×

திண்டுக்கல்லில் மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல், நவ. 29: திண்டுக்கல்லில் கலெக்டர் அலுவலகம் அருகில், ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரி மாணவிகள் விடுதியை கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெண்கள் கல்வியை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்கள் உயர் கல்வி பெறுவதற்கான வழிவகை, வசதிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

வெளியூரிலிருந்து கல்லுாரிகளுக்கு வந்து செல்லும் மாணவிகளின் போக்குவரத்து சிரமத்தை தவிர்க்கும் வகையில் அவர்கள் தங்கி படிப்பதற்கு விடுதி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, திண்டுக்கல்லில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் கல்லுாரி மாணவிகள் விடுதியை கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார். இங்கு 120 மாணவிகள் தங்கி உயர்கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு தண்ணீர், உணவு வசதி, படுக்கை அறை, கட்டில், பெட் சீட், கழிவறை வசதி, படிப்பதற்கு காற்றோட்டமான அறை போன்ற வசதிகள் குறித்தும், காலை, மதியம், இரவு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். விடுதி கட்டடம், சமையலறை, சுகாதார வசதிகள், குளியலறை வசதிகள் குறித்தும் மாணவிகளிடம் கேட்டறிந்தார். மேலும் கட்டடங்களில் உள்ள சிறுசிறு பழுதுகளை சரிசெய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் முருகேஸ்வரி உடனிருந்தனர்.

The post திண்டுக்கல்லில் மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Adi Dravidar Welfare Department ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை