×

வாழ்க்கையை மாற்றி அமைத்த கடற்புல் கூடைகள்!

நன்றி குங்குமம் தோழி

‘‘நான் பார்க்காத வேலையே கிடையாது. நிறைய தொழில் செய்தேன். ஆரம்பத்தில் நன்றாக லாபம் பார்த்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அதில் பெரிய அளவு நஷ்டத்தைதான் நாங்க சந்தித்தோம். இந்த தொழில்தான் எங்களின் கடைசி ஆயுதம். இதையும் நாங்க சக்சஸ் செய்யலைன்னா எங்களுக்கு வாழ்க்கையே இல்லைன்னு என் முடிவில் நான் கடைசியாக ரிஸ்க் எடுக்கலாம்னு இந்தத் தொழிலில் இறங்கினேன். கடவுள் புண்ணியத்தில் இப்போது கடற்புல்லினால் கைவினைப் பொருட்களை செய்யும் தொழிலை ஆரம்பித்து அதை சக்சஸா நடத்தி வருகிறேன்’’ என்கிறார் சேலத்தை சேர்ந்த ஜன்னத் நிஷா துரை. இவர் ‘சேசை கிராஃப்ட்’ என்ற பெயரில் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையினை சேலத்தில் நடத்தி வருகிறார்.

‘‘என் சொந்த ஊர் சேலம். அங்குதான் படிச்சேன். எங்களுடையது காதல் திருமணம். எங்க வீட்டில் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர் வீட்டில் என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள். இருவரும் திருமணம் செய்தோம். நான் பத்தாம் வகுப்பு வரைதான் படிச்சிருக்கேன். அதன் பிறகு நான் படிக்கவில்லை. அவர் பட்டப் படிப்பை முடித்திருந்தார். ஆனால் அவருக்கு மற்றவரிடம் வேலைக்கு செல்ல விருப்பமில்லை.

சொந்தமாக தொழில் செய்யலாம்னு நானும் என் கணவரும் முடிவு செய்தோம். எங்க வீட்டில் நாங்க ஊறுகாய் போட்டு விற்பனை செய்த அனுபவம் ஓரளவு எனக்கு இருந்ததால், நானும் அவரும் பிசினஸ் செய்ய திட்டமிட்டோம். முதலில் முறுக்கு பிசினஸ்தான் துவங்கினோம். ஆனால் அது பெரிய அளவில் போகவில்லை. அதனைத் தொடர்ந்து கடுகு, மிளகு, சீரகம் போன்ற மளிகைப் பொருட்களை மொத்த விலைக்கு வாங்கி பாக்கெட் செய்து அதனை ரீடெயில் விலைக்கு விற்பனை செய்தோம்.

அதுவும் சறுக்கிடுச்சு. அதனைத் தொடர்ந்து டெரக்கோட்டா பிசினஸ். டெரக்கோட்டா பொம்மைகளை வாங்கி அதற்கு பெயின்டிங் செய்து விற்பனை செய்தோம். டெரக்கோட்டா பொம்மைகள் எல்லாம் நம்ம ஊரில் கிடைக்காது. வட மாநிலங்களில்தான் அதிகம் கிடைக்கும். அதனால் அதனை அங்கிருந்து வாங்கி அதில் ஆயில் பெயின்டிங் செய்து தமிழ்நாடு முழுக்க விற்பனை செய்தோம். வடமாநிலங்களில் இருந்து பொருட்களை வாங்கி அதனை இங்கு விற்பனை செய்ததால், அதில் பெரிய அளவில் முதலீடு செய்தோம். செய்த முதலீட்டிற்கு ஏற்பலாபம் பார்க்க முடியவில்லை. பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. என்ன செய்வதுன்னே தெரியல. இதில் இருந்து எப்படி மீளப்போகிறேன் என்ற பதட்டம்தான் இருந்தது’’ என்றவர் அதில் இருந்து மீண்டதைப் பற்றி விவரித்தார்.

‘‘என்ன செய்வதுன்னு நானும் என் கணவரும் பதற்றத்தில் இருந்தோம். அந்த சமயத்தில் அங்கு ஒரு கண்காட்சி நடைபெற்றது. அதில்தான் நான் கடற்புல்லினால் செய்யப்பட்ட பைகளை பார்த்தேன். அந்த பைகள் பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. மேலும் அதில் பலவிதமான பொருட்களை செய்ய முடியும் என்றும் தெரிந்து கொண்டேன். எல்லாவற்றையும் விட இந்த பைகளை பின்னுவதும் எளிதாக இருந்தது. அதனால் கடைசியாக இந்த ெதாழிலில் ஈடுபட்டு பார்க்காலம்னு முடிவு செய்தேன்.

அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டேன். இது கடற்புல்லினால் பின்னப்பட்ட பைகள். இந்த புற்கள் கடலில் அல்லது ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் வளரக்கூடியது. பார்க்க வைக்கோல் மாறி இருந்தாலும், இது அதைவிட கடினமாக இருக்கும். பெரும்பாலும் இந்த புற்கள் இந்தோனேஷியாவில்தான் அதிகம் வளரக்கூடியது. இருக்கும் நிலையில் எப்படி அங்கிருந்து வரவழைப்பது மற்றும் அதனைக் கொண்டு எவ்வாறு பைகளை பின்னுவது என்று யோசித்தேன். அந்த சமயத்தில் என் தோழி மூலமாக வடநாட்டில் இந்த புற்களை அவர்கள் பயிர் செய்வதாகவும், அவரின் நண்பர் அந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும்.

மேலும் அங்கு இந்த புல்லினால் பின்னப்பட்ட பைகளை பெண்கள் குடிசை தொழிலாக செய்து வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். முதலில் இந்த புற்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும், அதில் எவ்வாறு கூடைகளை பின்ன வேண்டும் என்பதை அங்கு சென்று அங்குள்ள பெண்களிடம் பயிற்சி எடுத்தேன். என்னால் அந்தத் தொழிலை தன்னம்பிக்கையுடன் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன் செய்ய ஆரம்பித்தேன். வடமாநிலத்தில் இருந்து அந்த புற்களை இங்கு வாங்கி வந்தேன்.

அதன் பிறகு இங்குள்ள பெண்களுக்கு பயிற்சி அளித்தேன். தற்போது கிட்டத்தட்ட 20 கடைகள் வச்சு நடத்துகிறேன். 80க்கும் மேற்பட்ட டிசைன்களை வடிவமைக்கிறேன். மேலும் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க விற்பனை செய்கிறோம். ஆன்லைனிலும் எங்களின் பைகள் விற்பனையாகிறது’’ என்றவர் இதனை எவ்வாறு வடிவமைக்கிறார் என்று விவரித்தார்.

‘‘ஒரு கட்டு புல் எட்டு முதல் பத்து கிலோ எடையில் இருக்கும். ஒரு புல் சுமார் ஏழு அடி உயரம் வளரும். அவர்கள் இந்த புல்லை ஆறு மாசத்திற்கு ஒரு முறை அறுவடை செய்வார்கள். அதனால் வருடம் முழுதும் இந்த புல் நமக்கு கிடைக்கும். முதலில் புல்லினை ஒருநாள் முழுக்க தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அப்போதுதான் அது இலகும். பின்னுவதற்கும் எளிதாக இருக்கும். கிட்டத்தட்ட பூ கட்ட நாறினை தண்ணீரில் நனைத்து கட்டுவது போல்தான் இந்த புல்லினை தண்ணீரில் நனைத்து பின்ன வேண்டும். இதனை பின்னுவதும் எளிது. புல்லைக் கொண்டு கூடையாக வடிவமைத்த பிறகு அது நன்கு காய்ந்ததும், இறுகிவிடும்.

எளிதில் அறுந்து போகாது. கத்திரிக்கோல் கொண்டுதான் அதனை வெட்ட முடியும். அவ்வளவு உறுதியாக இருக்கும். ஒரு கூடை சுமார் மூன்று வருடம் வரை உறுதியாக உழைக்கும். இது இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால், தண்ணீரில் கழுவி மீண்டும் பயன்படுத்தலாம். இதில் பலவிதமான பொருட்களை தயாரிக்கலாம். பெண்களுக்கு அழகான கைப்பைகள், காய்கறி கூடைகள், எண்ணெய் வைக்க டிரே, துணிகளை அலமாரியில் வைப்பதற்கான கூடைகள், கேப்கள், அழுக்கு துணிகளுக்காக பயன்படுத்தப்படும் பெரிய அளவு கூடைகள், கிஃப்ட் பொருட்கள், தண்ணீர் பாட்டில் கவர்கள், தாம்பூலப் பைகள் என பலவிதமான பொருட்களை இதில் தயாரிக்கலாம்.

