×

கணிதம் கற்க பில்டிங் பிளாக்ஸ்… கோபம் தணிக்க டர்டில் கார்னர்…

நன்றி குங்குமம் தோழி

புதுமையாக இயங்கும் ராஜபாளையம் மழலையர் பள்ளி

கல்வி மிகவும் அவசியமானது. மாணவர்கள் நன்றாகவோ அல்லது ஆவரேஜாகவோ எப்படிப் படித்தாலும் கல்வியினை அவர்களுக்கே தெரியாமல் மனதில் புகுத்த வேண்டும். விளையாட்டாக சொல்லிக் கொடுக்கும் விஷயங்கள் குழந்தைகள் மனதில் எளிதாக பதிந்துவிடும். அதுதான் அவர்களின் எதிர்காலத்தின் ஆணிவேர். அதனை நன்றாக வேறூன்றி விட்டால் போதும் எதிர்காலத்தில் எதையும் சாதிக்கும் திறனை பெறுவார்கள்.

அப்படிப்பட்ட கல்வி திட்டத்தினைதான் வகுத்துள்ளார் ராஜபாளையத்தை சேர்ந்த நளினா ராமலட்சுமி. இவர் பிரபல ராம்கோ குழுமத்தின் நிறுவனர் ராமசுப்பிரமணிய ராஜா அவர்களின் மகள். தன் தந்தையின் குழுமத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், குழந்தைகளின் கல்வி, அவர்களின் அறிவுத்திறன், பெற்றோர், குழந்தைகளின் உறவு போன்றவற்றை மேம்படுத்த ஸ்ரீஹரிணி மீடியா என்னும் நிறுவனத்தை நிறுவி மழலையர் (எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி) வகுப்பிற்கான பாடத்திட்ட முறைகளை டாட் லேர்னிங் சர்க்கில் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளார்.

‘‘சொந்த ஊர் ராஜபாளையம். ஐ.ஐ.டியில் கணிதம் சார்ந்த படிப்பு முடிச்ச கையோடு எனக்கு திருமணமாகி, அமெரிக்காவிற்கு சென்றேன். குழந்தைகள் பிறந்த பிறகு பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழுக்க முழுக்க அவர்களின் வளர்ப்பில் கவனம் செலுத்தினேன். குழந்தைகள் சாதனையாளராகவும் வெற்றியாளராகவும் மாற பெற்றோரின் வளர்ப்பு முறை தான் காரணம். அவர்களின் எதிர்காலத்தை மகிழ்ச்சியாக உருவாக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டுதான் அவர்களை வளர்த்தேன். இந்தியா வந்த போது, இங்கு பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதில் சிரமப்படுகிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

அவர்களை வழிநடத்த புத்தகங்கள் ஏதும் இல்லை. மேலும் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் பர்சனாலிட்டி பற்றி தெரிந்திருக்க வேண்டும். பெற்றோர்களின் வழிகாட்டியாக ஆரம்பிக்கப்பட்டது தான் பேரன்ட் சர்க்கில் மாத இதழ். ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரண்டு மொழியில் வெளியாகும் இந்த இதழில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை புரிந்து கொள்வது குறித்த கட்டுரைகள், மருத்துவரின் ஆலோசனைகள் வழங்கினேன். குழந்தைகளின் மனநிலை, எதிர்பார்ப்புகள், எண்ணங்கள் பற்றி தெரிந்துெகாள்ள பெற்றோருக்கு வர்க்‌ஷாப்பும் வழங்கினோம். இதற்கிடையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், வர்க்‌ஷாப் நடத்த முடியவில்லை. எல்லாரும் வீட்டில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது’’ என்றவர் அந்த தருணத்தில்தான் மழலையருக்கான கல்வியினை துவங்கியுள்ளார்.

‘‘மழலையர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தினை பயனுள்ளதாக மாற்ற நினைத்து அவர்களுக்கு பேரன்ட் சர்க்கில் மூலம் பல ஆக்டிவிட்டி சார்ந்த புத்தகங்களை ஆன்லைனில் அறிமுகம் செய்தேன். சமையல் அறையில் உள்ள பொருட்கள் கொண்டு கணிதம், அறிவியல், ஆங்கிலம் பாடங்களை சொல்லித் தர முடியும் என்பதை செயல் முறையில் விளக்கம் கொடுத்தோம். ஒரு வார்த்தையை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்று போனிக்ஸ் முறையில் சொல்லிக் கொடுத்தோம்.

இவை அனைத்தும் டிஜிட்டல் புத்தக வடிவில் அறிமுகம் செய்தேன். இதில் உள்ள ஒவ்வொன்றும் குழந்தைகள் பெற்றோருடன் இணைந்து செய்வது போல் அமைத்திருந்தேன். கொரோனா காலத்திற்கு பிறகு மீண்டும் பள்ளிகள் இயங்க ஆரம்பித்த போது மழலையர் குழந்தைகளுக்காக இந்த டிஜிட்டல் கிட்டினை அறிமுகம் செய்ய விரும்பினேன். சின்மயா வித்யாலயா பள்ளியின் தலைமை ஆசிரியரான சகிமாலா அவர்களை அணுகி இந்த பாடம் குறித்து விளக்கினேன்.

அவர்களுக்கு அதில் உள்ள செயல் முறைகள் அனைத்தும் பிடிக்கவே தன் பள்ளியின் மழலையர் வகுப்பின் பாடங்களை மாற்றி அமைக்க சொல்லி கேட்டுக் கொண்டார். முதலில் தயங்கினாலும், குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி அவசியம் என்பதால், என் நிறுவன கல்வித் திட்ட குழுவினர் மற்றும் நிபுணர்களின் ஆலோசனை பேரில் துவங்கப்பட்டதுதான் டாட் லேர்னிங் சர்க்கில்’’ என்றவர் அதனைப் பற்றி விவரித்தார்.

‘‘இந்த பாடத்திட்டம் குழந்தைகளின் அனைத்து துறை சார்ந்து இருக்கணும். அவர்கள் படிக்கிறார்கள் என்று தெரியாமலேயே படிக்க வேண்டும். அதற்கு ஏற்ப மிகவும் கவனமாக உருவாக்கினோம். எல்லாவற்றையும் விட ஆசிரியர்கள் முதலில் புரிந்து கொண்டு அதனை மழலையருக்கு சொல்லித் தரவேண்டும், அதற்காக அவர்களுக்கு இந்த பாடத்திட்டத்தின் செயல்பாட்டினைப் பற்றி 10 நாட்கள் பயிற்சி அளித்தோம். ஆரம்பத்தில் எழுத்து வடிவமாகத்தான் அமைத்தோம். அதனை பின்பற்றுவதில் ஆசிரியர்கள் சிரமப்பட்டார்கள் என்பதால் இதனை முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் மாற்றி அமைத்திருக்கோம்.

நாம் பள்ளியில் படிக்கும் காலத்தில் A for Apple என்றுதான் சொல்லிக் கொடுப்பார்கள். டாட் லேர்னிங் முறையில் A எழுத்தினை போனிக்ஸ் முறையில் எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்று புரிய வைப்போம். அடுத்து அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் (ant, apple, aeroplane…) படங்களை காண்பிக்க வேண்டும். தொடர்ந்து Aவில் துவங்கும் வார்த்தைகளை வைத்து கதை மற்றும் பாடல்கள் ஆடியோ மற்றும் வீடியோ மூலம் ஒளிபரப்பாகும். இந்த ஆப் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு என்ன பாடங்களை எப்படி சொல்லித் தரவேண்டும் என்பதற்கான முழுமையான கைட் என்று சொல்லலாம்.

‘‘நான் இந்த பாடத்திட்டத்தினை அறிமுகம் செய்த போது, ஆசிரியர்கள் பழங்கால பாடத்திட்டங்களுக்கு தான் பயிற்சி பெற்று இருந்தாங்க. இது புதுசு. அனைத்தும் செயல்முறையில்தான் சொல்லித் தரவேண்டும். முக்கியமாக ஆசிரியர்கள் தங்களின் வகுப்பிற்குள் நுழையும் போது, தங்களின் கோபம், வெறுப்பு அனைத்தையும் வாசலிலேயே விட்டுவிட வேண்டும். அப்போது தான் குழந்தைகளுடன் இணைந்து செயல்பட முடியும். இருவருக்கும் இடையே தோழமை உருவாகும். குழந்தைகளும் பயமின்றி அவர்களை அணுகுவார்கள். மேலும் ஒவ்வொரு நாளும் என்ன சொல்லித் தர வேண்டும் என்பதும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதை ஆசிரியர்கள் கடைபிடித்தாலே போதும். அதற்கான அனைத்து ஒத்துழைப்பும் டாட் லேர்னிங் குழு அளிக்கிறது.

ஆங்கிலம், அறிவியில், தமிழ், கணிதம் பாடங்களில் ஒவ்வொரு வாரம் என்ன சொல்லித் தரவேண்டும் என்று திட்டமிடப்பட்டு இருக்கும். அனைத்திலும் செயல்வழி முறையினை பின்பற்றுவதால் குழந்தைகளால் எளிதில் புரிந்துெகாள்ள முடியும். உதாரணத்திற்கு பழங்கள் குறித்த வகுப்பில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு பழம் ெகாண்டு வருவார்கள். அதனை தொட்டு பார்ப்பார்கள், முகர்ந்து வாசனையை அறிவார்கள். சாப்பிட்டு சுவையினை அறிவார்கள். கணக்கிற்கு பில்டிங் பிளாக்ஸ் கொண்டு சொல்லித் தருகிறோம். இதன் மூலம் கூட்டல் கழித்தலை எளிதாக கற்றுக் கொள்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் குழந்தைகளின் அறிவுத் திறனை அளவிட்டு பின் தங்கி இருக்கும் குழந்தைகளுக்கு அதிக கவனம் செலுத்தவும் இந்த பாடத்திட்டம் உதவுகிறது’’ என்றவர் குழந்தைகளுக்கு ஏற்படும் மனஉளைச்சலை போக்கவும் முடியும் என்றார்.

‘‘இன்றைய வாழ்க்கை முறையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதற்கு அறிமுகம் செய்யப்பட்டதுதான் டர்டில் கார்னர். தினமும் வகுப்பிற்கு வந்தவுடன் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் வீட்டிற்கு சென்ற நேரம் முதல் பள்ளிக்கு வந்த காலம் வரை நடைபெற்ற விவரங்களை கேட்டறிவார். அம்மா திட்டி இருப்பார், அண்ணன் அடித்திருப்பான், பள்ளிக்கு வரும் வழியில் அடிபட்டு இருக்கும். அதனால் மன வேதனையுடன் இருப்பார்கள். இந்த நிலையில் பாடம் நடத்தினால் மூளை அதனை புரிந்து கொள்ளாது. அதை போக்கத்தான் டர்டில் கார்னர்.

சோகமாக இருப்பவர்கள் வகுப்பில் உள்ள ஆமை பொம்மையை கட்டிப் பிடித்துக் கொள்ளலாம். ஒருவரை இறுக்கமாக அணைத்தால், மனதில் இருக்கும் பாரம் குறையும். டர்டில் கார்னர் குழந்தைகளுக்கு மட்டுமில்லை ஆசிரியர்களுக்கும்தான். தற்போது எங்களின் நிறுவனத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் இதர பள்ளிகள் என பத்து பள்ளிகள் இந்த பாடத்திட்டத்தினை பின்பற்றுகிறார்கள். இதனை மேலும் பல பள்ளிகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்’’ என்றவர் கேஜட் ஃப்ரீ நேரத்தினை அனைவரும் அனுசரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

‘‘கோவிட்டுக்கு பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனிற்கு அடிமையாகிவிட்டோம். வீட்டில் அனைவரும் கூடி இருந்தாலும், தங்களின் நேரத்தினை செல்போனில் தான் கழிக்கிறார்கள். இந்த நிலை மாற வருடத்திற்கு ஒரு நாள் ஒரு மணி நேரம் செல்போன் இல்லாமல் குடும்பத்துடன் செலவழிக்க வேண்டும் என்று எங்க மாணவர்களுக்கு வலியுறுத்துகிறோம். வரும் காலத்தில் வாரத்தில் ஒரு நாள் அல்லது தினமும் கடைபிடிப்பதற்கான பழக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்’’ என்றார் நளினா.

சுதா ஷங்கர், ராம்கோ பாலவித்யா கேந்திரா,தலைமை ஆசிரியர்மழலையர் வகுப்பு முதல் +2 வரை வகுப்புகள் இருந்தாலும், மழலையர் வகுப்பிற்கு மட்டும் டாட் சர்க்கில் பாடத்திட்டங்களை பின்பற்றுகிறோம். இது பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால், முதலாம் வகுப்பிற்கும் இதனை அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது. 2021ல்தான் இந்த பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் மழலையர் வகுப்பில் இருந்து அவர்கள் முதலாம் வகுப்பிற்கு செல்லும் போது ஆங்கிலத்தின் முழு வாக்கியத்தினை போனிக்ஸ் முறையில் படிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதேபோல் பில்டிங் பிளாக்ஸ் கொண்டு கணக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதால், கூட்டல் கழித்தலும் அவர்கள் எளிதாக கற்றுக் கொள்கிறார்கள். எங்களின் நோக்கம் குழந்தைகள் ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு தவறாக பதில் அளித்தாலும், அதற்கான முயற்சி செய்ய வேண்டும்.

முக்தா தேவி, சின்மயா வித்யாலயா ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு பள்ளி, தலைமை ஆசிரியர்.

டாட் கரிகுலம் ஆன்லைன் முறையில்தான் துவங்கினோம். அப்போது அதன் தாக்கம் தெரியவில்லை. ஆனால் நேரடி வகுப்பாக நடத்த ஆரம்பித்த பிறகு பெற்றோர்கள் மற்ற பள்ளியில் குழந்தைகள் 100 எண் வரை பயின்றுவிட்டார்கள், எழுதுகிறார்கள் என்றார்கள். டாட் லேர்னிங் பொறுத்தவரை பொறுமையாகத்தான் குழந்தைகளுக்கு பாடங்களை அறிமுகம் செய்தாலும், அதன் அடித்தளம் மிகவும் பலமாக இருக்கும் என்று புரிய வைத்தோம். பாடங்களை புரிந்துகொண்ட பெற்றோர்கள் அவர்களின் திறமையில் மாற்றங்களை கவனித்தார்கள். அதுவே எங்களுக்கு இந்த பாடத்திட்டம் வெற்றி பெற்றதற்கான அடையாளம்.

சிவராஜ்குமார், சின்மயா வித்யாலயா ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு பள்ளி, முதன்மை ஆசிரியர்.

பொதுவாக பள்ளிக்கு செல்லவே குழந்தைகள் பயப்படுவாங்க. ஆனால் இந்த பாடத்திட்டம் ஆரம்பித்த பிறகு குழந்தைகள் எந்தவித பயமின்றி பள்ளிக்கு வருகிறார்கள். இந்த பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு தனித்துவமான ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. தினசரி வகுப்பில் என்ன பாடம் எப்படி நடத்த வேண்டும் என அனைத்து குறிப்புகளும் இருக்கும். பாடங்கள் முழுதும் செயல்முறையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், குழந்தைகள் எளிதாக கற்றுக் கொள்கிளார்கள். எல்லாவற்றையும் விட குழந்தைகள் மத்தியில் இந்த பாடத்திட்டம் நல்ல புரிதலை ஏற்படுத்தி இருப்பதால், அவர்களின் கல்வியின் அடித்தளம் மிகவும் பலமாக அமைவதில் சந்தேகமே இல்லை.

சகிமாலா, சின்மயா வித்யாலயா ஸ்ரீமதி சேதுராம் அம்மாள் பள்ளி, தலைமை ஆசிரியர்.

மழலையர் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட பாடத்திட்டம் கிடையாது. ஒவ்வொரு பள்ளிகளும் தனிப்பட்ட பாடத்திட்டத்தினை பின்பற்றுவார்கள். டாட் லேர்னிங் மழலையர் பாடத்திட்டங்களுக்கு ஒரு முன்னோடி என்று தான் சொல்லணும். 3 முதல் 5 வயதில் இருக்கும் குழந்தைகள் என்னெல்லாம் படித்து தெரிந்துெகாள்ள வேண்டும் என அனைத்தும் இதில் உள்ளது. இதில் மனப்பாடம் முறையே கிடையாது. ஒவ்வொன்றையும் புரிந்து படித்து தெரிந்து கொள்கிறார்கள்.

எங்களைப் பொறுத்தவரை குழந்தைகள் சந்தோஷமாக பள்ளிக்கு வரவேண்டும். அதே மனநிலையில் வீட்டிற்கு செல்ல வேண்டும். கல்வி அவர்களுக்கு பாரமாக இல்லாமல் விளையாட்டு போக்கில் போதிக்கப்பட வேண்டும். முக்கியமாக ஆசிரியர் மற்றும் குழந்தைகளுக்கு இடையே ஒருவித அழகான பந்தம் ஏற்படும். அதுவே அவர்களின் கல்வித் திறன் திறமையாக அமைய ஒரு பாலமாக இருக்கும்.

தொகுப்பு: ப்ரியா

The post கணிதம் கற்க பில்டிங் பிளாக்ஸ்… கோபம் தணிக்க டர்டில் கார்னர்… appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi Innovative Rajapalayam Kindergarten ,Dinakaran ,
× RELATED தடிப்புச்சொறி தவிர்ப்போம்!