×

எளியோர் மீதான இயேசுவின் பரிவு

கிறிஸ்துவம் காட்டும் பாதை

வறுமையும் ஒடுக்குதலும் தொன்றுதொட்டே இருந்து வருகின்றன. இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த சட்டங்கள் வறியோரைப் பாதுகாத்து, அவர்களுடைய துயரத்தைத் தணிக்கும் விதத்தில் இருந்தன. ஆனால், இஸ்ரவேலர் அந்தச் சட்டங்களையெல்லாம் அடிக்கடி அசட்டை செய்தனர். (ஆமோஸ் 2:6) ஏழைகளை அவர்கள் நடத்திய விதத்தை எசேக்கியேல் தீர்க்கதரிசி கண்டனம் செய்தார். ‘‘நாட்டின் பொது மக்கள் பிறர் பொருளைப் பறிக்கின்றனர். ஏழைகளையும் எளியவர்களையும் துன்புறுத்தி, அன்னியரை இழிவாய் நடத்தி, நீதி வழங்க மறுக்கின்றனர்’’ என்று கூறினார். – எசேக்கியேல் 22:29.

இயேசு பூமியில் வாழ்ந்த போதும், அதே நிலைமைதான் இருந்தது. ஏழை எளியோர் மீது அப்போதைய மதத் தலைவர்கள் துளிகூட அக்கறை காட்டவில்லை. ‘பண ஆசைமிக்கவர்கள்’, ‘விதவைகளின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்பவர்கள்’ என்றெல்லாம் மதத் தலைவர்கள் வர்ணிக்கப்பட்டார்கள். முதியோரையும், வறியோரையும் கவனித்துக் காப்பதற்குப் பதிலாகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காப்பதிலேயே அவர்கள் அதிக அக்கறை காட்டினார்கள். (லூக்கா 16:14, 20:47) நல்ல சமாரியனைப் பற்றிய உவமையில் இயேசு அதைப் பற்றி குறிப்பிட்டது, கவனிக்கத்தக்க நிகழ்வு. அடிபட்டுக் கிடந்த ஒரு மனிதனுக்கு ஆசாரியனும் லேவியனும் உதவி செய்வதற்குப் பதிலாக, கண்டும் காணாததுபோல் சென்றுவிட்டார்கள் என அந்த உவமையில் குறிப்பிட்டார் – லூக்கா 10:30-37.

ஆண்டவர் இயேசு, ஏழைகளின் துயரங்களை முழுமையாகப் புரிந்து கொண்டார் என்றும், அவர்களுக்காக மிகவும் அனுதாபப்பட்டார் என்றும் அவரைப் பற்றிய நற்செய்தி பதிவுகள் காட்டுகின்றன. அவர் தம்மையே வெறுமையாக்கி மனித உருவெடுத்து வந்து, ‘நமக்காக ஏழையானார்’. (2 கொரிந்தியர் 8:9) திரளான ஜனங்களைப் பார்த்து, இயேசு ‘அவர்கள்மேல் மனதுருகினார்; ஏனென்றால் அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்து போனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தார்கள்.’ (மத்தேயு 9:36)

ஓர் ஏழை விதவை போட்ட சிறிய காணிக்கையே அவருடைய மனதைக் கவர்ந்தது, செல்வந்தர்கள் தங்களுடைய ‘மிகுதியான செல்வத்திலிருந்து’ கொடுத்தவை பெரும் நன்கொடைகள் அல்ல. அந்த விதவைக்குப் ‘பற்றாக்குறை இருந்தும் தன் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையும் அவள் போட்டது’ அவருடைய இதயத்தைத் தொட்டது. – லூக்கா 21:4.

இயேசு ஏழைகள்மீது இரக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தனிப்பட்ட அக்கறையும் காட்டினார். அவரும் அவருடைய சீடர்களும் பொதுநல நிதி வைத்திருந்தார்கள், அதிலிருந்து ஏழைகளுக்கு கொடுத்தார்கள். (யோவான் 12:5-8; 13:29) ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டி கடமையை உணரும்படி தமக்கு சீஷர்களாயிருக்க விரும்புகிறவர்களை, இயேசு ஊக்குவித்தார்.

செல்வந்தனாகிய இளம் அதிபதியிடம் அவர் இவ்வாறு கூறினார். ‘‘உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றி வா’’. கடவுளையும் சக மனிதரையும்விட செல்வத்தையே அதிகம் நேசித்ததால், அவன் தனது உடமைகளை ஏழைகளுக்குக் கொடுக்க மனமில்லாதிருந்தான். எனவே, இயேசுவின் சீஷனாய் இருப்பதற்குரிய பண்புகள் அவனிடம் இருக்கவில்லை. – லூக்கா 18:22, 23.

இயேசுவின் மரணத்திற்குப்பின், அப்போஸ்தலர்களும் மற்ற சீஷர்களும் ஏழைகள் மது தொடர்ந்து அக்கறை காட்டினார்கள். அப்போஸ்தலன் பவுல் சீடர்களான யாக்கோபுவையும் பேதுருவையும் யோவானையும் சந்தித்தார்; நற்செய்தியை கூறும் பணியை இயேசு கிறிஸ்துவிடமிருந்து பெற்றதைப் பற்றி கூறினார். ‘புறதேசத்தார்மீது’ பவுலும் பர்னபாவும் கவனம் செலுத்த வேண்டுமென்பதை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். அதே சமயத்தில், ‘ஏழைகளுக்கு உதவி செய்யவும் மறக்க வேண்டாமென’ யாக்கோபும் அவருடைய தோழர்களும் பவுல் மற்றும் பர்னமாவுக்கு அறிவுறுத்தினார்கள். அதன்படியே பவுல் ‘முழு ஆர்வத்தோடு’ ஏழைகளுக்கு உதவினார். – கலாத்தியர் 2:7-10

பேரரசரான கிலவுதியுவின் ஆட்சியில், ரோம மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பஞ்சம் நிலவியது. அதனால், அந்தியோகியாவிலிருந்த கிறிஸ்தவர்கள் ‘‘ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பொருளுதவியை யூதேயாவில் வாழ்ந்த சகோதரர் சகோதரிகளுக்கு அனுப்பத் தீர்மானித்தனர். அப்பொருளுதவியைப் பர்னபா, பவுல் ஆகியோர் வாயிலாக மூப்பர்களுக்கு அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.’’ – அப்போஸ்தலர் 11: 28-30.

பேராயர் தே. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் – மதுரை

The post எளியோர் மீதான இயேசுவின் பரிவு appeared first on Dinakaran.

Tags : Jesus' ,Christianity ,God ,Israelites ,Dinakaran ,
× RELATED சென்னையில் கருவின் பாலினத்தை தெரிவித்ததாக மருத்துவமனைக்கு சீல் வைப்பு