×

ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடந்தது.

இந்த விவாதத்திற்கு பதிலளித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பேசியதாவது:
நேரு ஆட்சிக்காலத்தில் அவரது முடிவால் 2 மிகப்பெரிய தவறுகள் நடந்தன. அதன் காரணமாக காஷ்மீர் பல ஆண்டாக பாதிக்கப்பட வேண்டியிருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போரில் நமது ராணுவம் வென்று கொண்டிருந்த சமயத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. இந்த போர் நிறுத்தம் 3 நாட்களுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டிருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். அந்த நிலப்பகுதி நம் கையை விட்டு போயிருக்காது. காஷ்மீர் முழுவதையும் வெல்லாமல் போர் நிறுத்தம் செய்தது முதல் தவறு.

அடுத்ததாக இப்பிரச்னையை ஐநாவுக்கு எடுத்துச் சென்றதுு வரலாற்றுத் தவறு. இந்த 2 மசோதாக்கள் மூலம் காஷ்மீர் சட்டப் பேரவையின் பலம் 107ல் இருந்து 114 ஆக அதிகரிக்கப்படும். ஒரு பெண் உட்பட காஷ்மீரின் புலம்பெயர்ந்தவர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம் பெயர்ந்தவர் என 2 பேர் சட்டப்பேரவையில் நியமன உறுப்பினர் ஆக முடியும். அதேபோல், ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 24 பேர் எம்எல்ஏ ஆக முடியும். கடந்த 70 ஆண்டாக உரிமை பறிக்கப்பட்டவர்களுக்கு இந்த 2 மசோதாக்கள் நீதி வழங்கும். இவ்வாறு அவர் பேசினார். இதைத் தொடர்ந்து 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, நேருவை பற்றி பேசியதால் காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்

The post ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Kashmiris ,Lok Sabha ,New Delhi ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை