×

லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியின் ஜாமின் மனு தள்ளுபடி..!!

திண்டுக்கல்: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் புது அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் சுரேஷ் பாபு இவர் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகவும், துணை கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். மேலும் திண்டுக்கல் பழனி சாலையில் சத்திய சுபா என்ற பிரபல மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுரேஷ் பாபு மீது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு விசாரணை பிரதமர் அலுவலகத்தில் இருந்து அமலாக்கத்துறைக்கு வந்திருப்பதாக கூறி மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணி செய்யும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் சுரேஷ் பாபுவை தொடர்பு கொண்டு வழக்கில் விடுவிக்கவேண்டும் என்றால் ரூ.3 கோடி லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.51 லட்சம் தர வேண்டும் என திவாரி மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 1ம் தேதி ரூ.20 லட்சத்தை மருத்துவர் சுரேஷ் பாபு திண்டுக்கல் நத்தம் சாலையில் வைத்து கொடுத்துள்ளார். மேலும் உள்ள 31 லட்சத்தை விரைவாக தர வேண்டும் என்று அடிக்கடி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார். இதை அடுத்து மருத்துவர் சுரேஷுபாபு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் ரூ.20 லட்சத்தை கடந்த 1.12.2023 அன்று திண்டுக்கல் மதுரை சாலையில் புறநகர் பகுதியில் வைத்து கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அங்கித் திவாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் மதுரை சிறைக்கு மாற்றபட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கவேண்டும் என திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா முன்பு ஜாமீன் வழங்க கோரி அங்கித் திவாரி சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில் அங்கித் திவாரியின் தரப்பில் பேசிய வழக்கறிஞர் இந்த வழக்கு சரியாக சேர்க்கப்படவில்லை என்று வாதிடப்பட்டது. அதை தொடர்ந்து இந்த வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆரம்ப நிலையில் இருப்பதால் ஜாமின் கொடுக்கக்கூடாது என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா இந்த வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதால் இந்த வழக்கில் ஜாமின் அளிக்க முடியாது என்று ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேக் பாரதி இத்திரு குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

The post லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியின் ஜாமின் மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Tags : Jamin ,Ankit Tiwari ,Dindigul ,Dindigul court ,Dindigul Budu Akrakaram ,Dinakaran ,
× RELATED அங்கித் திவாரி ஜாமின் வழக்கு: ED...