×

கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு கர்ப்பிணிகளுக்கு கருகலைப்பு செய்த போலி டாக்டர் கைது

கள்ளக்குறிச்சி, நவ. 30: கள்ளக்குறிச்சி அருகே கர்ப்பிணிகளுக்கு கருகலைப்பு செய்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். மேலும் கருகலைப்பு மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அருகே இந்திலி மேற்கு காட்டுக்கொட்டாய் முயல்குன்று பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(43). இவர் சட்டவிரோதமாக கருகலைப்பு செய்வதாக வந்த தகவலின்படி பாலின தேர்வை தடை செய்தல் சட்ட கண்காணிப்பு குழு டிஎஸ்பி சரவணகுமார் தலைமையில் கள்ளக்குறிச்சி சுகாதார பணிகள் இணை இயக்குநர் ராமு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் நிர்வாக அலுவலர் கமலக்கண்ணன், சின்னசேலம் போலீசார் நேற்று முருகேசன் வீட்டிற்குள் சோதனை நடத்தினர். அப்போது 10ம் வகுப்பு வரை படித்துள்ள முருகேசன் கர்ப்பிணிகளுக்கு ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை மேற்கொண்டது தெரிந்தது. அப்போது அதிகாரிகள் வருவதை பார்த்ததும் கர்ப்பிணிகள் தப்பியோடிவிட்டனர்.

பின்னர் முருகேசனை கைது செய்து வீட்டில் ஆய்வு செய்து பரிசோதனை கருவி, கை உறை, கருகலைப்பிற்கு பயன்படுத்தக்கூடிய மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து முருகேசனுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான வீட்டுக்கு (கருகலைப்பு மையம்) சீல் வைத்தனர். மேலும் அவரது 2 கார், பைக், மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு கொடுத்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முருகேசன் மீது ஏற்கனவே கருகலைப்பு செய்த விவகாரத்தில் சின்னசேலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது 4வது வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு கர்ப்பிணிகளுக்கு கருகலைப்பு செய்த போலி டாக்டர் கைது appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,
× RELATED பல்வேறு ரயில் நிலைய தண்டவாளங்களில் கிடந்த மனித உறுப்புகள்