’ என்று அழைத்தார்கள். பாகன் இட்ட வழக்காக யானை இருப்பது போல, அடியார்களும் ஆச்சாரியர்களும் இட்ட வழக்காக பகவான் இருப்பான். இப்படி யானைக்கும் பகவானுக்கும் உள்ள ஒற்றுமையை சொல்லிக் கொண்டே போகலாம்.

தொகுப்பு: பராசரன்

The post யானையும் பகவானும்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Anmigam ,Dinakaran ,
× RELATED வணக்கம் நலந்தானே!