இது கலை சார்ந்த பொருள் என்பதால், நம்முடைய கிரியேட்டிவிட்டி பொருத்து எந்தவிதமான பொருட்களையும் தயாரிக்கலாம். இதில் எம்பிராய்டரியும் செய்யலாம். மேலும் புற்களை சாயத் தண்ணீரில் நனைத்து நாம் விரும்பும் நிறங்களிலும் வடிவமைக்கலாம். மணப்பெண் மற்றும் மணமகன் பெயரினை எழுதி அதனை ரிட்டர்ன் கிஃப்ட்டாகவும் கொடுக்கலாம். தற்போது கூடை பின்னுவதற்கு மட்டுமே 50 பெண்களை நியமித்து இருக்கிறேன். மேலும் 20 கடைகளிலும் பெண்கள்தான் வேலை பார்க்கிறார்கள். ஒரு புல் கட்டினை ஒரு வருடம் வரை வைத்துக்கொள்ள முடியும்’’ என்றவர், இந்தத் தொழிலினை படிப்படியாக எவ்வாறு முன்னேற்றினார் என்பது குறித்து விவரித்தார்.

‘‘முதன் முதலில் 20 பைகளைதான் நான் தயாரித்தேன். அதை எவ்வாறு விற்பனை செய்வதுன்னு யோசித்த போது நெடுஞ்சாலையில்தான் என் பைகளை விற்பனைக்காக வைத்தேன். காலை முதல் மாலை வரை அந்தப் பக்கம் பல வண்டிகள் கடந்தது. ஆனால் ஒருவரும் ஒரு பை கூட வாங்க முன்வரவில்லை. எனக்கு என்ன செய்வதுன்னே தெரியல. அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அது என்னுடைய பொறுமைக்கு கடவுள் வைத்த டெஸ்ட்னுதான் சொல்லணும்.

இரவு ஒரு நான்கு ஐந்து பேர் வந்தாங்க. அவங்க அனைவரும் டாக்டர்கள். என்னுடைய அத்தனை பைகளையும் வாங்கிக் கொண்டாங்க. 5,300 ரூபாய் வருமானம் கிடைத்தது. அப்போது என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அது அழுகையாதான் வெளிப்பட்டது. அதன் பிறகு நெடுஞ்சாலைகளை டார்கெட் செய்தேன். அங்குள்ள பிரபல ஓட்டல்களில் ஒரு ஸ்டால் போல் அமைத்து என் பொருட்களை விற்பனைக்காக வைத்தேன்.

தற்போது இதுபோல் 20 கடைகள் உள்ளன. இதைத்தவிர சூளூர் ஏர்ஃபோர்ஸ் பயிற்சி மையத்திலும் எங்க கடை உள்ளது. மேலும் தனிப்பட்ட ஷோரூமும் அமைத்திருக்கிறோம். ஆன்லைனிலும் இருப்பதால், அதன் மூலமாகவும் ஆர்டர் கொடுக்கலாம். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைசும் செய்து தருகிறோம். மலேசியா, லண்டன், துபாய் போன்ற இடங்களில் இருந்தும் ஆர்டர் செய்கிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்க கூடைகளை வடிவமைத்து தருகிறோம்.

இந்தத் தொழில்தான் என்னையும் என் குடும்பத்தையும் வாழ வைத்திருக்கிறது. கடனில் இருந்து மீண்டு தற்போது நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். மேலும் இந்தத் தொழிலை பெரிய அளவில் கொண்டு வர வேண்டும். பல பெண்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும்.

அவர்களையும் சிறு தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும். அதாவது, அவர்களுக்கு எங்களின் பொருட்களை மொத்த விற்பனையில் கொடுத்து, அவர்கள் அதனை ரீசேல் முறையில் லாபம் வைத்து விற்பனை செய்து கொள்ளலாம். இதன் மூலம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் பல நாடுகளிலும் இந்தக் கூடையினை விற்பனை செய்து பெண்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரமுடியும்’’ என்றார் ஜன்னத் நிஷா துரை.

தொகுப்பு: ஷன்மதி

The post வாழ்க்கையை மாற்றி அமைத்த கடற்புல் கூடைகள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED தொழிலதிபரான பள்ளி மாணவி!