×

முத்துப்பேட்டை பகுதியில் வெள்ளப்பெருக்கு

முத்துப்பேட்டை, டிச. 3: முத்துப்பேட்டை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அனைத்து தடுப்பணை கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஆறுகளில் தண்ணீர் நிரம்பி செல்கிறது. கடலும் சீற்றமாக காணப்படுகிறது.தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இது புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 5ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை நீடிக்கும். அதே நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் கடந்த 2 தினமாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மழை இல்லை வெயில் காணப்பட்டது. சில நேரங்களில் சாரல் மழை மட்டுமே பெய்தது. ஆனால் முன்பு பெய்த மழை நீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி கிடக்கிறது.

குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. இதேபோல இந்த பகுதியில் இருந்து கடலுக்கு செல்லும் கோரையாறு, பாமணி ஆறு, மரைக்கா கோரையாறு, கந்தபரிசான் ஆறு, வளவனாறு, புதிய மற்றும் பழைய கிளைதாங்கி ஆறு என அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் நிரம்பி செல்கிறது. இதனால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து ஆறுகளிலும் உள்ள தடுப்பணைகளின் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

இந்நிலையில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதால் கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம். படகுகள் செல்ல கூடாது என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இதனால் மீனவர்களின் படகுகள் ஆசாத்நகரை கோரையாறு, பேட்டை செக்போஸ்ட், ஜாம்புவானோடை படகு துறை மற்றும் அந்தந்த பகுதியில் தங்களது படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

The post முத்துப்பேட்டை பகுதியில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Muthuppettai ,Muthuppetta ,Dinakaran ,
× RELATED மின் பழுதை சரி செய்யும்போது ஊழியர்கள்...